tamilnadu

img

உடுமலை வனத்துறை அலுவலகத்தில் பழங்குடியினர் மரணம் - உரிய விசாரணை வேண்டும்!

திருப்பூர் மாவட்டம் உடுமலை வனச்சரகத்திற்கு உட்பட்ட வனத்துறை அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பழங்குடியினர் மாரிமுத்து(45) சந்தேகத்திற்குரிய வகையில் உயிரிழந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது
தமிழக-கேரள எல்லையில் உள்ள கேரள மாநில சோதனைச் சாவடியில் புதனன்று வாகன சோதனையின் போது, மேல் குருமலை செட்டில்மெண்ட் பகுதியைச் சேர்ந்த மாரிமுத்துவிடம் புலியின் பல் போன்ற பொருள் இருந்ததாக கூறி கேரள கலால் துறையினர் அவரை கைது செய்தனர். 
பின்னர், அவர் தமிழக வனத்துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு, உடுமலைப்பேட்டை வனச்சரக அலுவலகத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். 
இன்று காலை, மாரிமுத்து வனச்சரக அலுவலகத்தின் ஓய்வு அறையில் உள்ள கழிவறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக வனத்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவம் குறித்து காவல்துறை மற்றும் கோட்டாட்சியர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாரிமுத்துவின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.
இதனையடுத்து, மாரிமுத்துவின் உறவினர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர், தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் ஏராளமானோர் உடுமலை வனத்துறை அலுவலகம் முன்பு குவிந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
உரிய விசாரணை நடத்தில் வனத்துறை அதிகாரிகள் மீது பட்டியலின மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டுமென சிபிஎம் மற்றும் தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கத்தினர் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.