tamilnadu

சென்னை விரைவு செய்திகள்

புதிய காவல் கண்காணிப்பாளர் பொறுப்பேற்பு

 ராணிப்பேட்டை, மார்ச் 4– ராணிப்பேட்டை மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக பே. சிபின் புதன்கிழமை (மார்ச் 4) முறைப்படி பொறுப்பேற்றுக் கொண்டார். அவர் பொறுப்பேற்ற அதைத் தொடர்ந்து, மாவட்ட காவல் அலு வலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர் கூட்டம் நடை பெற்றது. இக்கூட்டத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பா ளர் குணசேகரன் தலைமை தாங்கினார். இந்த முகாமில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் தங்கள் குறைகளை மனுக்கள் அளித்தனர். பொதுமக்களிடம் பெறப்பட்ட மனுக்களை முறையாக விசாரணை செய்து, அதன் மீது விரைந்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூடுதல் காவல் கண்காணிப்பாளர் குணசேகரன் தெரிவித்தார்.

10 கிலோ கஞ்சா பறிமுதல்

சென்னை, மார்ச் 4- சென்னை தரமணியில் திரிபுராவில் இருந்து கடத்தி வரப்பட்ட கஞ்சா பறிமுதல்  செய்யப்பட்டது. தரமணி பறக்கும் ரயில் நிலையம் அருகே 2 பேர் கஞ்சாவுடன் நிற்பதாக தனிப்படையினருக்கு புதன்கிழமை ரகசியத் தகவல் கிடைத்தது. அந்த தகவலின் அடிப்படையில் தனிப்படையினர் அங்கு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கு சந்தேகத்துக்குரிய வகையில் நின்று கொண்டிருந்த இருவரை பிடித்து விசாரணை செய்ததனர்.   விசாரணையில் அவர்கள், முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினராம். இதையடுத்து தனிப்படையினர், அவர்கள் வைத்திருந்த பையை சோதனையிட்டனர். அப்போது அதில் இருந்த 10 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்து நடத்திய விசாரணையில் அவர்கள்,  திரிபுரா மாநிலத்தை சேர்ந்த சாகாடாட் உசைன் (21), விஜய் தீர்ப்பால் (19) என்பதும், திரிபுராவில் இருந்து கஞ்சாவை கடத்திக் கொண்டு வந்து சென்னையில் விற்பதும் தெரியவந்தது. இதையடுத்து தனிப்படையினர், இருவரையும் தரமணி காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.

சுய உதவிக் குழுவினரின் பொருட்கள் கண்காட்சி:  அண்ணா பல்கலை.யில் 3 நாட்கள் நடைபெறுகிறது

சென்னை,மார்ச் 4-  சர்வதேச பெண்கள் தினத்தை முன்னிட்டு மகளிர் சுய உதவிக்குழுவினர் மற்றும் பெண் தொழில் முனைவோர் தயாரித்துள்ள பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை அண்ணா பல்கலைக் கழகத்தில் புதன்கிழமை (மார்ச் 4) தொடங்கியது.  3 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியை அண்ணா பல்கலைகழக மகளிர் மேம்பாட்டு மையம், சர்வதேச பெண்கள் தினத்தை கொண்டாடும் வகையில் ஏற்பாடு செய்துள்ளது. இதில் பெண் தொழில்முனைவோர் தயாரித்துள்ள பொருட்களின் கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறவுள்ளது. பல்கலைக்கழகத்தின் கிண்டி பொறியியல் கல்லூரி வளாகத்தில் ஐகியூஏசி கட்டிடத்தின் முன்புறம் உள்ள சாலையிலும், விவேகானந்தா கலையரங்கத்தை ஒட்டியுள்ள சாலையிலும் இந்த கண்காட்சி மற்றும் விற்பனை நடைபெறும். இதில் பெண் தொழில்முனைவோர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினரின் தயாரிப்புகள் பல்வேறு அரங்கு களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  இந்த கண்காட்சி, விற்பனை நிகழ்ச்சியை அண்ணா பல்கலைக்கழக பதிவாளர் (பொறுப்பு) வி.குமரேசன், பல்கலைக்கழக ஒருங்கிணைப்புக்குழு உறுப்பினர் பேராசிரியர் பி.டி.என். ஸ்ரீதர் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இந்த கண்காட்சி வருகிற 6-ம் தேதி வரை தினமும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும்.

ரூ.2 கோடி நிலம் அபகரிப்பு: இளைஞர் கைது

அம்பத்தூர், மார்ச் 4- அம்பத்தூர் அருகே ரூ.2 கோடி மதிப்பிலான நிலத்தை ஆள்மாறாட்டம் செய்து அபகரித்த வழக்கில் இளைஞரை ஆவடி மத்திய குற்றப்பிரிவு காவல் துறையினர் புதன்கிழமை கைது செய்தனர். சென்னை பெரவள்ளூர் ஜிகேஎம் காலனி சேர்ந்தவர் பார்த்தசாரதி. இவர் கடந்த 1991ஆம் ஆண்டு அம்பத்தூர் அருகே சூரப்பட்டு கிராமம் பிரிட்டானியா நகரில் 2,400 சதுரடி கொண்ட காலி மனையை கிரையம் பெற்று அனுபவத்தில் வைத்திருந்தார். இந்த நிலையில் கடந்த ஆண்டு மேற்படி நிலத்திற்கு வில்லங்கச் சான்று பதிவு செய்து பார்த்த போது பார்த்தசாரதி போல ஆள்மாறாட்டம் செய்து பக்தவச்சலம் என்பவருக்கு பொது அதிகாரம் கொடுத்ததும், பின்னர் அவர் நடராஜன் ராஜேஷ் ஆகியோருக்கு தலா 1,200 சதுரடி நிலத்தை கிரையம் செய்து பத்திர பதிவு செய்துள்ளார்.  அதன்பிறகு நடராஜன் ராஜேஷ் இருவரும் சேர்ந்து அனிதா என்பவருக்கு விற்பனை செய்ததும், அவர் மேற்படி நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து ரூ.1.27 கோடி கடன் பெற்று, அந்த நிலத்தில் வீடு கட்டி இருப்பது தெரியவந்தது. இது குறித்து பார்த்தசாரதி தன்னுடைய நிலத்தை அபகரிப்பு செய்த பக்தவச்சலம், நடராஜன், ராஜேஷ், அனிதா ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி ஆவடி காவல் ஆணையரகத்தில் கடந்த ஆண்டு புகார் அளித்தார்.  இதையடுத்து ஆவடி  மத்திய குற்றப்பிரிவு நிலப் பிரச்சனை தீர்வு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் பக்தவச்சலம், பிரசன்னா ஆகிய 2 பேரை காவல் துறையினர் ஏற்கெனவே கைது செய்தனர். இந்த நிலையில் புதன்கிழமை சென்னை கொளத்தூர் அம்பேத்கர் நகரைச் சேர்ந்த ராஜேஷ் (42) என்பவரை கைது செய்து அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். அபகரிக்கப்பட்ட நிலத்தின் சந்தை மதிப்பு ரூ.2 கோடியாகும் என கூறப்படுகிறது.