அவிநாசி ஒன்றியத்திற்குட்பட்ட பழங்கரை ஊராட்சியில் ஏழாயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அவிநாசி ஒன்றியத்தில் 17 ஆயிரம் வாக்காளர் கொண்ட ஊராட்சியாகவும் உள்ளது. இந்த ஊராட்சியில் போதுமான துப்புரவு தொழிலாளர்கள், நிரந்தரமான ஊராட்சி செயலாளர், போதிய தெருவிளக்குகள் மற்றும் போதுமான குடிநீர் இல்லை. இந்நிலையில் சாலைகள், சாக்கடை தற்போது பழுதடைந்த நிலையில் உள்ளது. சுகாதார நிலையம் சரியான நேரத்தில் இயங்குவதில்லை என பல்வேறு அவலங்கள் நிறைந்தாக பழங்கரை ஊராட்சி தற்போது மாறியுள்ளது.இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பழங்கரை ஊராட்சியின் தலைவராக 10 ஆண்டு காலம் சிறப்புடன் செயல்பட்ட எம்.பழனிசாமிகூறுகையில், 1996ஆம் ஆண்டு பழங்கரை ஊராட்சிக்கு நடந்த தேர்தலில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஊராட்சி தலைவருக்காக போட்டியிட்டு வெற்றி பெற்றேன். 1996- 2006 ஆம் ஆண்டுகளில் பழங்கரை ஊராட்சி வளர்ச்சிக்காக பல்வேறு தொழிற்சாலைகள், பனியன் நிறுவனங்கள், கல்லூரிகள் உள்ளிட்டவை கொண்டு வரப்பட்டன. குடிநீர் தேவைக்காக 40க்கும் மேற்பட்ட ஆழ்துளை கிணறுகள் போடப்பட்டன. குடிநீர் மேல்நிலை தேக்கத் தொட்டி கட்டப்பட்டன. மேலும், இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக மூன்று லட்சத்து இருபதாயிரம் லிட்டர் தண்ணீர் தினந்தோறும் வழங்க வேண்டும் என கோரிக்கையின் அடிப்படையில் இன்று வரை வழங்கப்பட்டது. இந்நிலையில் பழங்கரை ஊராட்சியை பேரூராட்சியாக மாற்றுவதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கோரிக்கை வைத்தோம். அப்போதைய மக்கள்தொகை 5 ஆயிரத்திலிருந்து 12 ஆயிரம் வரை இருந்தது. தற்போது 17 ஆயிரமாக உயர்ந்திருக்கிறது. ஆனால் மக்கள்தொகைக்கு ஏற்ப குடிநீரின் அளவு உயர்த்தப்படவில்லை. தற்போது கோடைகாலம் என்பதால் குடிநீருக்காக பொதுமக்கள் கடும்சிரமத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளனர். 2006ஆம் ஆண்டு தேமுதிக சார்பில் செந்தில் போட்டியிட்டு வென்றவர். இவர் ஊழல்குற்றச்சாட்டில் சிக்கி கொண்டகாரணத்தால், அதிமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். ஊழலில் சிக்கிய ஊராட்சி மன்ற தலைவர் செந்தில் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனுகொடுக்கப்பட்டது. ஊழலின் காரணமாகத்தான் இந்த ஊராட்சி பின்னோக்கி சென்று இருக்கிறது. பழங்கரை ஊராட்சி தண்ணீருக்காக விருது பெற்று இருக்கிறது. 1996-2006 ஆம் ஆண்டுகளில் பழங்கரை ஊராட்சியிலுள்ள 12 வார்டுகளில்தூய்மையாக பராமரித்த காரணமாகத்தான் ஜனாதிபதி விருது வழங்கப்பட்டது. தற்போது திருவள்ளுவர் அரசு பள்ளி அருகில் குப்பை மேடாக காட்சி அளிக்கின்றது. இதனால் குழந்தைகளுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் அவினாசிலிங்கம் பாளையத்திலிருந்து தேவம்பாளையம் வரை உள்ள சாலை மிகவும் பழுதடைந்துள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள் மற்றும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி உள்ளனர். பெரியாயிபாளையத்தில் போதிய தெருவிளக்குகள் இல்லை, இருப்பதும் சரிவர எரிவதில்லை. வேலூர் கிராமப்பகுதியில் தரைமட்ட குடிநீர் தொட்டி பாதுகாப்பற்ற நிலையில் உள்ளது. தண்ணீர் பந்தல் காலனியில் பெண்கள் கழிப்பிடம் சுகாதாரமற்ற, முறையான பராமரிப்பின்றி உள்ளது. மேலும் நிரந்தரமான ஊராட்சி செயலாளர் நியமனம் செய்ய வேண்டும். மாவட்டஆட்சியர் தலையீடு செய்து ஊராட்சி நிர்வாகத்தை சரிசெய்யவேண்டுமென மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் கேட்டுக்கொண்டுள்ளார். -அவிநாசி அருண்