articles

img

வண்ணக்கதிர் 3

அறிவியல் கதிர் - ஆர்.ரமணன்

எஞ்சினில்லா படகில் இந்திய வீராங்கனைகள் சாதனை  

இந்திய கடற்படையின் நவிகா சாகர் பரிக்ரமா எனும் திட்டத்தின் கீழ் இரண்டு பெண் வீரர்கள் ஐஎன்எஸ்வி தாரிணி எனும் படகில் உலகை சுற்றும் பயணத்தில் புதிய சாதனை படைத்திருக்கிறார்கள். 17 மீட்டர் நீளமும் 5 மீட்டர் அகலமும் கொண்ட இந்தப் படகில் எஞ்சின் எதுவும் இல்லை. கடல்காற்றின் சக்தியில் மட்டுமே இது இயங்குகிறது.  இந்தப் பயணத்தில் அவர்கள்  21600 நாட்டிக்கல் மைல்கள்(40000கி.மீ) கடக்க உள்ளார்கள். கொந்தளிக்கும் கடல், மோசமான பருவ நிலை எல்லாவற்றையும் அவர்கள் எதிர்கொள்ள வேண்டும்.  லெஃப்டினன்ட் கமாண்டர்கள் கே.டில்னா, ஏ.ரூபா ஆகியோர்  நவம்பர் 2024இல் தொடங்கிய பயணத்தில் 2688 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து ஜனவரி 30. 2025 அன்று  தெற்கு பசிஃபிக் பெருங்கடலில் உள்ள பாயின்ட் நெமோ எனுமிடத்தை அடைந்து சாதனை படைத்திருக்கிறார்கள். இந்த இடம்தான் மனித சஞ்சாரத்திலிருந்து தொலை தூரம் உள்ள இடம்.  1999இல் ஸ்பானிய ஆராய்ச்சிக் கப்பல் ஒன்று இந்த இடத்தை முதன்முறையாக கடந்தது. அதன் பிறகு மிகச் சில கலங்களே அந்த இடத்தைக் கடந்துள்ளன.  விண்கலங்களின் வாழ்நாள் முடிந்தபின் இந்த இடத்தில்தான் இறக்கப்படுகின்றனவாம். சர்வதேச விண்வெளி நிலையமும் 2030இல் இங்கு இறக்கப்பட உள்ளதாம்.    இந்தப் பயணத்தில் தண்ணீர் மாதிரிகளை சேகரித்துள்ளார்கள். இது கடல் ஆராய்ச்சிக்கும் கடல் சுற்று சூழல் ஆய்வுகளுக்கும் மிகுந்த முக்கியத்துவம் உள்ளதாகும்.

அதிகரிக்கும்  பனிப்பாறைகள் உருகுதல்

1979இலிருந்து  புவி வெப்பமாவதைப் போல  நான்கு மடங்கு  வேகமாக ஆர்டிக் பிரதேசம் வெப்பமாகியுள்ளதாம். கிரீன்லாந்தின் அருகிலுள்ள சுவல்பார்ட் எனும் தீவுக் கூட்டங்கள் ஏழு மடங்கு வேகமாக சூடாகி வருகிறதாம். இவை பனிப்பாறைகளால் மூடப்பட்டவை. இவை மொத்தமும் உருகினால் கடல் மட்டம் 1.7செ.மீ  உயரும். இது ஒரே நாளில் நடந்துவிடாது என்றாலும் ஆர்டிக் பிரதேசத்திலுள்ள  பனிப்பாறைகள் சிறிதளவு வெப்ப உயர்வுக்கும் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை.  பனிப்பாறையியல் அறிஞர்களான டியான் லி, ஜோனாதன் பாம்பர், கோனார்ட் ஹெய்ட்லர் ஆகியோர் இது குறித்து ஆய்வு செய்துள்ளனர்.    பனிப்பாறைகள் உருகி கடலில் கலப்பது குறித்த முந்தைய  ஆய்வுகள் செயற்கைக்கோள் புகைப்படங்களைக் கொண்டு எண்ணியல் பதிவு செய்து ஆராயப்பட்டன. இது மிகுந்த உழைப்பை கோருவதுடன், திறனற்றதாகும். மேலும் செயற்கைக்கோள் படங்கள் ஏராளமாக உள்ளதால் வெவ்வேறு நபர்கள் வெவ்வேறு வகையான அம்சங்களை கவனிப்பர்.  நம்மிடமுள்ள மனித வளத்தைக் கொண்டு ஒவ்வொரு வருடமும் ஒவ்வொரு பகுதிகளில் நடைபெறும் நிகழ்வுகளை பதிவு செய்ய இயலாது. இதற்கு தீர்வாக, செயற்கை நுண்ணறிவு கொண்டு பெரும்பகுதிகளிடையே காணப்படும் மாதிரிகளை அடையாளங்காண முடியும்.  அதன் அடிப்படையில் இப்போது செய்யப்பட்ட ஆய்வில் 1985இலிருந்து 2023 வரை கடலில் கலக்கும் 149 பனிப்பாறைகளின் லட்சக்கணக்கான செயற்கைக் கோள் படங்கள் பயன்படுத்தப்பட்டன.  இதுவரை 800 கி.மீ சதுர பரப்பளவு பனிப்பாறைகள் உருகி மறைந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. கோடைகாலங்களில் பனிப்பறைகள் பின்வாங்குவதும்  குளிர்காலங்களில் முன்னோக்கி நகர்வதும்  கடல் வெப்பமாதலுடன் ஒப்பிடப்பட்டது.  கடல் வெப்பமே இந்த ஏற்ற இறக்கங்களுக்கு காரணம் என நிரூபிக்கப்பட்டது. சுவில்பார்டில் நடப்பது மற்ற பகுதிகளிலும் நடக்க வாய்ப்புள்ளது. இப்போது நிலவும் புவி வெப்பமாதல் தொடர்ந்தால், பனிப்பாறைகள் இன்னும் வேகமாக உருகும்; கடல் மட்டம் உயரும்; கடற்கரையில் வாழும் மில்லியன் கணக்கான மக்கள் ஆபத்துக்குள்ளாவார்கள். இந்த ஆய்வு நேச்சர் கம்யூனிகேசன்ஸ் (Nature Communications) எனும் இதழில் வெளிவந்துள்ளது.

ஒரு மருந்து - பல பக்கங்கள்  

நம் உடலில் இரத்த சர்க்கரை அளவு இரண்டு வழிகளில் நெறிப்படுத்தப்படுகிறது. கணையம் சுரக்கும் இன்சுலின் இரத்தத்திலுள்ள சர்க்கரையை செல்கள் எடுத்துகொள்ள உதவுகிறது. இதனால் இரத்த சர்க்கரை அளவு குறைகிறது. இதற்கு நேர் எதிராக, குளூக்கான்(glucagon) எனும் ஹார்மோன் ஈரலில் சேமிக்கப்பட்டுள்ள சர்க்கரையை இரத்தத்தில் விடுவிக்கத் தூண்டுகிறது.  தொடர்ந்து ஆற்றலை அளிப்பதற்காக இது நடைபெறுகிறது.  சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தவும் உடல் பருமனைக் குறைப்பதற்கும் இது தொடர்பான ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. 1980இல் GLP-1 (glucagon- like peptide-1) எனும் ஹார்மோன் கண்டுபிடிக்கப்பட்டது.  இது உணவு உண்டபின் இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கிறது;  குளுக்கான் விடுவிப்பதை தடுக்கிறது. இதன் மூலம் சர்க்கரை அளவு சரியாக இருப்பதை உறுதி செய்கிறது.  மேலும் இரைப்பை காலியாவதை மெதுவாக்குகிறது; பசியைக் குறைக்கிறது. ஆகவே உடல் பருமனைக் குறைக்க திறனுள்ள ஒன்றாக உள்ளது. இந்த மருந்துகள் மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக கோளாறுகள், போதைப் பழக்க நீக்கம், அல்சைமர், பார்கின்சன் ஆகிய நோய்களுக்கும் உதவும் என்று காட்டுகின்றன.    இந்த ஹார்மோனின் செயல்பாடுகளை நிரூபித்தவர்களில் நான்கு விஞ்ஞானிகள் முக்கியமானவர்கள். முதன்முதலில் இதைப் பிரித்தெடுத்தவர் சுவெட்லானா மாஜ்சவ்  எனும் பெண்மணி. இதனை மேம்படுத்தியவர்கள் டேனியல் டிரக்கர், ஜோயல் ஹபீனர், ஜேனஸ் ஜூல் ஹோஸ்ட் ஆகியோர். இந்த மூன்று பெருக்கும் பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. ஆய்வுகளிலும் அவர்கள் பெயர்களே குறிப்பிடப்பட்டன. ஏனென்றால் மற்ற துறைகள் போல ஆராய்ச்சி துறையிலும் ஆண்களும் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள தெரிந்தவர்களுமே பலனை அனுபவிக்கிறார்கள். அமைதியானவரும் விருதுகள் பற்றி கவலைப்படாதவருமான சுவெட்லோனா பல சட்ட போராட்டங்களுக்குப் பிறகே அவர் அங்கீகரிக்கப்பட்டார்.   பலகட்ட சோதனைகளுக்குப் பிறகு 15% இலிருந்து 21% வரை உடல் பருமன் குறைவது நிரூபிக்கப்பட்டதால்,  இந்த ஹார்மோனின் பல விதங்கள் அங்கீகரிக்கப்பட்டன.  பல பெயர்களில் இது அமெரிக்காவில் விற்பனையாகிறது. நுகர்வுக் கலாச்சாரம் மேலோங்கியிருக்கும் அமெரிக்க சமுதாயத்தில்  கோடிக்கணக்கானவர்கள் இதை பயன்படுத்துகிறார்கள். ரூ.4 லட்சம் கோடி சந்தை என்று சொல்லப்படுகிறது. 2032இல் 10 மடங்கு அதிகரிக்கும் என்றும் நம்பப்படுகிறது.    ஆனால் இது வசதி படைத்தவர்களுக்கு மட்டுமே பயன்படுகிறது. இதன் விலை ஒருவருக்கு ஆண்டொன்றிற்கு 8.6 இலட்சம் என்பதால் ஏழைகளுக்கு எட்டாக்கனியாகவே உள்ளது. இது நோய் மருந்து என்று வகைப்படுத்தப்படாமல் உடல் பருமன் குறைக்கும் சிகிச்சை என்று இருப்பதால் மருத்துவக் காப்பீடும் கிடைக்காது. இதன் பொது மாதிரிகள்(generic) அறிமுகப்படுத்தும் முயற்சிகள் இருப்பதால் நம்பிக்கை கொள்ளலாம். ஆனால் வழக்கம் போல அறிவுசார் சொத்துரிமை பிரச்சனைகள் உள்ளன என்கிறார் பீப்பிள்ஸ் டெமாக்கரசி கட்டுரையாளர் எஸ்.கிருஷ்ணசாமி.