கந்தகக் கொலை
சின்னக்காமன்பட்டியில் நடந்தது வெடி விபத்தல்ல பச்சைப் படுகொலை பணம் தின்னும் ஆசையில் நக்கித் தின்னும் அதிகாரிகள் செய்யும் தொடர் கொலை கந்தகத்தை பூசிக்கொண்டு கருமாயப்படுவது பட்டாசு மேலான பாசம் அல்ல வாழ்க்கை மீதான பயம் தான் பட்டாசு விற்பதற்கு பாரதூரமான சட்டங்கள் சொல்லி எச்சரிக்கும்போது – பட்டாசு செய்கிற இடத்தின் பாதுகாப்பு குறித்து பதறுவதில்லையே ஏன்? எத்தனை முறை தான் எச்சரிக்கை செய்வது? எரிவதென்னவோ ஏழைகள் தானே என்கிற எகத்தாளம் இவர்களுக்கு கந்தகத்தால் உயிர் கருகிய பின் கண்ணை கசக்கிக் கொண்டு வந்து கருணைத்தொகை தந்து கடந்து போவதால் பயன் ஏதுமில்லை காணிக்கை கை வருவதால் கண்காணிப்பார் யாருமில்லை ஆலை அதிபர்களின் போதை விருந்துகளில் மயங்கிக் கிடப்பதால் அதிகாரப் பற்கள் அத்தனையும் பிடுங்கப்பட்டு அடிமாடுகளாய் அதிகாரிகள்... கோடி கோடியாய்ப் பணம் கொழிக்கும் வெடித்தொழிலால் வேரிழந்த குடும்பங்கள் வீதியில் அனாதைகளாய்... சாதாரணமாக நடந்தால் அது விபத்து அதுவே அசாதாரணமாக நடந்தால் அலட்சியத்தால் நிகழும் படுகொலை தரத்தை ஆய்வு செய்து தகுதியற்ற ஆலைகளின் தகுதியை மறுத்திடாத பொறுப்பற்ற அதிகாரிகளை அத்தனை இறப்புக்கும் பொறுப்பாக்கி அவர்களின் அதிகாரத்தை பறிப்பதே அடுத்த இறப்பை தடுக்கும் அறம் சார் நடவடிக்கை