world

img

தீக்கதிர் உலக செய்திகள்

எந்த கப்பலுக்கும் அனுமதியில்லை : ஈரான் திட்டவட்ட அறிவிப்பு

ஹார்முஸ் நீரிணை வழியாக எண்ணெய் வர்த்தகத்தை அனுமதிக்க மாட்டோம் என்று ஈரானின் மூத்த ராணுவ ஆலோசகர் இப்ராஹிம் ஜப்பாரி திட்டவட்டமாக அறிவித்துள்ளார். ஹார்முஸ் நீரிணை வழியாகச் செல்லும் எந்தவொரு எண்ணெய்க் கப்பலும் ஈரான் ராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகும். அப்பகுதியில் உள்ள எண்ணெய்க் குழாய்களும் ஈரானின் தாக்குதலுக்கு உள்ளாகும். அமெ ரிக்கா மேற்கு ஆசிய நாடுகளின் எண்ணெய்யைச் சார்ந்தே உள்ளது. அவர்களுக்கு ஒரு சொட்டு எண்ணெய் கூட வழங்கப்படாது என்பதை அவர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் எனவும் அவர் அறிவித்துள்ளார்.

இரண்டாம் உலகப்போருக்கு பிறகு அதிகப் போர்களை சந்திக்கின்றோம்

 இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு தற்போதுதான் உலகம் மிக அதிக போர்களை சந்திக்கிறது என ஐ.நா பாதுகாப்பு அவையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ஆண்டுகள் இல்லாத அளவு பொதுமக்கள்  படுகொலைகளையும் சந்தித்து வருகிறது. உலகில் ஐந்தில் ஒரு குழந்தை (சுமார் 47.3 கோடி பேர்) போர்நடை பெறும் பகுதிகளில் வசிக்கின்றனர். குழந்தைகளுக்கு எதிரான கடுமையான வன்முறைச் சம்பவங்கள் 2023-24-க்கு இடையில் 25 சதவீதம் அதிகரித்துள்ளன. பாலியல் வன்முறை வழக்குகள் 35 சதவீதம் அதிகரித்துள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெற்கு சூடானில் 169 பேர் படுகொலை  

தெற்கு சூடானில் உள்நாட்டுப் போரும்  வன்முறையும்  மீண்டும் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. அந் நாட்டின் வடக்குப்பகுதியில் பெண்கள், குழந்தைகள் முதியவர்கள் என 169 பேர் படுகொலை செய்யப்பட்டு ஒரே குழியில் புதைக்கப்பட்டு விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தாக்குதலைத் தொடர்ந்து ஆயிரக்கணக்கான மக்கள் மீண்டும் தங்களது இடத்தை விட்டு கட்டாயமாக இடம்பெயர வேண்டிய சூழலுக்குதள்ளப்பட்டுள்ளனர்.  சுமார் 1,000 பொதுமக்கள் அந்தப் பகுதியில் உள்ள ஐ.நா வளாகத்தில் தஞ்சமடைந்துள்ளதாக ஐ.நா அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 சிறை நெரிசலைக் குறைக்க கைதிகளுக்கு பொது மன்னிப்பு

 ஜிம்பாப்வே சிறைச்சாலைகளில் நிலவும் இட நெருக்கடியைச் சமாளிக்க, அந்நாட்டு ஜனாதிபதி எம்மர் சன் நங்காக்வா பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். இதன்படி 223 பெண்கள் உட்பட மொத்தம் 4,305 கைதிகள்  விடுவிக்கப்படுவார்கள் என கூறப்பட்டுள்ளது. 2025 இரண்டாம் காலாண்டு தரவுகளின்படி, ஜிம்பாப்வே சிறைகளில் 24,000-க்கும் அதிகமான கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இது சிறைகளில் உள்ள இடத்தின் அளவை விட மிக அதிகம் என கூறப்படுகிறது. நன்னடத்தையின் அடிப்படையில் விடுதலை யில் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வளைகுடா நாடுகளிலிருந்து அமெரிக்கர்கள் வெளியேற உத்தரவு

15 வளைகுடா நாடுகளில் இருந்து அமெரிக்கர்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. அமெரிக்க தூதரக விவகாரங்களுக்கான உதவிச் செயலாளர் மோரா நம்தார் தனது சமூக ஊடகப் பதிவில், நாடுகளின் பட்டியலை குறிப்பிட்டு அங்குள்ள அமெரிக்கர்கள் வெளியேற வேண்டும் என கூறியுள்ளார். அமெரிக்கா-இஸ்ரேல் தூண்டிய போரின் காரணமாக இதுவரை மேற்கு ஆசியாவில் உள்ள  7 முக்கிய விமான நிலையங்களில் 3,400-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் லட்சக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சொல்வதைச் செய் : மிரட்டும் டிரம்ப்!

கராகஸ், மார்ச் 3- வெனிசுலா ஜனாதிபதி மற்றும் அவரது மனைவியை அமெ ரிக்கா கடத்தியுள்ளது. இந்நிலையில் அந்நாட்டை தனக்குச் சாதகமாகப் பயன்படுத்த தாங்கள் சொல்வதை கேட்க வேண்டும். எங்களுக்கு ஏற்ற சட்டங்களை கொண்டு வர வேண்டும். இல்லை என்றால் மீண்டும் உங்கள் நாட்டில் குண்டு வீசுவோம் என போர் வெறியர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.  பிப்ரவரி 19 அன்று வெனிசுலா நாடாளுமன்றம் சிறையில் உள்ள அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான பொது மன்னிப்புச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தது.   அமெரிக்காவின் மிரட்டல்  வெனிசுலா மீது குண்டு வீசி அந்நாட்டின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ, அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகிய இருவரையும் 2026 ஜனவரி மாதம் அமெரிக்க ராணுவம் கடத்திச் சென்று சிறை வைத்துள்ளது.  அவர்களை  விடுவிக்க வேண்டும் என வெனிசுலா இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் தலைமையிலான அரசு தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகிறது. இந்த சூழலை பயன்படுத்தி  டிரம்ப் நிர்வாகம் வெனிசுலா அரசை மிரட்டி அவர்களுடன் சில ஒப்பந்தங்களைச் செய்து வருகிறது.  குறிப்பாக எண்ணெய் உற்பத்தி துறையில்  அமெரிக்க நிறுவனங்களின் பங்குகளை அதிகரிக்க அனுமதிப்பது,  கியூபா உள்ளிட்ட ஏகாதிபத்திய எதிர்ப்பு நாடுகளுக்கு எண்ணெய் ஏற்றுமதிக்கு தடை விதிப்பது என எரிசக்தி துறையில் மாற்றம் கொண்டு வருவதற்காக ஹைட்ரோ கார்பன் சட்டத் திருத்தத்தை கொண்டு வந்தது. அதன் பின் சிறையில் உள்ள, அரசுக்கு எதிராக போராடியவர்கள் மற்றும் அரசியல் கைதிகளை விடுவிக்க பொது மன்னிப்புச் சட்டத்தையும் கொண்டு வந்துள்ளது வெனிசுலா.  தாங்கள் சொல்லும் விஷயங்களில் உடன்படாவிட்டால் மீண்டும் வெனிசுலா மீது குண்டு வீசுவோம் என டிரம்ப் நிர்வாகம் வெளிப்படையாக மிரட்டல் விடுத்ததன் பின்னணியில் தான் இத்தகைய சட்டங்கள் நிறைவேற்றப்படுவதாகவும் தெரிவிக்கப் பட்டுள்ளது. முக்கிய அம்சங்கள்  அந்நாட்டு நாடாளுமன்ற சிறப்புக் குழுவின்படி, இந்த பொது மன்னிப்புச் சட்டம் அங்கீகரிக்கப்பட்டதிலிருந்து சிறையில் இருந்த நூற்றுக்கணக்கானோர் விடுவிக்கப்பட்டுள்ளனர். மேலும்  4,293 பொது மன்னிப்புக் கோரிக்கைகள் வந்துள் ளன. ஏற்கெனவே பரோலில் இருந்த சுமார் 3,000 பேருக்கு இந்த சட்டத்தின் படி விடுதலை வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. கடந்த காலத்தில் அரசுக்கு எதிராகச் செயல்பட்டு கைதுக்கு பயந்து வெளிநாட்டுக்கு தப்பியோடியவர்களும் வக்கீல்கள் மூலம் இச்சட்டத்தின் கீழ் பொது மன்னிப்புக் கோரி விண்ணப்பிக் கலாம். எனினும்  சம்பந்தப்பட்ட நபர் நேரில் ஆஜராக வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. 2002 ஏப்ரல் மாதம் வெனிசுலாவில் நடந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சியின் போது சட்டம் ஒழுங்கை சீர்குலைத்த வர்கள், அரசியல் போராட்டங்களின் போது பொது மற்றும் தனியார் சொத்துக்களுக்குச் சேதம் ஏற்படுத்தியவர்கள், அரசுக்கு எதிராக செயல்பட்டதால் சட்ட நடவடிக்கைகளுக்கு உள்ளாகி  வேலையிழந்த அரசு அதிகாரிகள் மீண்டும் பணியில் சேரவும் இந்தச் சட்டம் வழிவகை செய்கிறது.  கடந்த கால குற்றங்களை முழுமையாக நிறுத்தியவர்களுக்கு மட்டுமே இந்தச் சட்டம் பொருந்தும். யாருக்கு மன்னிப்புக் கிடையாது? இந்தச் சட்டம் சில முக்கிய கட்டுப்பாடுகளையும் கொண்டுள் ளது. மனித உரிமை மீறல்கள், போர்க்குற்றங்கள் மற்றும்  மனிதநேயத்திற்கு எதிரான குற்றங்கள், கொலை, போதைப் பொருள் கடத்தல், ஊழல், வெனிசுலாவின் இறையாண்மை க்கு எதிராக ஆயுதக் குழுக்களை தாக்குதல் நடத்த தூண்டி  விட்டவர்கள் அல்லது நிதி உதவி செய்தவர்கள், வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளைத் தூண்டியவர்கள், நாட்டின் மீது விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை ஆதரித்து வரவேற்ற வர்கள் என வெனிசுலாவிற்கு துரோகம் செய்தவர்களுக்கு இச்சட்டத்தின் அடிப்படையில் பொது மன்னிப்பு இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.