பொது வகுப்பு பெட்டிகள் குறைப்பு இல்லையாம்!
திண்டுக்கல், கரூர் எம்.பிக்களின் கேள்விக்கு ரயில்வே அமைச்சர் சமாளிப்பு
புதுதில்லி, ஜூலை 28 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஆர். சச்சிதானந்தம், கரூர் காங்கிரஸ் உறுப்பினர் எஸ். ஜோதிமணி எம்.பியுடன் இணைந்து மக்களவையில் நட்சத்திர கேள்வி எண் 50 மூலம் ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் ரயில்களில் பொது வகுப்பு பெட்டிகள் குறைப்பு குறித்து ஐந்து முக்கியமான கேள்விகளை எழுப்பினார். எழுப்பப்பட்ட கேள்விகள் கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு ரயில் மண்டலங்களில் எத்தனை பொது வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டன? மண்டல வாரியான விளக்கம் மற்றும் குறைப்பிற்கான காரணங்கள் என்ன? கடந்த ஐந்து நிதியாண்டுகளில் 2025 மார்ச் 31 வரை பொது வகுப்பு பெட்டிகளில் பயணித்த பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு? இத்தகைய பெட்டிகள் குறைப்பின் காரணமாக பாதிக்கப்பட்ட பயணிகளின் எண்ணிக்கை எவ்வளவு? அவர்களுக்கு என்ன மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன? பொது வகுப்பு பயணத்திற்கான தேவை குறித்து அரசு ஏதேனும் ஆய்வு நடத்தி யுள்ளதா? அத்தகைய ஆய்வின் விவரங்கள் என்ன? ஆய்வு நடத்தாமல் இருந்தால் அதற்கான காரணங்கள் என்ன? ரயில்வே அமைச்சரின் பதில் இக்கேள்விகளுக்கு ரயில், தகவல் ஒலிபரப்பு மற்றும் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்துள்ள எழுத்துப் பூர்வ பதிலில் பொது வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட வில்லை என்று மறுத்துள்ளார். ரயில்வே பொது வகுப்பு பயண வசதி களை கணிசமாக அதிகரித்துள்ளது. 2024-25 நிதியாண்டில் மட்டும் 1,250 பொது வகுப்பு பெட்டிகள் பல்வேறு நீண்ட தூர ரயில்களில் பயன்படுத்தப்பட்டுள்ளன. ஏசி இல்லாத பெட்டிகளின் சதவீதம் கணிச மாக அதிகரித்து சுமார் 70 சதவீதம். தற்போது 57,200 ஏசி இல்லாத பெட்டிகள் (பொது மற்றும் ஸ்லீப்பர்) மற்றும் 25,000 ஏசி பெட்டி கள் என மொத்தம் 82,200 பெட்டிகள் உள்ளன. பொது வகுப்பு பயணிகளின் எண் ணிக்கை 2020-21இல் 99 கோடியிலிருந்து 2024-25இல் 651 கோடியாக ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. மொத்தம் 69 லட்சம் இருக்கைகளில் ஏசி இல்லாத இருக்கைகள் 54 லட்சம் (78 சத வீதம்) மற்றும் ஏசி இருக்கைகள் 15 லட்சம் (22 சதவீதம்). அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் என்ற முழுவதும் ஏசி இல்லாத நவீன ரயில் திட்டத்தின் கீழ் 14 சேவைகள் இயங்கி வருகின்றன. ஒவ்வொரு ரயிலிலும் 8 ஸ்லீப்பர் கிளாஸ் பெட்டிகள் மற்றும் 11 பொது வகுப்பு பெட்டிகள். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 17,000 ஏசி இல்லாத பொது/ஸ்லீப்பர் பெட்டிகள் தயாரிக்கும் சிறப்பு திட்டம் உள்ளது. 22 பெட்டிகள் கொண்ட மெயில்/எக்ஸ்பிரஸ் ரயில்களில் 12 பொது வகுப்பு மற்றும் ஸ்லீப்பர் பெட்டிகள், 8 ஏசி பெட்டிகள் என்ற தற்போதைய கொள்கை அமலாக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அமைச்சர் தெரிவித்துள்ளார். எம்.பியின் விமர்சனம் திண்டுக்கல் எம்.பி ஆர். சச்சிதா னந்தம் அமைச்சரின் பதிலில் அதிருப்தி தெரிவித்துள்ளார். அமைச்சர் முழு உண்மையைச் சொல்லாமல் சமாளித்துள்ள தாக கண்டனம் தெரிவித்துள்ளார். தான் கேட்ட கேள்விகளுக்கு அமைச்சர் நேரடியான பதில் அளிக்கவில்லை என்று கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் எத்தனை பொது வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டன என்ற முதல் கேள்விக்கு வெளிப்படையான பதில் கிடைக்கவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார். மண்டல வாரியான குறிப்பிட்ட தகவல் களை வழங்காமல் பொதுவான புள்ளி விவரங்களை மட்டும் கொடுத்து சமாளித்துள்ளதாக குறை கூறியுள்ளார். கடந்த இரண்டு ஆண்டுகளில் குறிப்பிட்ட ரயில்களில் பொது வகுப்பு பெட்டிகள் கணி சமாக குறைக்கப்பட்டுள்ளன; ஆனால் அமைச்சர் இதை ஒப்புக்கொள்ளாமல் மொத்த புள்ளிவிவரங்களை மட்டும் கொடுத்து உண்மையை மறைத்துள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து இயங்கும் ரயில்களில் பொது வகுப்பு பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதாக பயணிகளிடம் இருந்து தொடர்ந்து புகார்கள் வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தமிழ்நாட்டிலிருந்து வடமாநி லங்களுக்கு செல்லும் ரயில்களில் இந்த பிரச்சனை கடுமையாக உள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளார். 14 அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் என்பது நாடு முழுவதும் இயங்கும் ஆயிரக் கணக்கான ரயில்களுடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவு என்று கூறியுள்ளார். மேலும் இந்த ரயில்களும் பெரும்பாலும் வடமாநிலங்களில்தான் இயங்குகின்றன என்று சுட்டிக்காட்டியுள்ளார். தமிழ்நாட்டிற்கு எத்தனை அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்ற தகவலை அமைச்சர் வெளியிடவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார். ஐந்து ஆண்டுகள் கழித்து பெட்டிகள் தயாரிப்பதாக சொல்வதால் தற்போது பய ணிகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் தீருமா என்று கேட்டுள்ளார். உடனடியாக குறைக் கப்பட்ட பெட்டிகளை மீண்டும் இணைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். அதற்கான உறுதிமொழியை அமைச்சர் வழங்கவில்லை என்று குறை கூறியுள்ளார். பயணிகள் எண்ணிக்கை அதிகரித்துள் ளது என்பதே பொது வகுப்பு பெட்டிகளின் தேவை அதிகமாக உள்ளது என்பதை நிரூபிக்கிறது ; ஆனால் அதற்கேற்ப வசதிகள் அதிகரிக்கப்படவில்லை என்று சுட்டிக்காட்டியுள்ளார்.