articles

img

வண்ணக்கதிர் 1

கரிசல்குயிலுக்கு ஒரு கவிதை  - நவகவி

உண்மையான இசைஞனது ஓசையின் நதிமூலத்தை இதழில் தேடாதே.... அவனது இதயத்தில் தேடு   சாதாரண இசைப்பண்டிதனின் நாதம் வித்தியாசமாய் அவனின் நாவில் நடமிடும். எனினும் அவனின் இசை வித்தை புரியும் ;ஆனால் விந்தை புரியாது !  முற்போக்கு இசையோ பீரங்கிக்குத் துளை இட்டு புல்லாங்குழலாய் இசைப்பது  யானையின் துதிக்கையே நாதசுரம் ஆகும் ரசவாதம், கம்பீரம்  முற்போக்கு இசைஞனின் மூச்சுக்குழலில் முகாம் இடும்!   எனினும் நம்மைப் பொறுத்தவரை மதுர இசையும் அதிரும் இசைதான்! ஏன் எனில் புரட்சியின் இசை எ ஃகு உதடுகளால் மட்டுமா? பூவின் இதழ்களாலும் இசைக்கப்பட வேண்டி இருக்கிறது.  கிருஷ்ணசாமியின் கீதம் மதுரகீதம்! மயக்கும் கீதம்! இரும்பின் எழுச்சி கொஞ்சம்!...அதை அரும்பின் மலர்ச்சி விஞ்சும்.  கரிசல்குயிலின் கானம்_ சபாக்களுக்கானதல்ல  சாதாரணர்களுக்கானது! அதிமேதாவிகளுக்கானதல்ல - ஆட்டிடையர்களுக்கானது!  கர்னாடக சங்கீதம் தாளம் கொட்டி தலையாட்ட மட்டுமா? தோள் கொட்டி சூள் உரைக்கவும் தான். அதற்கான தொடக்கம் கரிசல்குயிலின் கானத்தில் தேடிப் பார்த்தால் கிடைக்கும் ! சந்தித் தெருக்களே அவன் சபாக்கள்! நாரதகானம் அல்ல! நரகானம்... அதாவது நரர்களின் கானம் நண்பனே உனது கானம்  ஜால்ராவே இல்லாத சங்கீதக் கச்சேரி உன்னுடையது என்பதில் உண்மை ஏது? ஜனங்களே உனது ஜால்ரா! அவர்களின் மனங்களே உனது மத்தளம்!  அதோ பாருங்கள்! சங்கீத சாம்ராட் டுகள் ! ஆள் அற்ற சபாக்களில் அவர்களுக்கும் உண்டு ஆர்வலர்கள்!.... அதாவது.... ஓங்கிய சபாக்கூரையில் ஒட்டடைகளே செவிகளாய் அவர்களின்  ஆலாபனைக்கு அதிரும்!  (சங்கீத சாம்ராட்டுகளின் சரிகமபதநிக்கு பயந்து தூக்கிட்டு உத்தரத்தில்  ஒட்டடைகள் தொங்குவதாகவும்  உரைக்கிறார்கள்!)  இவர்கள் இசை இப்படி இருக்க, செந்தமிழ் நாட்டுத் தெருவின்,வீதியின் கதவுகள் எல்லாம் காதுகள் ஆகி விரியத் திறந்து கரிசல்குயிலின் வீரிய இசையை விழுங்கும்! சூரிய இசையை அருந்தும் ! சுத்த கர்னாடகமாகவே - பழம் பஞ்சாங்கமாகவே - கர்னாடக இசை காபந்து செய்யப்படுவதால் அதை கேட்கும் செவிகள் எல்லாம் செல்லரிக்கும்!ஆனால்  கரிசல் குயிலின் கானம் கேட்கும் செவிகள் மட்டுமா.... புல்லும் கூட புல்லரிக்கும்! கல்லும் கூட கண்பனிக்கும்!.  சிங்கப் பிடரியின் சிலிர்ப்பை -            சின்ன அணிலின் குதிப்பை -       ஊஞ்சலின் அசைவை -     உயர்ந்தெழும் பறவையதன்       இருசிறகின் ஒத்திசைவை -                 கானம் இசைக்கும் அவன்   கண்டம் கொண்டு வரும்!  நீரில் கண்டம் நெருப்பில் கண்டம் - என்று  ஜோசியம் சிலருக்கு சொல்லப்படும்!.... ஆனால் சங்கீத சிகாமணிகள் சிலரின் சனாதன ராகத்தை கேட்கிற நமக்கு இசையிலும்  கண்டம் இருப்பதாய் தோன்றும்!  இவ்விதம் அவர்கள் இசை இசையாய் இல்லாமல் வசையாய் இருக்கிறது!...ஆனால் கரிசல்குயிலின் கண்டம் இசைக்கும் கானம் கேட்கையில் தீவு கூட கண்டம் ஆகி வியந்து விரியும் ! கண்டம் கூட வானம் ஆகி அகன்று தெரியும்!  அண்டத்தை, அகிலத்தை, முன்னோக்கித் தள்ளும் மூச்சுக்காற்று, கரிசல்குயிலின் கண்டத்தில் பிறக்கும் கானத்தில்  கலந்து வருகிறது! கனிந்து சொரிகிறது! உதட்டில் இருந்தல்ல உண்மையில் இருந்து  வாயில் இருந்தல்ல வாய்மையில் இருந்து - நாக்கில் இருந்தல்ல நம்பிக்கையில் இருந்து - கிருஷ்ண சாமியின் கீதம்  கிளர்ந்து வருகிறது சுடரும் சூரிய ராகம் சுழன்று வருகிறது!  சுவாசக் காற்றை அளவுக்கு மீறி நுரையீரல் அனுமதிப்பதில்லை. நிஜக்கலைஞனும் நேசிக்கும் மக்களிடமிருந்து பாசத்தை சுரண்டுவானே தவிர பணத்தைச் சுரண்டுவதில்லை! அப்படிப்பட்ட கலைஞன் நம் அன்பு இசைஞன் கிருஷ்ணசாமி!  வீசும் தென்றலுக்கு காசா குறிக்கோள்? பேசும் அருவிக்கு பணமா குறிக்கோள்? வாசப் பூவுக்கு கூலியா குறிக்கோள்? வானவில்லுக்கு துட்டா குறிக்கோள்? அல்ல அல்ல! அது போல் மக்கள் கலைஞர்களும் தொகை பெரிதாய் கேட்பதில்லை! தொண்டு செய்ய புதுப் புதிதாய் வகை கேட்டு வழிகேட்டு சிந்திக்கவே நேரம் கேட்பர்.  செயல்படவே மேடை கேட்பர். சில்லரையா அதிகம் கேட்பர்?  அதனால் தான் சொன்னேன் கரிசல்குயிலின் கீதம் ஜீவன கீதம் அல்ல ஜீவகீதம்! கரிசல்குயிலின் பெட்டகத்தில் காசுகள் சேமிக்கப்பட வில்லை. கைதட்டல்களே சேமிக்கப்படுகின்றன! கரிசல் குயிலின்வாசல் முற்றம் வைரங்களால் அல்ல வாழ்த்துக்களால் நிரம்பியுள்ளது!  தென்றல் அடிக்கும் திசை தேடி நாம் தான் சென்று துய்க்க வேண்டும். கரிசல் குயிலின் கானமோ நம் ஊர் தேடி வந்து உலவி விட்டுப் போகும்! இடம்தேடி வந்து இசைத்துவிட்டுப் போகும்!  வாழையை தென்னையை வளர்த்தல் போல் இவன் தோழமை என்னுமோர் தோட்டம் போட்டவன்! இசையை வாழ்வுடன் ஒட்டி இணைத்திவன் பாமர நெஞ்சில் பதியன் போட்டவன்! மக்கள் கலைஞன் எப்படி இருக்க வேண்டும் என்பதன் இலக்கணம்! மடிக்கனம் ஏது!அது மட்டுமா அவன் மண்டையில் ஏது தலைக்கனம் ?  கரிசல் குயிலின் இசை வாகனம் ஏறி என் பாட்டு போகும் நாட்டு உலா! பண் போகும் விண் உலா! என் பாட்டுக்கு மட்டுமா?  பாடகன் கிருஷ்ணசாமி பாட்டு கட்டுபவர்க்கெல்லாம் மெட்டு கட்டுபவன்!  தென்படும் பூவில் எல்லாம் தேன் உறிஞ்சும் தேனீ! இதுவே கரிசலின் இசைப் பாணி. இந்தப் பூ தான் இவன் சொந்தப் பூ என சொல்லுதல் எவ்விதம்? சகல வாசப் பூவும் அவனுக்கு சம்மதம்!  கண்ணதாசனுக்கு எம்.எஸ்.வி .போல எனக்கு கரிசல்குயில் என்பது புகழ்ந்து சொன்னது. புரிந்து சொன்னது அல்ல ! கலைஞன் கிருஷ்ணசாமி காகிதப் பூவிலும் தேன் கிடைக்காதா? என தேடி அலைபவன் என தெரிந்து கொள்க!  தவிட்டுக் கவியிலும் தங்க இசையை தெள்ளி எடுத்துசேகரம் செய்பவன்! எம்மைப் பொறுத்தவரை இசையாவது யாதெனின்..... ஒழுங்கமைந்த சத்தம் ஏந்தி யாம்நிகழ்த்தும் யுத்தம் ! பாட்டுப் பணியே எமக்கான நாட்டுப் பணி. விசை கொள் இசை எனும் வேட்டுப் பணி! தமிழ் இசையை”செந்”...தமிழ் இசையாய் செய்யும் திருப்பணி !  அந்த சிவப்பு இசையை ஆகாயத்திலும் விஸ்தரிக்க விண்மீன்களுக்கும் வெண்ணிலவுக்கும் மத்தியில் கச்சேரி நடத்த போய்விட்டான் கரிசல் குயில். - நவகவி