வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ‘நிசார்!’
ஸ்ரீஹரிகோட்டா, ஜூலை 30 - இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (இஸ்ரோ) அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசாவுடன் இணைந்து உருவாக்கிய ‘நிசார்’ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோள் புதனன்று (ஜூலை 30) வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவுதலின் 27 மணி நேரம் 30 நிமிட கவுண்ட்டவுன் செவ்வாய்க்கிழமை தொடங்கிய நிலையில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2-ஆவது ஏவுதளத்திலிருந்து புதன்கிழமை மாலை 5.40 மணிக்கு ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக விண்ணில் செலுத்தப்பட்டது. புவி கண்காணிப்புக்காக தயாரிக்கப்பட்ட அதிநவீன ரேடார் செயற்கைக்கோளான ‘நிசார்’ மூலம் புவியின் சுற்றுச்சூழல் அமைப்புகள், பருவநிலை மாற்றங்கள், பேரிடா் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்த தகவல்களைப் பெற முடியும். அதாவது, பூமியின் மேற்பரப்பில் ஏற்படும் மிகச்சிறிய மாற்றங்களைக்கூட கண்டறிய முடியும். இந்தச் செயற்கைக்கோள் முழு பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத் திறன் கொண்ட படங்களை இரவு, பகல் என அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும். இதற்காக ‘எல்’ பேண்ட், ‘எஸ்’ பேண்ட் ஆகிய சிந்தடிக் அப்ரேச்சா் ரேடார் தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஒரே செயற்கைக்கோளில் 2 அலைவரிசைகள் கொண்ட கருவிகள் இடம்பெறுவது இதுவே முதல்முறை. நிசார் அனுப்பும் தகவல்களை உலகம் முழுவதும் உள்ள ஆராய்ச்சியாளா்களும் பெற முடியும்.