இறக்கம்! குலசாமி கும்பிடில் மாடனை இறக்க மஞ்சள் காப்பு,
வேட்டி வெற்றுமார்பு மாலையுடன் வரிசையாக சில பேர்… போன கெளரி வரை சாமியாடிய முதியவர் தனது வாரிசுக்கே மாடனிறங்கவேண்டிய வேண்டுதலோடு மருகி நிற்கிறார்… இருதலைமுறை கோரிக்கை இப்போதாவது வந்து இறங்கனும் மாடனே எதிர்பார்ப்போடு அடுத்த இரு குடும்பத்தார்… வந்தாலும் சரி வராவிட்டாலும் சரி மாடனே முடிவெடுக்கும் மனவோட்டத்தில் ஒரு குடும்பம்… மாடனின் பூஜையின்போது இருசொதைக்கொட்டடிப்பில காட்டுவெளிக் கோயிலே ஆர்ப்பரித்திருந்தாலும் தலைக்கட்டு ஆட்கள் அப்படியொரு அமைதியில்… பூஜையின் உச்சமாய்… என் வீட்டுக்காரர் மேல இறங்கிடாதையா…ன்னு பதைபதைப்போடிருந்தவளின் புருசனிடமே மாடன் வந்து இறங்கக்கண்டு அழுகிறாள் அவள்… உணர்ச்சி தளும்பலில் எதிர்பார்ப்பு உறவுகள் இந்த முறையும் ஏமாந்த கோபத்திலும் இப்புட்டுநாள் சாமியாடிய விசுவாசமில்லையேயென்று விரத்தியாகி முதியவரும் ஒதுங்கிக்கொள்ள… தலைக்கட்டு மொத்தசனமும் கொட்டுசத்தத்தில் மாடனை கைகள் கூப்பி வணங்கியுருக… மாடன் இறங்கியவர் சிலிர்த்தெழுகிறார் மாடனுக்குரிய ஆடையணிகலன்கள் அணிவிக்கப்படுகிறது எழுமிச்சை சொருகிய அருவா ஏந்தி வீறுகொண்டு நடந்த சாமியாடி அவருக்கு ஒரு கால் ஒச்சம்!