கேரள மாநிலத்தைச் சேர்ந்த கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் சத்தீஸ்கர் மாநிலத்தில் பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் இடதுசாரி எம்.பி-க்கள் போராட்டம் நடத்தினர்.
கேரளத்தை சேர்ந்த கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் ப்ரீத்தி மேரி மற்றும் வந்தனா ஃப்ரான்சிஸ், சத்தீஸ்கர் மாநிலத்தின் நாராயண்பூர் பகுதியில் இருந்து சமையல் வேலைக்காக 3 பெண்களை ரயிலில் ஆக்ராவுக்கு அழைத்து சென்றுள்ளனர். இதை அறிந்து, அங்கு வந்த பஜ்ரங்க் தள் அமைப்பினர், கன்னியாஸ்திரிகள் அப்பெண்களை கடத்தி சென்று மதமாற்றம் செய்வதாக பொய்யான குற்றச்சாட்டை கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும், கன்னியாஸ்திரிகள் மீது தாக்குதலும் நடத்தியுள்ளனர். இதை தொடர்ந்து, இரு கன்னியாஸ்திரிகளையும், அவர்களை தாக்கிய சுக்மான் மண்டாவி ஆகியோரை துருக் ரயில்வே போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த நிலையில், கிறிஸ்தவ கன்னியாஸ்திரிகள் பொய்யான குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளதை கண்டித்து நாடாளுமன்ற வளாகத்தில் ராதாகிருஷ்ணன், ஜான் பிரிட்டாஸ், பி.சந்தோஷ், சிவதாசன், எ.எ.ரஹிம், ஆர்.சச்சிதானந்தம் ஆகிய இடதுசாரி கட்சி எம்.பி-க்கள் போராட்டம் நடத்தினர்.