articles

img

தெலுங்கானாவில் ஏழைகளின் வீடுகளை இடித்துவிட்டு கேரளத்திற்கு பாடம் எடுப்பதா?

தெலுங்கானாவில் ஏழைகளின் வீடுகளை இடித்துவிட்டு கேரளத்திற்கு பாடம் எடுப்பதா?

கோழிக்கோடு, ஏப்.5- கேரளத்திற்கு வருகை தந்து மாநிலத்தை அவமதிக்கும் வகையில் பேசிய தெலுங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டிக்கு கேரள முதல மைச்சர் பினராயி விஜயன் கடும் கண்டனம் தெரி வித்துள்ளார். தனது சொந்த மாநிலத்தில் ஏழை களின் வீடுகள் மீது புல்டோசர்களை ஏற்றித் தகர்ப்பதை மறைத்துவிட்டு, கேரளத்திற்கு சமூக முன்னேற்றம் குறித்து பாடம் எடுக்க அவர் முயல்வ தாக பினராயி விஜயன் சாடியுள்ளார். சமீபத்தில் கேரளத்தில் ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) வேட்பாளர்களை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த ரேவந்த் ரெட்டி, கேரள அரசின் நிர்வாகம் குறித்தும், ஒன்றிய அரசுடன் ரகசிய உடன்பாடு வைத்திருப்பதாகவும் உண்மைக்குப் புறம்பான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இதற்குப் பதிலடி கொடுத்து முதலமைச்சர் பினராயி விஜயன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு: சீர்குலைப்பவர்களின் முகவர் கேரளம் நிலையான மற்றும் உள்ளடக்கிய வளர்ச்சியை நோக்கி முன்னேறி வரும் வேளை யில், அதனைச் சீர்குலைக்க நினைப்பவர்களின் முகவராக ரேவந்த் ரெட்டி மாறியுள்ளார். கேர ளத்தில் ஊழல் நிலவுவதாகப் புலம்புபவர்கள் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களைப் பார்க்க வேண்டும். இந்தியாவிலேயே ஊழல் மிகக் குறைந்த மாநிலம் கேரளம் என்பது அவருக்குத் தெரியவில்லையா? நிதி ஆயோக்கின் நிலையான வளர்ச்சிக் குறியீட்டில் (2023-24), கேரளம் 79 புள்ளிகளுடன் நாட்டின் முதலிடத்தில் உள்ளது. ஆனால் தெலுங்கானா ஆறாவது இடத்தில்தான் உள்ளது. தனது பலவீனங்களை மறைத்துக்கொண்டு கேரள மக்களையும் மாநிலத்தையும் ரேவந்த் ரெட்டி இழிவுபடுத்துகிறார். வறுமை ஒழிப்பில் கேரளம் முதன்மை நிதி ஆயோக் தரவுகளின்படி, கேரளத்தின் வறுமை விகிதம் வெறும் 0.55% மட்டுமே. இது  தேசத்திலேயே மிகக்குறைவு. 2025ஆம் ஆண்டின் இறுதிக்குள் அதீத வறுமையை முழுமை யாக ஒழித்த முதல் மாநிலமாக கேரளம் உருவெடுத் துள்ளது. ஆனால் தெலுங்கானாவில் வறுமை விகிதம் 5.88% ஆக உள்ளது. அங்குள்ள அரசாங் கம் ஏழைகளை மேம்படுத்த விரும்பவில்லையா? கேரளத்தில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு மறை முகமாக உதவுவதற்காகப் பல கோடி ரூபாயை அரசியல் விளம்பரங்களுக்குச் செலவிடும் ரேவந்த் ரெட்டி, அந்தப் பணத்தைக் கொண்டு தனது மாநிலத்தில் வறுமையை ஒழிக்கவும் கல்வி  விகிதத்தை உயர்த்தவும் பாடுபடலாம். கேரளத்தின் கல்வியறிவு 95.3% ஆக இருக்கும் நிலையில், தெலுங்கானா இன்னும் 76.9% இலேயே தவிக்கிறது. சுகாதார சாதனைகள் கேரளத்தின் குழந்தை இறப்பு விகிதம் (IMR) ஆயிரத்திற்கு 5 ஆகக் குறைந்துள்ளது. வல்லரசு நாடான அமெரிக்காவில் கூட இது 5.6 ஆக உள்ளது. தெலுங்கானாவில் இந்த விகிதம் கேரளத்தை விட நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. கேரளத்தின் வலுவான சுகாதாரக் கட்ட மைப்பால், ஒரு சராசரி மலையாளி சராசரி இந்திய ரை விட 5 முதல் 7 ஆண்டுகள் கூடுதல் காலம் வாழ்கிறார். கடந்த செப்டம்பர் 16, 2025 அன்று, தெலுங்கானா அரசின் உயர்மட்ட அதிகாரிகள் கேரளத்தின் ‘என் நிலம்’ (Ente Bhoomi) டிஜிட்டல் நிலப் பதிவு முறையைப் படிக்க திருவனந்தபுரம் வந்திருந்தனர். தனது சொந்த நிர்வாகம் எந்த அரசைப் பின்பற்ற விரும்புகிறதோ, அதே அரசை ஒரு முதலமைச்சர் இழிவுபடுத்துவது சரியல்ல. பாடம் கற்க வேண்டியது  ரேவந்த் ரெட்டிதான் சம்பளம் மற்றும் ஓய்வூதியம் வழங்கக்கூடத் தாமதமாகும் ஒரு அரசாங்கத்தை நடத்தும் ரேவந்த் ரெட்டி, கேரளத்திற்குப் பாடம் எடுக்கத் தேவையில்லை. கருவூலங்கள் மூடப்பட்டு, நலத்திட்ட ஓய்வூதியங்கள் நிலுவையில் இருந்த ஐக்கிய ஜனநாயக முன்னணி (யுடிஎப்) ஆட்சிக் காலம் கேரளத்தில் மலையேறிவிட்டது. சிறந்த நிர்வாகத்தைப் பற்றி ரேவந்த் ரெட்டிதான் கேரளத்தைப் பார்த்துப் பாடம் கற்க வேண்டும். பொதுநலத் திட்டங்களின் மாதிரிகளைப் படிக்க அவரை கேரளத்திற்கு வரவேற்கிறோம்.