articles

img

ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் ஆக்கிரமிப்பில் நீதிமன்றங்கள் - க.கனகராஜ்

ஆர்எஸ்எஸ் பரிவாரத்தின் ஆக்கிரமிப்பில் நீதிமன்றங்கள்

சமீபத்தில் உச்சநீதிமன்ற நீதிபதிகள் 33 பேரில் ஒரேயொரு இஸ்லாமியரும், ஒரேயொரு கிறித்தவரும் மட்டுமே இருக்கிறார்கள் என்ற செய்தியை வாசிக்க நேர்ந்தது. அதோடு கூடவே, 33 நீதிபதிகளில் 9 பேர்  விஸ்வ இந்து பரிசத்தின் ஒரு நிகழ்ச்சியிலாவது கலந்து கொண்டுள்ள னர் என்ற செய்தியையும் வாசிக்க நேர்ந்தது. இதில்  முதலில் சொன்ன இரண்டு நீதிபதிகள் தவிர 31 நீதிபதி களில் 9 பேர் விஸ்வ இந்து பரிசத் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்கள் என்று கொண்டால் கிட்டத்தட்ட 30 சத விகிதம் நீதிபதிகள் வெளிப்படையாக தாங்கள் இந்தி யாவில் மிகத் தீவிரமாக வெறுப்புப் பிரச்சாரத்தையும் வன்முறையையும் விதைக்கும் ஒரு அமைப்போடு தொடர்பில் இருக்கிறார்கள் என்று பொருள்.

நாடாளுமன்ற பலம் மூலம்  2 கோரிக்கை நிறைவேற்றம்

சங்பரிவார் ஆரம்ப காலம் முதல் இந்தியாவின் அரசமைப்புச் சட்டம் மற்றும் மதச்சார்பின்மைக்கு சவால் விடும் வகையில் முன்வைத்த கோரிக்கை கள் மூன்று. 1. அயோத்தியில் பாபர் மசூதியை இடித்து விட்டு அந்த இடத்தில் ராமருக்கு கோவில் கட்டுவது, 2. இந்திய மக்களின் சார்பாக இந்திய அரசமைப்புச் சட்டத்தின் மூலம் காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் அரசமைப்புச் சட்டத்தின் 370ஆவது பிரிவை நீக்குவது, 3. பொதுசிவில் சட்டத்தை அமல்படுத்துவது. நரேந்திர மோடி தலைமையிலான அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பிற்கு வந்த பிறகு எதிர்க்கட்சிகள் மற்றும் பெரும்பான்மை மக்களின் கருத்துக்கு எதிராக தனக்கு இருக்கும் நாடாளுமன்ற பலத்தை பயன்படுத்தி  முதல் இரண்டு கோரிக்கைகளை நிறை வேற்றிக் கொண்டார்கள். சங்பரிவார் அமைப்புகளின் தன்மை, ஆர்எஸ்எஸ் எனும் பாசிசத் தன்மை கொண்ட அமைப்பு, அதன் தாளத்திற்கு ஏற்ப ஆடும் பாஜக இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டால் அது ஒன்றும் ஆச்சரியமான விஷயம் அல்ல. ஆனால், இவை இரண்டும் வழக்குகளாக நீதிமன்றத்திற்கு அதுவும் உச்சநீதிமன்றத்திற்கு சென்றபோது, இரண்டி லும் அளிக்கப்பட்ட தீர்ப்புகள் நீதிமன்றத்தின் மீதான  நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அமைந்தி ருந்தது.

இரண்டுக்கும்  நீதிமன்ற ஒப்புதலை பெற்றார்கள்

அயோத்தி தீர்ப்பு வழங்கப்பட்ட போது 5 நீதிபதி கள் கொண்ட அமர்வின் சார்பில் ஏகோபித்து எழு தப்பட்ட தீர்ப்பை எழுதியது யார் என்பது வெளிப் படுத்தப்படவில்லை. ஆனால், அந்த தீர்ப்பை பின்னர் இந்திய தலைமை நீதிபதியாக உயர்த்தப்பட்ட தனஞ்செய் சந்திர சூட் எழுதியதாக செய்திகள் வெளி யாகின. அந்த தீர்ப்பு எழுதப்படுவதற்கு அடிப்படையாக ஆவணங்களையும், அரசமைப்புச் சட்டத்தையும் தேடி பரிசீலித்து எழுதியதாக அவர் சொல்லவில்லை.  மாறாக, பகவான் ராமனிடம் தான் வேண்டுகோள் வைத்ததாகவும் அவர் வழிகாட்டுதலின் அடிப்படை யில் இந்த தீர்ப்பை எழுதியதாகவும் தெரிவித்தார். உண்மையில், இந்த வழக்கில் பகவான் ராமர் (ராம் லல்லா) ஒரு தரப்பு என்கிறபோது ராமரிடமே அப்படி கேட்டேன் என்று சொன்னது முற்றிலும் ஏற்க  இயலாத கருத்தாகும். இது சங்பரிவாரை விஞ்சும் நம்பிக்கையே ஆதாரம் என்று செயல்பட்ட மிக மோசமான நடவடிக்கை ஆகும். இதன் மூலம் நீதிபதி சந்திர சூட் சட்டங்களின் அடிப்படையில் தீர்ப்பு  எழுதுவதற்கு பதிலாக நம்பிக்கையின் அடிப்படையில் தீர்ப்பு எழுதியிருக்கிறார் என்று பொருள். உண்மையில் அப்படி எழுதப்பட்ட தீர்ப்பு செல்லத்தக்கதாகவோ, ஏற்கத்தக்கதாகவோ அமையாது. இதேபோன்று, 370ஆவது பிரிவு ரத்து செய்தது சம்பந்தமான வழக்கில் அவர் முந்தைய வழக்கில் இருந்தது போல 5 நீதிபதிகளில் ஒருவர் என்றில்லா மல் அவரே தலைமை நீதிபதியாகவும் இருந்தார். அந்த வழக்கில் 2024 செப்டம்பர் மாதத்திற்குள் தேர்தலை நடத்தி விடுவோம் என்றும், விரைவில் யூனியன் பிரதே சங்களாக மாற்றப்பட்ட ஜம்மு  - காஷ்மீர் பகுதிகளை  மாநிலமாக மீண்டும் உருவாக்கம் செய்வோம் என்றும் ஒன்றிய அரசாங்கம் சொன்னதை ஏற்று அந்த வழக்கையும் முடித்து வைத்தார். அதாவது, சங்பரிவாரின் நீண்ட நாள் கோரிக்கைகள் மூன்றில் இரண்டை நிர்வாக ரீதியாக அவர்கள் நிறைவேற்றிக் கொண்டதை உச்சநீதிமன்றத்தின் ஒப்புதலுக்கு உள்ளாக்கினார்.

விநோத விளக்கம் மூலம்  கலக விதை விதைப்பு

பாபர் மசூதியை இடிக்க வேண்டுமென்று சங்பரி வார் இந்தியா முழுவதும் குறிப்பாக வட மாநிலங்க ளில் கலகங்களையும், வன்முறைகளையும் கட்ட விழ்த்து விட்டுக் கொண்டிருந்த காலத்தில் ஒன்றிய அரசாங்கம் வழிபாட்டுத் தலங்கள் (சிறப்பு ஏற்பாடு கள்) சட்டம் ஒன்றை 1991 ஆம் ஆண்டு நிறைவேற்றியி ருந்தது. அதன்படி, எந்த ஒரு வழிபாட்டுத் தலமும் 1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று அதாவது இந்தியா  சுதந்திரம் பெற்ற அன்று எந்த மதத்திற்கு அல்லது ஒரு மதத்தின் எந்த குறிப்பிட்ட பிரிவுக்கு உரியதாக இருந்ததோ அப்படியே இருக்க வேண்டும். அதில் எந்த மாற்றமும் செய்யக் கூடாது என்பதாகும். பாபர் மசூதி பிரச்சனை அப்போது உச்சநீதிமன்ற விசாரணையில் இருந்ததால் அதற்கு மட்டும் விதிவிலக்கு அளிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில்தான் கலகக் கும்பல் அடுத்ததாக ஞானவாபி மசூதிக்கு கீழே கோவில் இருப்பதாக கதை கட்டியது. இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தின் முன்பு வந்த போது அந்த மசூதிக்கு கீழே ஆய்வு செய்ய சந்திரசூட் ஒப்புதல் அளித்தார். அதற்கு மிகவும் விநோதமாகவும் எள்ளி நகையாடத்தக்க வகையில் ஒரு விளக்கம் அளித்தார். இன்னும் சொல்லப் போனால் அந்த தீர்ப்பு நீதித்துறைக்கு தலைக்குனிவை ஏற்படுத்துவ தாகும். அதைவிட, ஒரு பாபர் மசூதிக்கு நடந்து கொண்டிருந்த கலகங்களையும் வன்முறைகளையும் ரத்தக் களறிகளையும் ஒவ்வொரு மசூதியையும் முன் வைத்து நடப்பதற்கான வழி ஏற்படுத்திய தீர்ப்பா கும். அதாவது 1947 ஆகஸ்ட் 15 அன்றைய நிலையை மாற்றக் கூடாது என்று தான் சட்டம் இயற்றப்பட்டதே தவிர ஆய்வு செய்யக் கூடாது என்று சட்டம் சொல்ல வில்லை. எனவே, ஆய்வு செய்வதற்கு தடை ஏதும் இல்லை என்று அவர் தீர்ப்பு எழுதினார். மாற்றுவ தற்கு வாய்ப்பில்லை என்றால் ஆய்வு செய்து என்ன  செய்யப் போகிறோம். ஆய்வை முன்வைத்து மாறுதல் செய்ய வேண்டுமென்று கலவரக்காரர்கள் திட்ட மிட்டு கலகத்தில் ஈடுபடுவதற்கு இது ஒரு வாய்ப்பை அளித்துவிட்டது. உண்மையில், சங் பரிவாரின் எதிர் பார்ப்பையும் மிஞ்சி மசூதிகளுக்கு கீழே எல்லாம் தோண்டலாம் என்கிற வாய்ப்பை வழங்கிய தீர்ப்பாகும் இது. எத்தனை பெரிய கலக விதையை அவர் விதைத்து விட்டுச் சென்றிருக்கிறார் என்பதை நாடு தற்போது பார்த்துக் கொண்டிருக்கிறது. இந்த தீர்ப்பிற்கு பிறகு சம்பல் மசூதியை முன்வைத்து நடைபெற்ற வன் முறையில், போலீஸ் துப்பாக்கிக் சூட்டில் நான்கு இஸ்லாமியர்கள் கொல்லப்பட்டதையும் மறந்திருக்க முடியாது. உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சந்திரசூட் சங் பரிவாரத்தின் ஒரு அங்கமா என்று நமக்கு தெரியாது. ஆனால், சங்பரிவாரத்தை மிஞ்சி அதன் தேவைகளை நிறைவேற்றியவராக அவரது தீர்ப்புகள் அமைந்திருக்கின்றன என்று சொன்னால் அது மிகையல்ல.

சிறுபான்மையினரை சிறுமைப்படுத்தும் நீதிபதிகள்

அரசமைப்புச் சட்டம் உட்பட எல்லாவித பிரச்சனைகளின் மீது இந்த சமூகத்தின் அங்கம் என்கிற முறையில் நீதிபதிகளுக்கு தனிப்பட்ட கருத்துக் கள் இருப்பதற்கு வாய்ப்புண்டு. ஆனாலும், நீதிபதி கள் தீர்ப்பு எழுதும்போது சட்டத்திற்கும், நீதிக்கும் உட்பட்டு தீர்ப்புகளை எழுதி வந்திருக்கிறார்கள். அதே போன்று, அரசமைப்புக்கும், சமூக அமைதிக்கும் சட்டத்தின் ஆட்சிக்கும் ஊறுவிளைவிக்கும் கருத்துக் கள் எதையும் பதவியில் உள்ள நீதிபதிகள் தெரிவிப்ப தில்லை. மாறாக, நரேந்திர மோடி ஆட்சிக்கு வந்த பிறகு பல்வேறு நீதிபதிகளும் பெரும்பான்மை வாதத்தை  ஆதரித்தும், சிறுபான்மை மக்களை சிறுமைப்படுத்து கிற அல்லது அச்சுறுத்துகிற கருத்துக்களையே சொல்வதும் அவர்கள் அதன் மூலம் பதவி உயர்வு பெற்றுச் செல்வதும் புதிய போக்காக வளர்ந்தி ருக்கிறது. 1. 2024ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் நீதிபதி சேகர்குமார் யாதவ் இஸ்லாமியர்களையும், இஸ்லாமியக் குழந்தைகளையும் இழிவுபடுத்தும் வகையிலான வார்த்தைகளை பயன்படுத்தியதோடு “நாடு பெரும்பான்மை மதத்தவர் விருப்பப்படியே ஆளப்பட வேண்டும்” என்றும் தெரிவித்திருந்தார். அதைவிட 3 ஜி க்கள் தான் இந்தியாவின் புனிதம். பசு (Gaay), கங்கை மற்றும் கீதை என்று கூறி யிருக்கிறார். அதாவது இந்த மூன்றுக்கும் மாற்றா னது அல்லது இந்த மூன்றையும் புனிதமாக கருத வில்லை என்றால் அது இந்தியாவை அவமானப் படுத்துவது என்கிற பொருளில் குறிப்பிட்டிருந்தார். 2. 2024ஆம் ஆண்டு கர்நாடகா உயர்நீதிமன்ற நீதிபதி வேதவியாசச்சார் ஸ்ரீஷானந்தா பெங்களூரில் இஸ்லாமியர்கள் பெரும்பான்மையாக வாழும்  கோரிப்பாளையா பகுதியை பாகிஸ்தான் என்று அடையாளப்படுத்தினார்.  3. 2019ஆம் ஆண்டு கொச்சி தமிழ் பிராமணர் உலக மாநாட்டில் பேசிய சிதம்பரேஷ் என்கிற கேரள உயர்நீதிமன்ற நீதிபதி “சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டை எதிர்க்க வேண்டும்” என்று பேசி யிருக்கிறார். 4. 2019ஆம் ஆண்டு மேகாலயா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த எஸ்.ஆர். சென் “நாடு பிரி வினைக்குப் பின்னர் இந்தியாவை இந்து ராஷ்டி ரமாக அறிவித்திருக்க வேண்டும்” என்று பேசி யிருக்கிறார். 5. 2024ஆம் ஆண்டு கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதியாக இருந்த சித்தரஞ்சன்தாஸ் ஓய்வுபெறும் போது வெளிப்படையாகவே “நான் நீண்ட கால மாக குழந்தைப் பருவம் முதல் ஆர்.எஸ்.எஸ்.சில் உறுப்பினராக இருந்திருக்கிறேன்” என்று பேசியிருக்கிறார். 6. 2023ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிப தியாக பதவியேற்ற விக்டோரியா கௌரி வழக்கறி ஞராக இருந்த போது 2018இல் “இங்கே பச்சை பயங்கரவாதம் மட்டுமல்ல; வெள்ளை பயங்கரவாத மும் இருக்கிறது” என்று ஒருசேர இஸ்லாமிய வெறுப்பையும், கிறித்துவ வெறுப்பையும் சேர்த்து விதைத்திருக்கிறார். 7. 2024ஆம் ஆண்டு கர்நாடக உயர்நீதிமன்ற நீதி பதியாக இருந்த எம். நாகப்பிரசன்னா மசூ திக்குள் இஸ்லாமியர்கள் தொழுகை நடத்திக் கொண்டிருந்த போது உள்ளே நுழைந்து ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்ட இருவர் மீதான வழக்கில் “ஒரு இந்து மசூதிக்குள் ஜெய் ஸ்ரீராம் என்று முழக்கமிட்டால் என்ன தவறு இருக்க முடியும்” என்று கேள்வியெழுப்பியிருக்கிறார்.

விஎச்பி மாநாட்டில்  40 நீதிபதிகள்...

இப்படி தொடர்ச்சியாக சொல்லிக்கொண்டே போக  முடியும். ஒரு கணக்கின்படி 2024ஆம் ஆண்டு விஸ்வ  இந்து பரிசத் நடத்திய ஒரு மாநாட்டில் சுமார் 40 உயர் நீதிமன்ற நீதிபதிகளும், ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதிகளும் கலந்து கொண்டிருக்கிறார்கள். இப்படி வெறுப்பு விதையை தொடர்ச்சியாக விதைத்துக் கொண்டிருக்கும் ஒரு அமைப்பின் கூட்டங்களில் வெளிப்படையாக பங்கேற்பதும் பேசு வதும் இஸ்லாமியர்களையும் கிறிஸ்தவர்களையும் குறிவைத்து தாக்குவதையும் நாட்டை பெரும்பான்மை மதத்தவரின் விருப்பத்திற்கு உட்பட்டு நடத்த வேண்டும் என்று சொல்வதும் அப்பட்டமான சட்ட மீறல்கள். இவை அரசமைப்புச் சட்டத்திற்கு எதிரான அறைகூவல்களே. இப்படிப்பட்டவர்கள் தங்களிடம் வரும் சிறுபான்மையினர் சார்ந்த,  மதச்சார்பின்மை சார்ந்த, வழிபாட்டுத் தலங்கள் சார்ந்த வழக்குகளில் நடுநிலைமையாக நேர்மையோடு தீர்ப்பளிப்பார்கள் என்று எப்படி எதிர்பார்க்க முடியும். ஆர்.எஸ்.எஸ்.சின் துணை அமைப்பான அகில பாரதிய அதிவக்தா பரிசத் இந்தியா முழுவதும் 15 ஆயிரம் வழக்கறிஞர்களையும் அரசு தலைமை வழக்கறிஞர்களையும், அரசு வழக்கறிஞர்களையும் தனது உறுப்பினராகச் சேர்த்துள்ளது. நீதிபதிகள் மற்றும் அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் இவர்க ளின் ஆதிக்கம் அதிகமாக இருப்பதாகச் சொல்லப் படுகிறது. பாதிக்கப்பட்ட மக்களின் கடைசிப் புகலிடம் நீதிமன்றம் என்ற நம்பிக்கை பொய்த்துப் போகும் அளவிற்கு நீதித்துறை சங்பரிவாரின் ஆதிக் கத்தில் இருக்கிறது என்பதே கவலைக்குரிய உண்மை யாகும்.