மக்களுக்காக வாழ்ந்த மகத்தான தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன்
2015 ஜூலை 21 அன்று தன்னுடைய 101ஆவது வயதில் மறைந்த தோழர் வி.எஸ். அச்சுதானந்தன் வாழ்க்கை, கேரளாவின் வரலாற்றில் பொதுவாகவும், மாநிலத்தின் புரட்சிகர இயக்கத்தின் சூழலில் குறிப்பாகவும் குறிப்பிடத்தக்க ஓர் அத்தியாயமாகும். தோழர் வி.எஸ். என்று தோழர்களால் அன்போடு அழைக்கப்பட்ட அவர், நீடித்த போராட்ட பாரம்பரி யம் மற்றும் மக்களுக்கு நீதியைப் பெற்றுத்தர வேண்டும் என்பதில் அதீதமான அர்ப்பணிப்பு உணர்வின் அடையாளமாகவும் விளங்கினார். அவரது நூறாண்டு கால வாழ்க்கை, கேரளத்தின் நவீன வரலாற்றுடன் பின்னிப்பிணைந்ததாகும். கேரள அரசாங்கத்தின் தலைவராகவும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராகவும், இடது ஜனநாயக முன்னணியின் தலைவராகவும் மற்றும் பல சமயங்களில் எதிர்க்கட்சிகளின் தலைவராகவும் ஆற்றிய அவருடைய பங்களிப்புகள் உண்மையி லேயே ஈடு இணையற்றவை. கேரளாவின் வளமான அரசியல் மரபின் ஒருங்கிணைந்த பகுதியாக வரலாறு இந்தப் பங்களிப்புகளை நினைவுகூர்ந்திடும். வி.எஸ். மறைவு ஒரு சகாப்தத்தின் முடிவைக் குறிக்கிறது. இது கட்சிக்கும், புரட்சிகர இயக்கத்தி ற்கும், பரந்த ஜனநாயக முற்போக்கு இயக்கத்திற்கும் ஓர் ஆழமான இழப்பாகும். கூட்டுத் தலைமை மூலம் மட்டுமே கட்சி இந்த வெற்றிடத்தை நிரப்ப முடியும். பல பத்தாண்டுகளாக அவருடன் பணியாற்றி யவர்களுக்கு, எண்ணற்ற நினைவுகள் மீண்டும் வரும் நேரம் இது.
போராட்டங்களில் வேரூன்றிய வாழ்க்கை
வி.எஸ். அவர்களின் வாழ்க்கை எண்ணற்ற நிகழ்வு களைக் கொண்டது, அவருடைய எல்லையற்ற ஆற்றலாலும், எதையும் தாங்கும் திறனாலும் குறிக்கப்பட்டது. அவருடைய வாழ்க்கை போராட்டங்களில் வேரூன்றியதாக இருந்தது. அவரு டைய வாழ்க்கை, கேரள வரலாற்றிலும், கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் ஓர் உயிர்ப்புமிக்க அத்தியாயமாகும். தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் எழுச்சி களை ஒழுங்கமைப்பதிலிருந்து, நிலப்பிரபுத்துவம் மற்றும் சாதியத்தில் வேரூன்றிய சக்திகளுக்கு எதி ராகப் போராடுவது வரை, மாநிலத்தின் அரசியல் களத்தை வடிவமைப்பதில் அவர் ஒரு தீர்க்கமான பங்கைக் கொண்டிருந்தார். அவர் வாழ்க்கை மிக எளிமையாகத் தொடங்கி, கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வளர்ச்சியின் ஒவ்வொரு படியிலும் முன்னேறி, மாநிலத்தின் முதலமைச்சராக உயர்ந்தார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிறுவனர்களில் ஒருவர்
1964ஆம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி யின் தேசியக் கவுன்சிலிலிருந்து வெளியேறி, மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்கிய 32 தலைவர்க ளில் தோழர் வி.எஸ். அச்சுதானந்தனும் ஒருவர். அவ ருடைய மறைவுடன், அந்த வரலாற்றின் கடைசி உயிருள்ள இணைப்பும் நிறைவு பெற்றுவிட்டது. அவர், தேசிய சுதந்திரப் போராட்டத்தின் பாரம் பரியத்தை, சமகால அரசியல் எதார்த்தங்களுடன் இணைத்தவர். அவரது மறைவின் மூலம் நாம் ஒரு மதிப்புமிக்க அரசியல் இருப்பை இழந்துவிட்டோம். ஒரு கம்யூனிஸ்ட் தலைவராக, சட்டமன்ற உறுப்பி னராக, எதிர்க்கட்சித் தலைவராக, முதலமைச்சராக, வி.எஸ். ஏராளமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். புன்னப்புரா-வயலார் போராட்டத்திற்கு இணையான அளவில், அவர், கஷ்டங்கள், சகிப்புத்தன்மை மற்றும் மக்கள் மீதான அசைக்க முடியாத அர்ப்பணிப்பு ஆகியவற்றால் வடிவமைக்கப்பட்ட வாழ்க்கையின் மூலம் உயர்ந்தார்.
தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் தலைவர்
தோழர் வி.எஸ்., தன் வாழ்க்கையை ஒரு தொழிலா ளியாகத் தொடங்கி, தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் சக்திவாய்ந்த தலைவராக உயர்ந்தார். கட்சி தோழர் வி.எஸ்.ஸை வளர்த்தெடுத்தது. இதனைத் தொடர்ந்து தோழர் வி.எஸ். கட்சியை வளர்த்தெடுத்தார். தோழர் வி.எஸ். 1923ஆம் ஆண்டு பிறந்து, 1940இல் தன்னுடைய 17ஆவது வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 75 ஆண்டுகள் கட்சியின் உறுதியான உறுப்பினராகத் தொடர்ந்தார். குட்ட நாட்டில், விவசாயத் தொழிலாளர்களிடையே கூலி உயர்வுப் போராட்டம் மற்றும் சாதி அடிமைத்தனத்தை ஒழிப்பதற்கான போராட்டம் ஆகியவற்றை முன்னி ன்று நடத்தினார். கிராமங்கள் வழியாக நடந்து சென்று, கூட்டங்களைக் கூட்டி, தொழிலாளர் ஒற்றுமை யைக் கட்டியெழுப்பி, நிலப்பிரபுக்கள் மற்றும் காவல் துறை அடக்குமுறையை மீறி, ஒடுக்கப்பட்டவர்களை ஒரு வலுவான அரசியல் சக்தியாக வளர்த்தெடுத்தார்.
விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் உருவாக்கம்
திருவிதாங்கூர் விவசாயத் தொழிலாளர் சங்கத்தை உருவாக்குவதில் தோழர் வி.எஸ். ஈடு இணையற்ற விதத்தில் பங்களிப்பினைச் செய்திருக்கி றார். பின்னர் அது கேரள மாநில விவசாயத் தொழிலா ளர் சங்கமாக உருவெடுத்தது, இது மாநிலத்தின் மிகப்பெரிய மற்றும் மிகவும் செல்வாக்கு மிக்க தொழி லாளர் இயக்கங்களில் ஒன்றாகும். அவர் தலைமை யிலான எண்ணற்ற போராட்டங்கள் குட்டநாட்டின் சமூக நிலப்பரப்பை மாற்றியமைத்தன. சிறந்த ஊதி யம், வேலைப் பாதுகாப்பு மற்றும் உபரி நிலத்தை மறுபகிர்வு செய்தல் ஆகியவற்றைக் கோரும் இயக் கங்களில் அவர் முன்னணியில் இருந்தார். எண்ணற்ற மைல்கள் நடந்து சென்று தொழிலாளர்களுடன் குடிசைகளில் தங்கி, அவர்களுடன் நேரடியாகப் பேசி, அவர்களின் நம்பிக்கையையும் ஒற்றுமையை யும் வளர்ப்பதற்கான அவரது அயராத முயற்சிகள் ஆயிரக்கணக்கானவர்களை இயக்கத்திற்குள் ஈர்த்தன.
அனுபவத்திலிருந்து அரசியல் சக்தி
தோழர் வி.எஸ். 2001 முதல் 2006 வரை எதிர்க்கட்சித் தலைவராகவும், பின்னர் 2006 முதல் 2011 வரை கேரள முதலமைச்சராகவும், 2011 முதல் 2016 வரை மீண்டும் எதிர்க்கட்சித் தலைவராகவும் பணி யாற்றினார். அவர் வகித்த ஒவ்வொரு பதவியிலும், ஒரு நீடித்த மற்றும் தனித்துவமான அடையாளத்தை விட்டுச் சென்றார். விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் தென்னை நார் தொழிலாளர்களின் கஷ்டங்களை நேரில் அனுப வித்த தோழர் வி.எஸ்., அந்த அனுபவங்களை அரசியல் பலமாக மாற்றினார். சுரண்டப்பட்டவர்களின் விடுதலைக்காக உறுதியாக நின்ற ஒரு தலைவராக, விவசாயத் தொழிலாளர் இயக்கத்தையும் பரந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தையும் உருக்குபோன்ற உறுதி யுடன் முன்னெடுத்தார்.
பரந்த சமூக அக்கறைகள்
தோழர் வி.எஸ்.-இன் தொலைநோக்குப் பார்வை அரசியலுக்கு அப்பாற்பட்டதாகும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் பாலின சமத்து வம் ஆகிய துறைகளில் அவர் தீவிரமாகப் பணியாற்றி னார். இந்த பரந்த ஈடுபாடுகள் மூலம்தான் அவர் பரந்த அளவில் பொதுமக்கள் மத்தியில் மரியாதையைப் பெற்றார். கேரளாவில் இடதுசாரி அரசியலின் நோக்கத்தை விரிவுபடுத்தி, சமூக முக்கியத்துவம் வாய்ந்த பல பிரச்சனைகளை அரசியல் நீரோட்டத் தில் கொண்டு வர அவர் உதவினார்.
சட்டமன்ற பங்களிப்புகள்
தோழர் வி.எஸ். சட்டமன்ற உறுப்பினராக, குறிப்பி டத்தக்க அளவிற்குப் பங்களிப்புகளைச் செய் திருக்கிறார். 1967 மற்றும் 1970ஆம் ஆண்டுகளில் அம்பலப்புழாவிலிருந்தும், 1991இல் மாராரிகுளத்தி லிருந்தும், 2001 முதல் 2021 வரை பாலக்காடு மாவட்டத் தில் உள்ள மலம்புழாவிலிருந்தும் கேரள சட்டமன்றத் திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2016 முதல் 2021 வரை கேரள நிர்வாக சீர்திருத்த ஆணை யத்தின் தலைவராகவும் பணியாற்றினார். முதல மைச்சராக இருந்த காலத்தில், கட்சி மற்றும் இடது ஜனநாயக முன்னணி வகுத்த கொள்கைகளை செயல் படுத்துவதன் மூலம் கேரளாவை முன்னோக்கி அழை த்துச் சென்றார். நெருக்கடியான காலங்களிலும் அவர் அசைக்க முடியாத வலிமையுடன் அரசாங்கத்தை வழிநடத்தினார். எதிர்க்கட்சித் தலைவராகவும் சட்டமன்ற விவாதங்களில் தீவிர பங்காற்றினார். இவ்வாறாக, கேரள அரசியல் வரலாற்றில் தோழர் வி.எஸ். ஓர் உன்னத நிலைக்கு உயர்ந்தார். தோழர் வி.எஸ். அவர்களின் மறைவு கட்சிக்கும், கேரளா விற்கும், நாட்டிற்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பாகும். இருப்பினும், நீதி, சமத்துவம் மற்றும் மக்களின் நலனுக்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் தலை முறையினருக்கு அவரது பாரம்பரிய மரபு என்றென் றும் ஊக்கமளித்திடும்.