articles

img

வண்ணக்கதிர் 2

அவள்! - வம்பன்செபா

தூரத்தில் நடந்து போவது அவள்தான் என்ற என் அனுமானத்துக்கேற்றார் போல என்னை நிமிர்த்தி மிடுக்காக “பைக்கை” ஓட்டினேன். நிச்சயம் ‘லிப்ட்’ கேட்க மாட்டாள். கேட்காவிட்டால் என்ன செய்வது?நிறுத்தி,நிதானித்து வரலாமா,அல்லது வர்றீங்களா?என்று தாமே முன்வந்து  ‘ஈகோ’ வின்றி அழைக்கலாமா? இல்லை பழையபடி ‘வா’ அல்லது‘வர்றீயா’என்று கேட்கலாமா?

ஆத்தீ! இப்போது பெரிய மனுஷியாயிற்றே, அவ ளுக்கு  கல்லூரிக்கு செல்லும் பெண்ணிருக்கிறாளே, ஒருமையிலா அழைப்பது அப்படியென்ன உரிமை அவள்  மேல் நமக்கிருக்கிறது? அவ்வப்போது கடைக்கன்னியிலோ,இப்படியான வழிப்போக்குகளிலோ அவளைப் பார்ப்பதுண்டு.கிஞ்  சித்தும் ஒரு வார்த்தையோ,ஓர விழியில் ஒரு சொட்டு ரச வாதத்தையோ ஒருநாளும் வீசியதில்லை. ஆனால் ஒரு போதும் அவளை மறந்ததில்லை என்பது சத்தியம். அவளுக்கும் இப்படி இருக்குமா? காதலிக்கும் போது எத்தனையான சந்தேகங்கள், கொடுக்கும் கடி தத்திற்கு மறுகடிதம் வரத் தாமதமானாலும், அவள் வீட்டுக்கு விருந்தாடி வந்தாலும், குடும்பத்தோடு ஊருக்  குப் போனாலும், வீட்டில் சிரிப்பு சப்தம் கூடுதலாகக் கேட்டாலும், மற்ற இளஞ்செட்டுகளோடு கதைத்தாலும் இங்கே, மனதை பதைபதைக்க வைத்துவிட்டு மகிழ்ச்சி யாக இருக்கிறாளே, மனம் மாறிடுமோ நம்மை மறந்து விடுவாளோ? என்று பயம் நட்டுக்குமே. எனக்கு மட்டும்  தான் அவளென்று பித்தேறிக் கிடந்த நாட்களில்  அவளை  சந்திக்கும் போதெல்லாம் ஊடல்கள்தான் எங்களுக்குள்  சஞ்சரித்திருந்தது. சரி,அனல் தகிக்கிறது ‘ஸ்டாப்’வெகுதொலைவிலி ருக்கிறதுகேட்டே ஏற்றிக்கொள்வோம்.அய்யோ! அவள்  மனநிலை தற்பொழுது எப்படியாக இருக்குமோ? விரக்தியில் வெடுக்கென விழுவாளோ?மோவாயை சுழித்து உதாசினப்படுத்தி விடுவாளோ?    இப்படியேதும் நடந்தால், இரண்டு பெண் பிள்ளைகளுக்கு தகப்பன்  எனக்கும், அவமானமல்லவா?  ச்சே!சே அப்படியான வளா? அவள்,நல்ல குடும்பத்துப் பெண்தான், நன்றாக  வளர்ந்தவள்தானே. அவளை நமக்குத் தெரியாதா என்ன? மனிதத்தை புரிந்து கொள்ளாத மடந்தையாகவா இருப்பாள்? நன்கு பக்குவப்பட்ட வயது தானே, அவள்  போதாத காலம் நான்காண்டிற்கு முன்பு கணவனை இழந்து விட்டிருந்தவள், அம்மா வீட்டில் தஞ்சம் புகுந்திருக்கிறாள். இப்படியாகயிருந்தும் இத்தனையாண்டுகளில் அவளைப்பற்றி யாரும் இம்மிகூட தவறாகப் பேசிக்  கேட்டதில்லை.அவள் கண்ணியத்தை எவரும் குறைத்து மதிப்பிடவில்லையே.. அவளின் பெண்மையை  கலைத்து விடாது அவளுக்கு சமீபமாய் மென்மையாக நிறுத்தினேன்.மொபைட் சப்தத்தின் ஊடாக தைரியத்தை  வரவழைத்துக்கொண்டு “வரலாமா” என்று கேட்டே விட்ட எனக்கு,அப்பாடா! என்றிருந்தது. வண்டியை நிறுத்தவே, என்னைக் கணித்து கீழே பணிந்தவள்,என் கேள்விக்கு துணுக்குற்றவளின் முகம், அப்போதே மலர்ந்த “பூவென” துளிர் வெடித்  தது. ‘‘ம்’ என்றபடி,தன் புடவைக் கொசுவத்தை மிருது வாக தாங்கிப்பிடித்து இரண்டு மூன்று ‘ஸ்டெப்’ அவ ளைத்தாங்கி வந்தாள். முன்னைவிட சதை வைத்தி ருந்த உடம்பில் மார்புகள் குலுங்கியது. மேகத்திற்குள் ஒளிர்ந்து பார்க்கும் பிறையாட்டம், கதவிடுக்கில் மறைந்து பார்க்கும் புதுப் பெண்ணாட்டம், இமை களுக்குள் ஒளிந்து என்னைப் பார்த்தது அவளின் பதுங்குப் பார்வை.நெஞ்சை பக்கவாட்டில் அணைத்த படி நெருங்கி வந்தாள். பைக்கின், கால்மிதியில் வலது காலை எடுத்து வைத்தேற எத்தனித்தவளை ஊன்றி யிருந்த எனது இடதுகால் சுமந்திருந்தது. முன்னொரு காலத்தில் வலது காலை எடுத்துவைத்து என் வீட்டிற்கு  எப்போது வரப் போகிறாய், என்று பேசியிருப்பது நினை வுக்கு வந்தது. எத்தனை வயதானாலென்ன பிரிந்துபோன காத லர்கள் எப்போது பார்த்துக்கொண்டாலும் அந்தக் கணமே இளரத்தம் பிரவகித்தோடத்தானே செய்கிறது. அவளின் பக்கம் சிரசை லேசாகத் தாழ்த்தி,திருப்பி ஏறி யாச்சா?போகலாமா என்றேன்.மீண்டும் அதே‘ம்’தான் பதிலாக வந்தது. அது ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு சொல்லாக  உணர்ந்து, மிதியில் வைத்திருந்த அவள் பாதத்தில் மிஞ்சி  இல்லாததைப் பார்த்தேன். “இஞ்சித் துண்டுபோல் பாத விரல்கள்”“பனங் கற்  கண்டுவாய் கணுக்காலென்று”,பலமுறை சொல்லும் போது அழகு இழையோடிருக்கும் லஜ்ஜையை அவ ளோடு பலமுறை ரசித்திருக்கிறேன். “உன் கால் கொலுசாய் என்னை நீ எப்போதும் பதற  வைத்திருக்கிறாய்” என்று சொல்லி கவிதையும் எழுதிக்  கொடுத்திருக்கிறேன். ஒரே ஊருதான். ஆனால் அடுத்தத் தெருவில் அவளது  வீடு. பள்ளிப்பருவக் காதல்தான் எங்களிருவருக்கும்.பள்ளிக்கூடத்தைக் கட்டடித்துவிட்டு படத்திற்கு சீருடை யோடே போயிருக்கிறோம்.நினைத்தால் சிரிப்புத்தான் வருகிறது. இந்த வேலையை இன்றைக்கு நம் பிள்ளைகள் செய்தால் ஏற்றுக்கொள்வோமா?இந்த நினைவை அவர்  களிடம் மலர்த்தத்தான் முடியுமா? அப்படித்தான் அன்றைக்கு தியேட்டரில் நாங்கள்  ஒருவகையான படபடப்போடுதான் படம் பார்த்தி ருந்தோம்.காரணம் சீருடையோடு இருந்ததை  காலம்  கலிகாலமாச்சென சிலர் ஜாடைமாடையாக பரிகாசித்தி ருந்தனர். திரையரங்கில் எங்களைப் பார்த்ததாக இருவர் வீட்டி லும் யாரோ வத்திவைக்க, அன்றைக்கு நடந்த பூகம்  பம்தான்.‘பம்பாய்’ படக்குண்டுகள் இங்கேயும் வெடித்தி ருந்தது.சின்னப்பிள்ளைங்க வெள்ளாமை வீடு அண்டாமத்தான் போனது. தற்போது,இருவரையும்சுமந்தபடி வெடுக்கென பைக், நகர, அவளை என்பக்கம் இன்னும் நகர்த்தியது. லேசான உரசலில் என் முதுகுத்தண்டு குறுகுறுத்தது உண்மை. வாகை சாய்வாக வைத்த, பைக் மாடலை நினைத்து  சிலாகித்து, கம்பெனிக்காரனை நெஞ்சார தோத்திரம் செய்தேன்.ஏறியதும்,ஏற்றியதிலிருந்தே இருவரும் மூச்சுவிடும் சப்தமின்றி மூர்ச்சையாகியே இருந்தோம். முதலில் யார் தொடங்குவதுஎப்படி என்ன பேசுவது  தொணதொணத்திருந்த வினாக்கள் சுழலும் சக்கரங்க ளில் சிக்கிக் கொண்டிருந்தது தெரிந்தது. அவளுடைய மகள் கல்லூரி செல்வது தெரிந்ததால், பையன் என்ன  படிக்கிறான் என்றேன்? அன்றைக்கு காதலை முதலில்  சொன்னவன் நான்தான் என்ற முறையில் முந்திக்கொண்  டேன். பத்தாவது என்றாள்.ஒற்றை வார்த்தை, இது பத்தாதே  என்று எண்ணியிருந்தேன். பொண்ணு பெரியவளாயிட்டாளா? என்றாள். புலன்  களனைத்தும் திறந்து கொள்ள, நானும் ‘ம்’ என்றபடி  பத்தாவது படிக்கிறாளே என்றேன். இரு சக்கர வாக னம் சென்று கொண்டிருக்கிறது. அடுத்த கேள்விக்கு தயா ராகாத நிலை. அன்று, இருவரும் தியேட்டர் வரிசையில் நிற்கை யில் என்னைப் பார்த்து சிலபேர் பாப்பா வயசுக்கு  வந்துருச்சாடா அம்பி என்று கேட்டுக் கெக்கலித்த வர்களை முறைத்திருந்தேன்.அவர்கள் கேட்டமுறை யில் தவறிருக்கலாம்,கேள்வியில் தவறில்லை.அத்தனை சின்னவள்தான் அவள்.  எல்லோரும் எதையோ கேட்டு பரிகாசம் செய்கிறார்  களெனஅலுத்துக்கொண்டேன்.ஒருநாள் அவளிடம் தியேட்டரில் இப்படி பேசிக்கொண்டார்களே என்றேன்.ஆமாம் உண்மைதான் நான் வயசுக்கு வரவில்லையே, உங்களுக்குத் தெரியாதா என்றாள்.அதுயென்ன பெருங்குற்றமாயென்று  வெள்ளந்தியாய் கேட்டேன். அட மக்கு. வயசுக்கு வந்தால் தான் நான் பெரிய மனுஷி என்பதும்,பெண்களுக்கென்று பிரத்யேகமாக இயற்கையளித்திருக்கிற “சிறப்பு உடல்தகுதி”என்று முதலில் சொல்லி,என் செவிக்குள் சிணுங்கிய அன் றையப் பெரியமனுஷி இவள்தான்.  மனது சற்று இளைப்பாறியதும்,இப்ப எங்கே  போறீங்க? பல ஆண்டுகள் கழித்து மதிப்புறு பேச்சைத்  தொடங்கினேன்.புதுக்கோட்டைக்கு என்றாள்!என்ன, தனியாகவா என்றேன்?ஏன் கூடவாரீகளா என்றாள்! அந்த சொற்பதத்தில் நெடுநாளைய நேசமிருந்தது.மீண்டும் நிசப்தம் சொட்டியிருந்தது.பதிலுக்காய் காத்தி ருப்பவளுக்கு பதிலின்றி தவித்தேன்.ஒருபுறம் அமைதி தான் இதற்கான தீர்வென தீரமாகவும் இருந்தேன். வலது கண்ணாடியில் பார்த்தேன் அவளின் நீண்டடர்ந்த தலை ரோமங்கள் காற்று வெளியில், தற்போது என்னைப் போலவே பறந்திருந்தன. “மயிரி லையில் மலர்ந்த மல்லிகைப் பூவாக” ஓர்முறை வாங்கிக்  கொடுத்து, அவள் கருமையை மலரச்செய்த ஞாபகம் வந்து முட்டியது.வெறுமையில் இருப்பவளிடம் எதை யும் ஞாபகப்படுத்த வேண்டாம் என விட்டிருந்தேன். வேகத்தடை வந்தது பிரேக்கை அணைத்து ஓட்டினேன். அவள்! அணைந்திருந்தாள்… பேருந்திற்குத்தான் செல்கிறாள்.பேருந்து ஊர்ந்து செல்லும் அன்றொரு நாளில் நானும் அவளும் ஒரே  இருக்கையில் அருகருகே அமர்ந்திருந்தோம்.அவளின்  உள்ளங்கையிலோடும்  கோடுகளில் இருவருக்குமான பொருத்தங்களைப் பார்த்துப் பார்த்து சிலாகிப்போம். வலது இடதுமான தொடைகள் உரசி கிளு கிளுப்பாக இருந்தஎங்கள் நெருக்கத்தை நினைக்கிற  போதெல்லாம் காதல் தித்தித்திருக்கும்.அவள், மணிக்  கட்டில் சிணுங்கும் வளையல்கள் கடிகாரமாகி கால மாற்றத்தைக் காட்டியிருந்தது.அந்த மணிக்கூண்டும், கூண்டோடு வந்தது. இடுப்பு சதைபோல் அவள் கழுத்திலும் மடிப்பு விழுந்து கனத்திருந்தாலும்,வெறுமெனே இருந்தது. முன்னொருநாள் குடும்பத்தோடு ஆலயத்திற்குச் சென்று வந்தவள்  எனக்குப் பரிசாக வாங்கிவந்த ஒரு  முழம் கருப்புக்கயிறை சிறுவத்தோடு சேர்த்து தந்தாள். இது வேண்டாம் உன் கழுத்தில் கிடக்கும் சிறுவக் கயிற்றைக்கொடு என்றேன். மறுப்பின்றி அப்படியே எடுத்து என் கழுத்தில் மாட்டி  என்னை முதலில் மணமுடித்தவள் அவள்தான். விரல் ஸ்பரிசத்திலும், அவளின் கழுத்து வாசத்திலும், காதல் சின்னமாக இன்றும் அந்த “சிறுவக்கயிறு” இருக்கி றது என்பதை, அவளிடம்  சொல்லக்கூடாது என்கிற  அறிவு எனக்கு அப்போதைக்கிருந்தது ஆச்சர்யம்தான்.தொழில் எப்படி போகுது என்றாள். நல்லாப் போகுது என்றேன். நாளைய பின்னே இவனைக்கட்டிக்கிட்டா கஞ்சி  கிஞ்சி ஊத்துவானா?பத்துகாசு சம்பாதிக்க அவனுக்கு வக்கு வழியிருக்கா?இருவரையும் ஒருநாள் பேருந் துல பார்த்துவிட்ட மூதாட்டி ஒருத்தி, அவளைத் தனியாக  அழைத்துப்போய் இப்படியெல்லாம் பேசியிருக்கிறாள். அதை ஒருமுறை என்னிடம் சொன்னபிறகுதான் உக்கி ரமாக ஒரு தொழிலைக் கற்று வாழ்வை மென்மையாக நகர்த்திக் கொண்டிருக்கிறேன்,என்பது அவளுக்குத் தெரியாமலா இருக்கும்.எத்தனை மெதுவாக ஓட்டினா லும் வாகனம் பறக்கத்தான் செய்தது.ஆனால் மறக்காத  பல விடையங்களை கிளர்த்திக்கொண்டே வந்தது. இன்னும் சில மணித்துளிகளில் நிறுத்தம் வந்துவிடும். அறிந்தவர் தெரிந்தவர் என எத்தனைபேரை எதிரில்  பார்த்தாலும், என் சுயத்தை கலைக்கச் செய்யும் எதுவும்  இக்கணம் என் எதிரிகளென, கட்டுக்கோப்பாக இருந் தேன். இருந்தும்,நமக்கான காலமும் அதற்கான தூரமும் வெகு தொலைவில்லை என்பது அறுதியிட்டிருந்தது. ஆம், பைக் ‘ஸ்டாப்பை’ வந்தடைந்தது. சரி போய்ட்டு  வாரேன் என்று சொல்லி இறங்கியவள், அவளுக்கான திசையை நோக்கி வேகமாக நடந்தாள். தூரமாய் பார்த்  தேன். துயரம் தெரிந்தது. ‘கேன்,பேக்’ இட்டிருந்தவ ளின் தோளில் தற்போது சிலுவைகள் தென்பட்டன.