பாகிஸ்தானில் தொடர்ந்து பெய்துவரும் மழையால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 200-ஐ கடந்துவிட்டதாக பாகிஸ்தான் பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானில் கடந்த மாத இறுதியில் இருந்தே பருவமழை பெய்து வருகிறது. கடந்த ஒரு வாரத்தில் பாகிஸ்தானின் கிழக்கு, வடமேற்குப் பகுதியில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அங்குள்ள பஞ்சாப், சிந்து, பலூசிஸ்தான் உள்ளிட்ட பகுதிகள் மழையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படுவது, வீடு இடிந்து விழுவது, மின்னல் தாக்குவது என மழையால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன. ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி 203 பேர் உயிரிழந்துவிட்டனர். 454 பேர் காயமடைந்துள்ளனர். அதிகபட்சமாக பஞ்சாப் மாகாணத்தில் 123 உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன.
200க்கும் மேற்பட்ட ஆடு, மாடு உள்ளிட்ட கால்நடைகளும் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தன. தாழ்வான பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. பல இடங்களில் போக்குவரத்தும், மின்சாரமும் துண்டிக்கப்பட்டுள்ளது.
பஞ்சாப் மாகாணத்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் தேவையில்லாமல் வெளியே வர வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிந்து, தெற்கு பஞ்சாப், வடகிழக்கு பலூசிஸ்தான், தலைநகர் இஸ்லாமாபாத் உள்ளிட்ட இடங்களில் அடுத்த சில நாள்களுக்கு காற்றுடன் கூடிய அதி பலத்த மழை பெய்யும் என வானிலை மையம் கணித்துள்ளது. எனவே, மழையால் பாதிப்புகள் மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.