tamilnadu

img

5,000 ஏரிகள் மாயம் : சிபிஐ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வேதனை

நாகர்கோவில்:
தமிழகத்தில் 4 ஆயிரம் ஏரிகள் மாயமாகி விட்டன என சிபிஐ மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு வேதனையுடன் கூறினார்.

சிபிஐ மூத்த தலைவர் நல்லக்கண்ணு வியாழனன்று நாகர்கோவிலில் செய்தி யாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், “மேகதாதுவில் அணை கட்டியே தீருவோம் என்று கர்நாடக அரசு கூறுவது காவிரி ஆணையத்துக்கு எதிரானது. இரு மாநிலங்களும் ஒப்புக் கொண்டால் மட்டுமே அணை கட்ட வேண்டுமென்று பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்திலேயே மரபு உள்ளது. ஆணையம் வந்த பிறகும் கர்நாடக அரசு தன்னிச்சையாக அணை கட்டுவோம் என்று கூறுவது தவறு. அதற்கு மத்திய அரசும் ஒப்புக்கொள்வது தமிழகத்திற்கு செய்யப்படும் துரோகம். இதை எதிர்த்து எல்லா எதிர்க்கட்சிகளும் போராட வேண்டும்.

டெல்டா பாசனத்திற்காக ஜூன் 12ஆம் தேதியன்று மேட்டூர் அணை திறக்கப்பட வேண்டும். ஆனால் அதைப்பற்றி தமிழக அரசு கவலைப்படவில்லை.கூடங்குளம் அணு உலை கழிவை அங்கேயே புதைப்பது ஆபத்தானது. இந்த போக்கை கைவிட வேண்டும். இதுபற்றி மக்களுக்கு கருத்து சொல்ல கூட அரசு நெருக்கடி கொடுக்கிறது.தமிழகம் முழுவதும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னையில் குடிநீர் பற்றாக்குறையால் மக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். மாதம் குடி நீருக்காக மட்டும் ரூ.3,000 செலவு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.

தமிழகத்தில் சுமார் 37,500 ஏரிகள் இருந்தன. அதில் தற்போது சுமார் 5,000 ஏரிகள் மாயமாகிவிட்டன. ஆறுகள், குளங்களை பாதுகாக்க அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இதன் விளைவாக நிலத்தடி நீர்மட்டம் குறைந்துவருகிறது. ஆற்றுப்படுகையில் மணல் கொள்ளையடிக்கப் படுகிறது. இயற்கை வளங்களும் அழிக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் தண்ணீர் என்பதே வியாபாரமாகிவிட்டது.
ஸ்டெர்லைட் விவகாரம் தொடர்பாக குறும்படம் வெளியிட்ட முகிலன் காணாமல் போய் 100 நாட்களுக்கு மேலாகிவிட் டது. அவர் உயிருடன் இருப்பதாக கூறுகிறார்கள். ஆனால் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. அவரை உயிருடன் கொண்டுவர காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.தமிழக அரசு திறம்பட நிர்வாகம் செய்வதில்லை. எட்டுவழிச்சாலை, ஸ்டெர்லைட் விவகாரங்களில் மக்களுக்கு எதிராகவே அரசு செயல்படுகிறது. ஆட்சியாளர்கள் ஆட்சியை காப்பாற்றிக்கொள்ள நினைக்கிறார்களே தவிர மக்களை பற்றி அவர்களுக்கு அக்கறையில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.