ஹெல்மெட் அணியாவிட்டால் இனி ரூ1000 அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை போக்கு வரத்து காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
மோட்டர் வாகன சட்ட திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதைதொடர்ந்து போக்கு வரத்து காவல்துறையினர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சாலைவிபத்துகளில் உயிர் இழப்பவர்கள் இளைஞர்களாகவே இருப்பதாகவும், அதுவும், 90% இளைஞர்கள் தலைக்கவசம் அணியாததாலேயே தலையில் காயம் பட்டு உயிரிழக்க நேரிடுவதாகவும் தெரிவிக்கின்றனர்.
தலைக்கவசம் அணிகின்ற சிலரும், முறையாக ஹெல்மெட் பட்டனை சரிவர அணிவதில்லை என்பதை சுட்டுக்காட்டி உள்ளனர். குழந்தைகளை பள்ளிக்கு அழைத்து செல்லும்போதும், கடைக்கு செல்லும்போதும் தலைக்கவசம் அணிய விலக்கு அளிக்கப்பட்டுள்ளதாக சிலர் தவறாக நினைக்கின்றனர். விபத்து எங்கே எப்போது நடக்கும் என்று யாருக்கும் தெரியாது என்பதால், எங்கே சென்றாலும், எவ்வளவுத்தூரம் சென்றாலும் இருசக்கர வாகனத்தில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும். பின்னால் அமர்ந்து செல்பவரும் தலைக்கவசம் அணியவேண்டும்.
மோட்டார் வாகனச்சட்டம் திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளதால், தலைக்கவசம் அணியாதவருக்கு விதிக்கப்படும் ரூ. 100 இருந்து 1000 ஆக விரைவில் உயர்த்தப்பட உள்ளது. எனவே இருசக்கர வாகன ஓட்டிகள் வீட்டிலிருந்து புறப்படும்போது செல்பேசி போன்றவற்றை மறக்காமல் எடுத்து செல்வது போல், உயிர்காக்கும் தலைக்கவசத்தை அணிந்து செல்வதை பழக்கமாக்கிக்கொள்ள வேண்டும் என்று போலீஸ் அறிவுறுத்தியுள்ளனர்.