பெரம்பலூர், மே 5-அனைத்து வியாபாரிகள் சங்க கூட்டமைப்பான மாவட்ட வணிகர் நலச்சங்கம் சார்பில் 36-வது வணிகர் தின விழா மற்றும் 2-வது மாவட்ட மாநாடு பெரம்பலூரில் ஞாயிறன்று நடைபெற்றது. மாநாட்டிற்கு மாவட்டத் தலைவர் சத்யா நடராஜன் தலைமை வகித்தார். மாவட்ட பொதுச்செயலாளர் நல்லதம்பி வரவேற்றார். மாவட்ட அவைத்தலைவர் முகம்மது ரபீக் முன்னிலை வகித்தார். பொருளாளர் விநாயகா ரவிச்சந்திரன் தீர்மானங்கள் வாசித்தார். தனலட்சுமி சீனிவாசன் குழுமத்தின் நிறுவனத் தலைவர் சீனிவாசன், செயலாளர் நீலராஜ், சங்க கவுரவத் தலைவர் அஸ்வின்ஸ் கே.ஆர்.வி.கணேசன், நகைக் கடை உரிமையாளர் சங்க மாவட்டத் தலைவர் அரசிராஜசேகரன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட துணைச் செயலாளர் சண்முகம் நன்றி கூறினார்.கூட்டத்தில், சென்னையில் இருந்தும், நாகர்கோவில், மதுரை பகுதிகளில் இருந்தும் பெரம்பலூர் வழியாக இருதிசைகளிலும், அடிக்கடி இயக்கப்படும் தொலைதூர அரசு பேருந்துகள் நின்று செல்லும் வகையில் துறைமங்கலம் நான்கு சாலை அருகே கூடுதல் பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.வேப்பந்தட்டை தாலுகா மலையாளப்பட்டி அருகே பச்சைமலையில் சின்னமுட்டுலு பகுதியில் கல்லாற்றின் குறுக்கே ரூ.100 கோடி செலவில் அணைக்கட்டும் திட்டத்தை விரைவாக நிறைவேற்ற வேண்டும். ஏற்கனவே நடைமுறையில் இருந்தபடி 3 மாதத்திற்கு ஒருமுறை வணிகர்கள் குறைதீர் கூட்டத்தை தமிழக அரசு நடத்திட வேண்டும் உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.