தமிழ்நாடு அரசின் திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சி
நாகர்கோவில். ஜூலை. 28- கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில் மாநகராட்சிக்குட்பட்ட வடசேரி பேருந்து நிலைய பகுதியில் தமிழ்நாடு அரசின் சாதனைகள் மற்றும் சிறப்பு திட்டங்கள் குறித்து பொதுமக்கள் அறிந்து கொண்டு பயன்பெறும் வகையில் மாவட்ட செய்தி மக்கள் தொடர்புத்துறையின் சார்பில் புகைப்படக்கண்காட்சி நடைபெற்றது. தமிழக அரசு மக்களுக்கு வழங்கி வரும் பல்வேறு நலத்திட்டங்கள் குறித்தும், மாவட்ட ஆட்சியர் ஆர்.அழகுமீனா மூலம் மக்கள் குறைதீர் கூட்டத்தில் வழங்கப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்த புகைப்படங்கள் கண்காட்சியில் வைக்கப்பட்டிருந்தது. குமரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த புகைப்பட கண்காட்சியை பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டு களித்து சென்றனர்
வாவுபலி பொருட்காட்சி நிறைவு விழா
குழித்துறை, ஜூலை 28- குழித்துறை 100 ஆவது வாவுபலி பொருட்காட்சி நிறைவு விழா வில் நுழைவு கட்டணமாக ரூபாய் 51 லட்சத்தி 1000 வசுலாகியது. இது கடந்த ஆண்டை விட ரூபாய் 5 லட்சம் அதிகமாகும் குழித்துறை நகராட்சி சார்பில் 100 ஆவது வாவுபலி பொருட்காட்சி கடந்த 9 ஆம் தேதி ஆரம்பமாகி, 20 நாள்கள் நடந்தது. நிறைவு விழா பொருட்காட்சி திடலில் உள்ள வி எல்.சி திருமண மண்டபத்தில் மாலை நடைபெ்ற்றது.
கருவுற்ற பசுக்களுக்கு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம்
புதுக்கோட்டை, ஜூலை 28- முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின்கீழ், கருவுற்ற பசுக்களுக்கு ஊட்டச்சத்து வழங்குதல் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மு.அருணா தெரிவித்துள்ளதாவது: கறம்பக்குடி மற்றும் திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்கு நூறு பயனாளிகள் வீதம் இரண்டு ஊராட்சி ஒன்றியங்களில் 200 பயனாளிகள் தேர்வு செய்து ஏழை விவசாயிகளில் கால்நடை வளர்ப்போர் அடையாளம் காணப்பட்டு அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக 50 சதவிகித மானியத்தில் கருவுற்ற பசுக்களுக்கு தீவனம் மற்றும் தாது உப்பு கலவை வழங்கப்படும். கருவுற்ற பசுவை சொந்தமாக பயனாளிகள் வைத்திருக்க வேண்டும். பயனாளிகள், சம்பந்தபட்ட மாவட்டத்தின் தமிழ்நாடு பால் உற்பத்தி கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினராக இருந்து, சங்கத்திற்கு பால் விநியோகம் செய்பவராக இருக்க வேண்டும். பெண்கள், விதவை, ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், ஆதிதிராவிடர் - பழங்குடியினர் பால் உற்பத்தியாளருக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். பயனாளிகளில் 30 சதவிகிதம் பட்டியலிடப்பட்ட மற்றும் பழங்குடியினர் உற்பத்தியாளராக இருக்க வேண்டும். இத்திட்டத்தில் பயன் பெற விரும்புவோர் அருகிலுள்ள கால்நடை மருந்தகம் அல்லது சம்பந்தப்பட்ட பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கம் மூலமாக அணுகி விண்ணப்பிக்கலாம்.