tamilnadu

img

பெரம்பலூரில் 100 நாள் வேலைத் திட்டத்தில் பெண் பலி.... ஓய்வு பெற்ற நீதிபதி விசாரணை நடத்துக... தமிழக அரசுக்கு ஏ.லாசர் கோரிக்கை

பெரம்பலூர்:
பெரம்பலூர் அருகே 100 நாள்வேலை திட்டத்தில் பெண் பலியான நிகழ்வு தொடர்பாக ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்ததமிழக அரசு உத்தரவிட வேண்டும் என்று விதொச மாநிலத் தலைவர் ஏ.லாசர் கேட்டுக் கொண்டுள்ளார்.பெரம்பலூர் மாவட்டம் ஆலத் தூர் தாலுகா திம்மூர் கிராமத்தில் 16.9.2020 அன்று தேசிய ஊரக வேலை திட்டத்தில் பணிபுரிந்த ஜெயலட்சுமி (க/பெ சீனிவாசன்) என்பவர் சட்ட விரோத எந்திர பயன்பாட்டினால் டிராக்டர் மோதி பலியானார்.

இந்தசம்பவத்தை மறைக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் முயற்சி செய்துள்ளனர். இது குறித்து அக்கிராம மக்கள் 17.9.2020 அன்று பெரம்பலூர் மாவட்டஆட்சியரிடம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை மனுஅளித்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து விவசாய தொழிலாளர் சங்கமாநில பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கத்துக்கு மனு அளித்ததை தொடர்ந்து 19.9.2020 அன்று விதொச மாவட்ட செயலாளர் பி.ரமேஷ் தலைமையில் பொதுச் செயலாளர் வீ.அமிர்தலிங்கம், மாநிலச் செயலாளர் பழநிசாமி, திருச்சி மாவட்ட செயலாளர் எம்.சந்திரன் ஆகியோர் திம்மூர் ஊராட்சி மன்ற அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. 

எனவே இதைக் கண்டித்து விதொச சார்பில் பெரம்பலூர் மாவட்டஆட்சியர் அலுவலகத்தை முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு மனு அளிக்கப்பட்டது. விதொச மாவட்டச் செயலாளர் பி.ரமேஷ் தலைமை வகித்தார்.முன்னாள் எம்எல்ஏவும் மாநிலதலைவருமாகிய ஏ.லாசர் கண்டன உரையாற்றினார். மாநில செயலாளர் எம்.சின்னதுரை, மாவட்டச் செயலாளர் கள் ஆர்.மணிவேல் (சிபிஎம்), குன்னம் சி.ராஜேந்திரன் (திமுக), வீ.ஞானசேகரன் (சிபிஐ), ஆர்.துரைராஜ் (மதிமுக), என்.செல்லதுரை (விவசாயிகள் சங்கம்) ஆகியோர் சம்பவம் குறித்து விளக்கி பேசினர். 

ஆட்சியர் அலட்சியம்
பின்னர் செய்தியாளர்களிடம் ஏ.லாசர் அளித்த பேட்டியில், 100 நாள் வேலை திட்டத்தில் எந்திரங்கள் பயன்படுத்தக்கூடாது என்பதையும் மீறிபயன்படுத்தியதால் தான் இந்த மரணம் நிகழ்ந்துள்ளது. இதற்கு காரணமான ஊராட்சித் தலைவர், துணைத் தலைவர், வட்டாரவளர்ச்சி அலுவலர், ஊராட்சி செயலாளர் ஆகியோர் மீது குற்ற வழக்குப் பதிவு செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு பயன் படுத்திய இயந்திரங்களை பறிமுதல் செய்ய வேண்டும். உயிர்ப் பலியான ஜெயலட்சுமியின் குடும்பத்திற்கு 20 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும். அவரது கணவருக்கு அரசுவேலை வழங்குவதோடு தாயை இழந்து வாடும் இரண்டு குழந்தைகளின் கல்விச்செலவை அரசே ஏற்கவேண்டும். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்து விளக்கம் கேட்கமுயற்சி மேற்கொண்டோம். ஆனால்மக்கள் கோரிக்கைகளுக்கு விளக்கம்அளிக்க முடியாத ஆட்சியராக பெரம் பலூர் மாவட்ட ஆட்சியர் உள்ளார். மேலும் தொலை பேசி வாயிலாக தெரிவிக்க முயற்சிசெய்தோம். அதுவும் பயனளிக்கவில்லை. இப்படி இருக்கும் நிலையில் இந்த சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்காது என்பது தெளிவாகிறது.

எனவே திம்மூர் கிராமத்தில் 100நாள் வேலை திட்டத்தில் மிகப்பெரியமோசடி நடைபெற்று உள்ளது. இதற்கு ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரணை நடத்த தமிழக அரசு உத்தரவிட வேண்டும். உரிய விசாரணை நடத்தி நிவாரணம் வழங்காவிட்டால் அனைத்து ஜனநாயக அமைப்புகளுடன் சேர்ந்து விவசாயதொழிலாளர்கள் சங்கம் சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று அவர் தெரிவித்தார்.