மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கு குற்றவாளிகள் 12 பேரை விடுதலை செய்து மும்பை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2006 ஆம் ஆண்டு மும்பையில் நிகழ்ந்த தொடர் ரயில் குண்டுவெடிப்பில் 186 பேர் கொல்லப்பட்டனர்; 800 பேர் காயமடைந்தனர். இந்த வழக்கின் விசாரணை 8 ஆண்டுகளாக நடைபெற்று வந்த நிலையில், மகாராஷ்டிரா ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கட்டுப்பாட்டுச் சட்டம் (MCOCA) கீழ் அமைக்கப்பட்ட சிறப்பு நீதிமன்றம் கடந்த 2015-ஆம் ஆண்டு, குற்றவாளிகள் கமல் அன்சாரி, பைசல் ஷேக், எஸ்தேஷாம் சித்திக், நவீத் கான் மற்றும் ஆசிப் பஷீர் கான் ஆகிய 5 பேருக்கு மரண தண்டனையும், முகமது அலி, முகமது சாஜித் அன்சாரி, மஜித் ஷாஃபி, டாக்டர் தன்வீர் அன்சாரி, முஸாமில் ஷேக், ஜமீர் ஷேக் மற்றும் சோஹைல் ஷேக் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதித்து உத்தரவிட்டது.
கீழமை நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை உயர்நீதிமன்ற நீதிபதிகள் அனில் கிலோர் மற்றும் நீதிபதி ஷியாம் சந்தக் அமர்வு விசாரித்து வந்தது.
இவ்வழக்கில் 12 குற்றவாளிகளை மும்பை உயர்நீதிமன்றம் இன்று விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும், குற்றத்தை நிரூபிக்க அரசு தரப்பு முற்றிலும் தவறிவிட்டதாக மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.