“பொருளாதார தடை: ஏகாதிபத்திய தீவிரவாதம்”
ஈரான் மீது டிரம்ப் தடாலடியாக அறிவித்த பொருளாதாரத் தடை காரணமாக அந்த நாடு பொருளாதார ரீதியாகவும், சமூகரீதியாகவும் சந்திக்கும் பிரச்னைகளையும்,சவால்களையும் மட்டுமின்றி குடும்பங்களின் சீர்குலைவையும் பேசும் படமே, “லைலாவின் சகோதரர்கள்”என்ற ஈரானியத் திரைப்படம்.
லைலா,40 வயதான முதிர்கன்னி. நான்கு தம்பிகளு டனும் வயதான பெற்றோருடனும் டெஹ்ரானிலுள்ள வணிக நிறுவனத்தில் வேலை பார்க்கிறாள். தந்தை இஸ்மாயில் போதை அடிமை.மூத்த தம்பி அலிரஸா அலுமினியத் தொழிலகத்தில் வேலை பார்க்கிறான். பர்வீஸ் மாலில் கழிவறைப் பணியாளன். ஜந்து பெண் குழந்தைகளோடு ஆறாவதாக ஆண் குழந்தை சமீபத்தில் பெற்றவன். பர்கத் டாக்சி ஓட்டு நர். நான்காவது தம்பி மணோச்சர் ஒரு மோசடி நிதி நிறுவன இயக்குநர்.மனைவியிடம் விவாகரத்து பெற்றவன். ஆனால் முதுகுவலியால் அவதிப்படும் லைலாவே மொத்தக் குடும்பத்தையும் வழி நடத்து கிறாள். பொருளாதாரத் தடையால் அலிரசாவின் அலுமினி யக் கம்பெனி நொடிக்கிறது. முன்னறிவிப்பின்றி தொழிற் சாலை மூடப்படுகிறது. அலிரஸா வேலையிழப்பதால் குடும்பம் பொருளாதார ரீதியாகத் தடுமாறுகிறது; கடன் வலையில் சிக்குகிறது. இதிலிருந்து மீளும் முயற்சியாக மாலில் ஒரு கடையை வாடகைக்கு எடுத்து ஸ்டோர் நடத்த முடிவு செய்கிறார்கள்.வங்கிக் கடனுக்கான விளிம்புத் தொகையைச் செலுத்த தம்பிகளிடம் நிதி கேட்கிறாள். மணோச்சர் தன் வீட்டையும்,பர்கத் தன் காரையும் விற்றுப் பணம் கொடுக்கின்றனர்.மற்ற இருவரும் தங்கள் சேமிப்புத் தொகையைத் தருகின்றனர். இச்சமயம் தந்தை இஸ்மாயிலின் சித்தப்பா இறந்து விட, இறந்தவர் உயிலின்படி குடும்பத் தலைமையை வயதில் மூத்தவரான இஸ்மாயில் ஏற்க வேண்டிய தாகிறது.பாரம்பரிய முறைப்படி இஸ்மாயில் நாற்பது தங்கக்காசுகளை இறந்து போனவரின் பேரன் திரு மணத்தின் போது அன்பளிப்பாக வழங்க வேண்டும்.இது குடும்ப மரியாதை. இதற்காக இஸ்மாயில் தன் பிள்ளைகளிடம் தங்கக் காசுகள் வாங்கித்தரக் கேட்டு தொந்தரவு செய்கிறார்; இல்லையெனில் வசிக்கும் வீட்டை விற்கப்போவதாக மிரட்டுகிறார். பெற்ற பிள்ளைகளும், கடைக்காக சேர்த்த பணத்தில் தங்ககாசுகள் வாங்கினால் குடும்ப எதிர்காலம் மோசமாகு மென யோசிக்கின்றனர். இருக்கின்ற பணத்தில் கடையும் வாங்கவேண்டும்.வீட்டை விற்காமல் தந்தைக்கு குடும்பத் தலைமை பொறுப்பையும் பெற வேண்டும். இதற்காக, லைலாவும், தம்பி மார்களும் தந்தைக்குத் தெரியாமல் ஒரு திட்டம் தீட்டுகிறார்கள். திட்டம் வெற்றியா? தோல்வியா? லைலாவின் முதுகு வலிக்கான சிகிச்சை, தொழிற் சாலை கலவரம் மற்றும் இஸ்மாயிலின் சித்தப்பா மறை வையொட்டிய மதச்சடங்குகள் ஆகிய மூன்றையும் அடுத்தடுத்து காண்பித்து, துவங்கும் காட்சிகள் நம்மை நிமிர்ந்து அமரச் செய்கிறது. லைலாவின் சகோதரர்கள் தந்தைக்காக,தங்க காசு வாங்க முற்படுகையில் மணிக்கொரு முறை தங்கத்தின் சந்தைவிலை ஏறுகிறது. மறுநாள் குறையுமென வாங்கச் செல்கையில் ஈரானின் அணுஆயுத ஒப்பந்தத்தை அமெரிக்கா கைவிட்டதால் இன்னும் விலை கூடுதலாகி றது. இதுபற்றி தாயிடம் அலிரஸா வருத்தத்தோடு பகிர்கை யில்,தாய்,”நான் 70 வருடமாக இங்கு வாழ்கிறேன். எனக்குத் தெரிந்து தங்க விலை இறங்கியதாக சரித்திர மில்லை” எனக்கூறுகிறார். பொருளாதாரத் தடையிலான ஈரானிய பணவீக்கம், விலைவாசி உயர்வு,கனவாகிப்போன வாழ்வு போன்ற வற்றை கதையின் போக்கோடு காட்சியாக்கி,ஈரானிய சமூக ஆவணமாகவும் படம் விரிகிறது. திருமண விழாவில் பணம் அல்லது தங்கம் அன்பளிப்பு அளிக்கும் நிகழ்ச்சி,நம்மூர் மொய் விருந்தை ஞாபகப் படுத்துகிறது. மாலில் கழிவறையை பயன்படுத்துபவர்களிடம் பர்வீஸ் இருமடங்கு கட்டணம் வசூலிக்கிறான்.தற்போது பயன்படுத்தியமைக்கும்,அடுத்த முறை பயன்படுத்து வதற்காக முன்கூட்டியே வசூலிப்பதாக,இரு கட்ட ணத்திற்கான காரணத்தை எவ்வித கூச்ச நாச்சமின்றி நியாயப்படுத்துகிறான். கார் லீஸ் என்ற பெயரில் கார் தருவதாகப் பொய் சொல்லி வசூலித்த பணத்தோடு கம்பெனி இயக்குநர் ஓடு வது, பின்னர் அடுத்த நிலையில் உள்ளவர் பொறுப்பு எடுத்து புதியவர்களிடம் வசூலித்து பழைய ஏமாந்த வாடிக்கையாளரிடம் கொடுத்தும் மீதத்தை சுருட்டிக் கொண்டு ஓடுகின்ற தொடர் மோசடி. ஆனால் இறுதி வரை கார்கொடுக்காமல் பணத்தை ரொட்டேசன் செய்வது. இதனை பிசினஸ் என்று மணோச்சர் நியா யப்படுத்துகிறான். இது, பொருளாதார ஸ்திரத்தன்மை யற்ற நாட்டில்,மக்களின் நன்நெறிகள் எப்படி கொஞ்சம் கொஞ்சமாக அரிக்கப்படுகிறது என்பதை நுட்பமாக காட்டுகிறது. உலகை தனக்கு கீழ் கொண்டு வரத் துடிக்கிறது அமெரிக்கா. தன்னை எதிர்க்கும் தேசங்கள் மீது தடையை விதித்து சீர்குலைப்பதும் அதுவே. ஊர் மெச்சு வதற்காக, தலைமை பதவி அடையத் துடிக்கும்,தந்தை இஸ்மாயில். தங்களின் நல் எதிர்காலத்திற்காக போராடும் லைலா சகோதரர்களின் திட்டத்தை தடுத்து குடும்பத்தை நிர்மூலமாக்குவதும் இஸ்மாயிலே. இங்கு, தந்தை இஸ்மாயிலை அமெரிக்காவின் குறியீடாக உணர முடிகிறது. பட இறுதியில் எல்லாமிழந்த லைலா கோபத்தில் சகோதரரர்கள் முன் தந்தையை அறை கிறாள். இந்த அடி இஸ்மாயிலுக்கு மட்டுமல்ல!! சயீத் பௌர்சமிமி என்ற ஈரானிய நடிகரே இஸ்மா யில் ஜோரோப்லொ என்ற தந்தை பாத்திரத்தில் நடித்துள்ளார். தாரனா அலிடோட்ஷ்தி, அக்கா லைலா ஜோரோப்லொ என்ற பாத்திரமும், நவிட் மொகமதஷா மூத்த சகோதரரான அலிரஸா பாத்திரமும் ஏற்றுள்ள னர். இவர்கள் மூவரும் உணர்ச்சிகரமான நடிப்பைத் தந்துள்ளனர். மற்றனைவரின் நடிப்பும் படத்தின் சிறப்பான நகர்வுக்கு பேருதவி புரிந்துள்ளது. வாரிசை அறிவிக்கும் கல்யாண வைபவத்தை மஞ்சள் நிற பின்புலத்திலும், தொழிற்சாலை கலவரக் காட்சிகளை பரபரப்பான கேமராக் கோணங்களிலும் காட்டி அசத்தியுள்ளார் ஒளிப்பதிவாளர். பிறந்த நாள் கொண்டாட்டத்தில் அலிரஸா அழுதுகொண்டே குழந்தை களை மகிழ்விக்க ஆடும் காட்சியின் பின்னணி இசை, மனதை அழுத்தக்கூடியது. சைத் ரூஸ்டாய்,தயாரித்து திரைக்கதை எழுதி தனித்துவமாக இயக்கியுமுள்ளார். திரைப்படக் கலை மற்றும் புதிய சினிமாவை அங்கீகரித்து ஊக்குவிக்க வழங்கும் கேன்ஸ் 2022க்கான பிப்ரெஸ்ஸி (எப்ஐபி ஆர்இஎஸ்சிஐ) விருது, இப்படத்திற்கு வழங்கப்பட்டுள் ளது. முபி-யில் உள்ளது.