tamilnadu

அடிப்படை பணிகள் முழுமை பெறாத நிலையில் திருவாரூர் புதிய பேருந்து நிலையம் திறப்பு மக்கள் பரிதவிப்பு

திருவாரூர் ஏப்.23- திருவாரூரில் நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பிற்கு முன்பாக தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி மூலம் தஞ்சை சாலை விளமல் அருகே புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இது திறக்கப்பட்ட நாளிலிருந்து மக்களுக்கு முறையான அறிவிப்புகளும், வழிகாட்டுதலும் இல்லாமல் தவித்து வந்தனர். பேருந்து நிலையமும் முழுமையான செயல்பாட்டிற்கு வராமல் இருந்தது. இந்த நிலையில் ஏப்.23 புதிய பேருந்து நிலையத்தில் மட்டுமே அனைத்து பேருந்துகளும் செயல்பட வேண்டும் என்று நகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் காரணமாக அனைத்து பேருந்துகளும் புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட துவங்கியுள்ளது. புதிய பேருந்து நிலையத்தில் அடிப்படை வசதிகளுக்கான பணிகள் இன்னும் முழுமை பெறவில்லை. பேருந்து நிலைய வணிக போட்டிக்கிடையே சிக்கிக் கொண்டு மக்கள் தடுமாறுகின்றனர். இரண்டு பேருந்து நிலையங்களும் இடையே அலைக்கழிக்கப்பட்ட மக்கள் தற்போது நிலையான அறிவிப்புகள் இல்லாத நிலையில் தடுமாற்றத்திற்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக பெண்கள், வயோதியர்கள் பழைய பேருந்து நிலையத்திலிருந்து எப்படி செல்வது என்று தவித்து வருகின்றனர். நகராட்சி நிர்வாகமும், போக்குவரத்துத்துறையும் இணைந்து குறிப்பிட்ட நாள் வரை மக்களுக்கு வழிகாட்ட வேண்டும். ஒலிபெருக்கிகள் மூலமாக விளம்பரங்களைச் செய்ய வேண்டும். பழைய பேருந்து நிலையத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்திற்குச் செல்வதற்கு போக்குவரத்து வசதி இல்லாமல் பயணிகள் திண்டாடுகின்றனர். எனவே மினி பேருந்துகள், நகர பேருந்துகளை இங்கிருந்து கூடுதலாக இயக்க வேண்டும். மக்களின் வசதிக்காக இதனை செய்து கொடுப்பது மிகவும் வசதியாக இருக்கும். புதிய பேருந்து நிலையத்திலும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அனைத்து வசதிகளையும் விரைவாக ஏற்படுத்தி தந்து புதிய பேருந்து நிலைய செயல்பாட்டை மேம்படுத்திட வேண்டும் என அனைவரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.