articles

img

தீந்தமிழ்ப் பாட்டில் நின்றவர் - எஸ்.வி.வேணுகோபால்

தீந்தமிழ்ப் பாட்டில் நின்றவர் - எஸ்.வி.வேணுகோபால்

பட்டுக்கோட்டையின் பாட்டு - அது  பதினெட்டு சுவைக் கூட்டு  என்று மேடைகள் தோறும் இசைத்துக் கொண்டிருந்த ஒரு மகத்தான இசைப் பாடகன், அதே மக்கள் கவிஞர் பிறந்த நாளில் இயற்கையோடு இரண்டறக் கலந்து விட்டார். பொருளடர்த்தி மிக்க பாடல்களை அழகுற மெட்டமைத்து அசாத்திய குரலெடுத்துப் பாடிக்கொண்டிருந்த ஒரு பறவை வானத்தை வெறித்துப் பார்க்க வைத்து வேதனையில் ஆழ்த்திவிட்டுப் பறந்து போய்விட்டிருக்கிறது.

இசைக் காதலெனும் பித்து

 1988இல் திருச்சியில் நடைபெற்ற இந்தி யன் வங்கி ஊழியர் அசோசியேஷன் (தமிழ்  நாடு) மாநாட்டில் தான் முதலாக அவரைப்  பார்த்தது.  அந்தக் குரலைக் கேட்டுக் கிறு கிறுத்துப் போனது. மீண்டும் எப்போது எப்போது என்ற ஏக்கத்திற்கு உள்ளானது. இசையின் மீதான பெருங்காதல், பித்து அல்லாது வேறென்ன! சொல்லப்போனால், அந்த மாநாட்டில் பாடிய சில பாடல்களை அவர் பிறிதொரு மேடையில் பின்னொரு போதும் பாடிய தாக நினைவில்லை.  அதில் ஒன்று இயற்கை யைக் கொண்டாடும்  ‘பச்சை மரகதப் பட்டு  உடுத்திப் படுத்துக் கிடக்குது இயற்கை’ என்கிற பல்லவியைக் கொண்டது. அதன்  சரணம் ஒன்றில், ‘கக்கக்கா கிக்கிக்கீ குக்  குக்கூ என கானம் இசைத்திடும் குயில்கள்,  தக்கத் தக்கத் திமி தாம் தரிகிட தீம்  திரி கிட தளிர் நடமாடும் மயில்கள்...’.என்பதில் அவர் இழைத்த இழைப்பு இன்னும் நெஞ் சில் ரீங்காரம் இட்டுக்கொண்டிருப்பது.  அதே போலவே, ‘ஜீவிதப் படகு கரை சேர ணும் சேர்ந்து துடுப்பு போடுங்க...சோர்வு நீங்க ஜோராக செலுத்துங்க படக நேராக....’  என்ற பல்லவியும், அதைத் தொடர்ந்து ஐ லசா ஓ....ஐ லசா ...ஓ என்ற நீட்டிப்பும் உள் ளுக்குள் ஓடிக் கொண்டே இருக்கிறது என்று இந்த ஆண்டு ஜனவரியில் அவரை மிகவும் தற்செயலாக சந்திக்கையில் சொல்லவும் செய்தேன்....அப்படியே கண்கள் மின்ன அப்படி ஒரு பார்வையும் புன்னகையும் அவர் முகத்தில்.

ராக வருடல்

 தொண்ணூறுகள் கரிசல் குயிலின் பொற்காலம்.  சைதாபேட்டை கலை இர வுக்குள் நுழைந்த தருணம் வாழ் நாள்  மறக்க முடியாதது.  மேடையில் கிருஷ்ண சாமியின் பெயர் அழைக்கப்படவும், அவர் தனது பாடல் நோட்டுப் புத்தகத்தைப் புரட்டி யபடி மைக் எதிரே நிற்கும்போது, மிகவும் தொலைவில் இருந்தபடி பார்த்துக் கொண்  டிருந்த எங்களோடு அன்று இருந்தவர் அடுத்துப் பேச இருந்த நந்தலாலா.  அவர் எங்களிடம் சொல்லிக் கொண்டிருந்தார்: “.....பாத்த இல்ல...குயிலு எப்படி வந்து  நிக்கிறான்னு...இப்ப பாரு ஒரு ராகத்த  மெல்ல முணுமுணுப்பான்...இந்தா எடுத்  துட்டான்...அட்றா அட்றா....சாஸ்திரீய வித்  வான்களுக்கு மட்டும் தான் இந்த இலக்க ணமா....எங்க குயிலு எடுத்து விட்றான் பாரு..ஆமா....அமுத மழையில் தான் பாடப் போறான்.. இது  யாரோட பாட்டுன்னு  தெரியுமில்ல .... ஷாஜகான் எழுதினது....எப்படி பாடப் போறான்னு கவனி...குயிலு... கொல்லுடா...கொல்லுடா ...எங்கள எங்கோ  கொண்டுபோய்க் கொல்லுடா...”

அமுத மழையும்  இலைகள் அழுத இசை இரவும்  

அப்படி பொழிந்தது குயிலின் குரலில்  அமுத மழை.....  இதழில் நெளியும் ஒரு  புன்னகை மின்னல் எனது இதயத்தையும் அன்று கீறியது....வந்திறங்கி குடை பிடிக்க வும், விண் மீனுக்குத் தடை விதிக்கவும் நில வுக்கு உத்தரவுகள் பிறப்பித்துக் கொண்டே  இருந்தார் கிருஷ்ணசாமி ! இளைய மேகங்  கள் வானில் கூடுகிற அதிசயமான நேரத்தை யும், இதயம் நழுவி மறு இதயம் நுழைகிற புது சுகத்தையும் அவரைப் போல் யார் இழைப்பார் .....அதோடு விட்டிருக்கலாம் குயில், பிரளயனின் ஊரடங்கும் சாமத்  துல பாட்டை எடுத்த சமயம் கண்ணீர் வெடிக்  கவும் விம்மவுமாகவே திணறிப் போன  இரவு அது. அதோடு விட்டாரா....’ இலை கள் அழுத ஒரு மழை இரவு’ எனும் உருக்க மான பாடல்...... அந்த ஒரு பாடலில் எத்தனை  எத்தனை இசை நுட்பங்களும், பாவங்க ளும், சொற்பதங்களும்!    மார்ச் 6 , 1993  அன்று எங்கள் சங்கத்தின்  பத்தாண்டு நிறைவு.  பெருங்கூட்டம் நிறைந்திருந்த ராஜா அண்ணாமலை மன்றத்தில், பின்னர் மாவட்டத் தலைநக ரங்களில் எல்லாம் பத்தாண்டு நிறைவின் கொண்டாட்டத்தில் கரிசல் குயிலின் இசை ஒலித்துக் கொண்டே இருந்தது. சங்க உறுப்பினர்கள் மட்டுமல்ல, வங்கியின் உயர் அதிகாரிகள் பலரும் நெருங்கி வந்து  மிகவும் பாராட்டிச் சொல்லியே விடை பெற்றனர் குயிலிடம் !

உணர்வுகளும் உணர்ச்சிகளும் உருவகங்களும்  

பாபர் மசூதி தகர்க்கப்படும் நோக்கில்  நாடு முழுவதும் சங் பரிவாரம் முனைப்பில்  இருந்த நேரத்தில்,  வார இதழ் ஒன்றில், பாபரோ  ராமரோ  பாவம் பாமரர்  என்ற கவிதை ‘யாரோ’ என்ற பெயரில் வந்தி ருந்தது.  கரிசல் குயிலோ, ‘பரதனுக்கு நாடு  தந்து பதினான்காண்டு காடு சென்ற ஸ்ரீராமன் கதை மாறுது.....’ என்ற பாட்டை  எடுத்துச் சுழற்றினார் மேடையெங் கும்.....’இழைகள் பின்னி இணைவதனால் ஏற்ற சேலை கிடைக்குது...வண்ணங்களின் கூட்டுறவால் வானவில் கண் பறிக்குது....மனிதர்களைப் பிரித்து வைக்க என்ன இங்கே நேர்ந்தது...’ என்று கேள்வி எழுப்பும் பாடலை முழங்கினார்.  ‘அந்தி வெயில் பூத்திருக்க...ஆசை யுடன் நான் பார்த்திருக்க’ என்ற காதலின் குழைவு ரசிகர்களைக் கிறங்கடித்து வைத்தி ருந்தது.  ‘மானத்துச் சந்திரன் மன்மதன் இந்தி ரன் வாழ்கின்ற பூமியடா’  ஆவேசம் கொள்ள  வைத்தது.  ‘பாருங்க நம்ம ஊரு பள்ளிக்கொடம்’  விழுந்து விழுந்து சிரிக்க வைத்தது.  ‘கட்டபொம்மனும் சேரனும்  சோழனும் முட்டி மோதும் ரோடு’ பாட லில், படிக்கட்டில் நிக்குற ஜனங்களை பாத்தா.....என்று அவர் ராக ஆலா பனை செய்யுமிடம் கூத்தாட  வைத்தது.   ஒரு ஜமாபந்தி நாளில் மாரிக் கோனார் கொண்டுபோய்க் கொடுக்கும் மனு அடுத்த நிமிடமே வாசல் கடையில் போண்டாவைச் சுருட்டி அவரிடமே வழங்கப்படும் அவலத்தினை கரிசல் குயிலின் குரலில் கேட்க வேண்டும், ‘கலெக்டர் வராரு காரில் ஏறி தாரு ரோட்டுல’ என்று !

கலைஞர்கள் கொண்டாடிய கலைஞர்

 1990களின் இறுதியாக இருக்கும், இந்தியன் வங்கி ஊழியர் அசோசி யேஷன் சார்பில் அவரது பாடல்களை ஓர் ஒலிப்பேழையாக வழங்க முடிவு.  அதில் ஒரு பாடலுக்கு வாசிக்க வந்த  தவில் கலைஞர் படியிறங்கிச் செல்கை யில் ‘அய்யா எப்பேற்பட்ட இசை  ஞானம், நுட்பம், லயம், மூச்சுப் பயிற்சி,  சுருதி சுத்தம்...’. என்று கொண்டாடிக் கூறினார்.  தோழர் உ.வாசுகி அவர்கள்  தான் ஒலிப்பேழைக்கு அறிமுக உரை ஆற்றி இருந்தார்.   குயிலிடம் பிடித்திருந்த முக்கிய மான அம்சம், மற்ற பாடகர்களைக்  கொண்டாடுவது.  விடாத வாசிப்பு.  வாசிப்பின் ரசனையைப் பகிர்வது.  புதிய பாடல்களுக்குத் தான் மெட்டு அமைத்த ரசவாதத்தை உள்ளூர ரசித்த  வண்ணம் எடுத்துக் கூறுவது.

  பால் கொழுக்கட்டை

 தீக்கதிர் உள்ளிட்டு எந்த ஏட்டில் அல்  லது இதழில் வந்திருந்தாலும் அவ ருக்கு நெருக்கமான கருப்பொருள் மீதான படைப்புகளை வாசித்ததும் வஞ்சனை இன்றி அழைத்துப் பாராட் டும் குரல் அவரது! கொரோனா நேரத்  தில் புக் டே இணைய இதழில் இசை  வாழ்க்கை எனும் தொடரை வாட்ஸ்  அப் பகிர்வில் வாசித்தவர், தமது வாழ்க்  கையின் பழைய இசைத்தட்டுகளை உள்ளே சுழல வைத்துவிட்டது என்றார். இளவயதில், சிறிய வீட்டுக்குள் முடங்க முடியாத பள்ளிக்கூடப் பரு வத்தில், வீட்டுப்பாடங்கள், படிப்பு, சம  வயதுக்காரப் பிள்ளைகளோடு ஆட்டம் பாட்டம் எல்லாம் முடித்துக்கொண்டு இரவுத் தூக்கம் எங்கே போடலாம் என்று  அருகே இருந்த ஒரு கோயில் வாச லுக்கோ, பள்ளி மைதானத்தின் பக் கமோ, மரத்தடிக்கோ நடந்து போய்க் கொண்டிருக்கையில் வாய் சும்மா  இருக்காதாம், தெரிந்த திரைப்பட மெட்டுகளை முணுமுணுத்தபடி நடக்கும் அந்த நடை சத்தத்தில் வழி யில் உறங்கி வழியும் பெருசுகள், நடு வயதுக்கார உறவினர்கள், ‘லேய் பால்  கொழுக்கட்டை (இவரது செல்லப் பெயர்), நில்லு, அப்படியே உக்காரு,  பாட்ட முழுசாப் பாடு’ என்று ஆரம் பிப்பார்களாம்.... அவ்வளவுதான் நள்ளி ரவைக் கடந்து ரெண்டு மூணு நாலுன்னு விடிய விடிய கச்சேரி தானாம். சினிமா பாட்டைப் பாடுகை யில் இடையில் மறந்து போகும் சொற்  களுக்கு மாற்றுச் சொற்கள் சொந்த மாக இவர் இறக்கினால், அண்ணன் காரன் கண்டுபிடித்து மடக்கி விடுவாராம்...

காலத்தின் கர்ப்பத்தில் கருவானவர்

 இந்த ஜனவரி மாதம் சென்னைக்கு  வந்தவர், ஒரு ஞாயிறு காலையில் அழைத்து பாரத ஸ்டேட் வங்கியில்  வைத்திருக்கும் கணக்கின் ஸ்டேஸ் மென்ட் உடனே தேவைப்படுகிறது, நாளை ஜெர்மன் தூதரகத்தில் விசா  விஷயமாக நேரில் செல்ல வேண்டும், எப்படியாவது ஏற்பாடு செய்யுங்கள்  என்று அழைத்தார். தோழர் எஸ்.வெங்கட்ராமன், ஞாயிறு இயங்கும் கிளை ஒன்றைத் தொடர்பு கொண்டு பேசி ஏற்பாடு செய்து தந்தார். அப் போது குயில் சொன்னார், ஜெர்மனி செல்வது, கார்ல் மார்க்ஸ் இல்லத்தில் அவரைக் குறித்த நவகவியின் இசைப்  பாடலைப் பாடுவதற்கு என்று. இப்போதோ அண்ணன் தான் வர வேண்டி இருந்தது ஜெர்மனியில் இருந்து தம்பியின் முகத்தைக் கடைசி யாகப் பார்க்க..... ஜனவரி 22 அன்று கவிஞர் நா வே  அருள் ஒருங்கிணைப்பில் வங்கி  அரங்க சார்பில் தமுஎகச நிகழ்ச்சியை,  குயிலின் வருகையை ஒட்டி நடத்திய போது, அற்புதமாகப் பாடினார்.  ஒவ்  வொரு பாடலுக்கும் தான் எப்படி மெட்டு அமைத்தது என்கிற பின்கதை கள் நினைவு கூர்ந்து அந்தந்தப் பாடல்  களை அங்கு இசைக்கவும் செய்தார்.   ‘எட்டயபுரத்தானுக்கு இணையான புலவனை’ என்கிற பாடல் அவருக்கு மிகவும் பிடித்தமானது.  இசைக்கவி ரமணன் மீது பெருமதிப்பும் வியப் பும் உண்டு அவருக்கு. கொஞ்சும் சலங்கை திரைப்படத்தின் ‘சிங்கார வேலனே தேவா’ பாடல், காருகுறிச்சி அருணாசலம் எனும் மகத்தான இசைக்  கலைஞரின் நாதஸ்வர இசை பதிவு செய்யப்பட்ட பிறகு பல்வேறு குரல்கள்  தேடிப் பார்த்து இறுதியில் எஸ் ஜானகி  தேர்வு செய்யப்பட்டு அவர் பாடி முடித்துப் பதிவு செய்து முடித்து, அதற்  கெல்லாம் சில மாதங்கள் கழித்து பம்  பாய் சண்முகானந்தா அரங்கில் கச்சே ரிக்குச் சென்ற சமயம், பிபி ஸ்ரீனிவாஸ்  அறிமுகம் செய்வித்த போதுதான் காரு குறிச்சி அவர்களை நேரில் சந்தித்தா ராம்.  அதை மேற்கோள் காட்டிய கரிசல்  குயில், பல ஆண்டுகள் கழித்துத் தான் இசைக்கவி ரமணன் அவர்களை ஒரு நிகழ்ச்சியில் நேரடியாக சந்தித்தேன் என்று ரசிப்போடு சொன்னார்.  

காந்த ஊசிகள்

 பரிணாமன் எழுதிய ‘மண்ணெண்  ணெய் விளக்கினில் பாட்டுக் கட்டி இந்த  மண்ணுக்குக் கொண்டுவந்தேன்’ எனும் அற்புதமான பாடலை இசைக்கு முன், மகாகவியின் ‘தேடிச் சோறு நிதம்  தின்று’ எனும் புகழார்ந்த கவிதை வரி களை ஒரு தொகையறா போல் அபார மாக இசைப்பார் குயில்.   ‘நான் வீழ்வேன்  என நினைத்தாயோ’ என்கிற இடத்தில்   குயிலின் குரலில் ஒலிக்கும் கம்பீரம் இப்போது நினைக்கும் போது கண்ணீர்  பெருக வைக்கிறது. ‘நாண் பொருந்த தொரு வானவில்லாம் எனில் நாணைப் பொருத்த வந்தார்....எனக்கொரு ஆணை கொடுத்துச் சென்றார்’ என்று தொடங்கும் அந்தப் பாடலின் சரணம் ஒன்றில், ‘தேன் பொருந்ததொரு செந்  தாமரை உண்டோ...திருகிய மீசை கொண்டார்....எந்தன் தீந்தமிழ்ப் பாட்டில் நின்றார்...’ என்று நிறைவு செய்யுமிடத்தில் எத்தனை எத்தனை நுட்ப சங்கதிகளும் இசையழகியலும் ததும்பி நிறையும் என்பதை விவரிக்க முடியாது.  குழந்தைகள் தங்களுக்கு ஒருவர் சொன்ன கதையை அடுத்தவர் சொன்  னால் ரசிப்பதில்லை.  பாட்டி சொன்ன  கதையை மீண்டும் பாட்டி சொல்லக் கேட்கவே விரும்பும், அம்மா சொல்ல வேண்டியது அந்தக் கதையை அல்ல, வேறு கதைகள்.  கரிசல் குயில் குர லில் கேட்ட இசைப்பாடல்கள் அவரது குரலிலேயே உள்ளத்தில் பதிவாகி இருக்க, மீண்டும் காந்த ஊசி தொடும் போது சுழலும் இசைத்தட்டில் அந்தக் குரலைக் கேட்கவே வேட்கையுறும் பேதை மனம். திருவண்ணாமலை அன்புத் தோழர் கருப்பு கருணா மறைவின்போது ஒலித்த பாடல்களில் நெஞ்சு நெகிழ வைத்தது அந்த ஒரு பாடல் என்று அடுத்த நாள் பேசுகையில் எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் குறிப்பிட்டார்.  மகாகவியின் ‘நல்லதோர் வீணை செய்தே’ எனும் பாடல் தான் அது.  தமிழ் அப்படிச் சொன்னாரே, எனக்கும் அந்தப் பாடலைக் கேட்கணும் என்று அழைத்துக் கேட்க, தான் ரேவதி ராகத்தில் மெட்டு அமைத்த சுவாரசிய செய்தியும் சொல்லி அந்தப் பாடலை எனக்காக அலைபேசியில் பாடிய அந்தக் கலைஞர் வேறு யார், கரிசல் குயில் கிருஷ்ணசாமியே தான்....அந்  தப் பாடலை இனி எப்போது கேட்கும் போதும் அவர் நினைவு வராது போகாது. மறைந்த தோழனை எண்ணித் துடித்த துடிப்போடு மாநிலமெங்கணும் இருந்து நூற்றுக் கணக்கில் வந்தி றங்கிய இசைக்கலைஞர்கள் சூழ்ந்து நின்று வழியனுப்ப, செந்தழல் அடைந் தது அவரது தேகம்....யானும் என் கலி யும் எவ்விடம் புகுவோம் எங்கள் தோழனே, கரிசல் குயிலே...