புதுதில்லி:
மார்ச் 23 தியாகிகள் தினத்தை, குடியுரிமைத்திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றை எதிர்த்திடும் விதத்திலும், அனைவருக்குமான நவீன இந்தியாவைக் கட்டி எழுப்பிடும்விதத்திலும் கடைப்பிடிக்குமாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீத்தாராம் யெச்சூரி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் து.ராஜா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்-லிபரேசன்) பொதுச் செயலாளர் திபங்கர் பட்டாச்சார்யா, அகில இந்திய பார்வர்ட் பிளாக் பொதுச் செயலாளர் தேவ பிரத பிஸ்வாஸ், புரட்சி சோசலிஸ்ட் கட்சிப் பொதுச் செயலாளர் மனோஜ் பட்டாச்சார்யா ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய தியாகிகள் தூக்குமேடை ஏறிய மார்ச் 23 தியாகிகள் தினத்தை - குடியுரிமைத் திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைப் பதிவேடு, தேசியக் குடிமக்கள் பதிவேடு ஆகியவற்றுக்கு எதிராகநடைபெற்றுவரும் கிளர்ச்சிப் போராட்டங்களை ஒருமுகப்படுத்திடக்கூடிய விதத்திலும், பகத்சிங் தன் வாழ்நாள் முழுதும் எழுதிய, பாடுபட்ட மற்றும் தியாகம் செய்த நவீன, அனைவருக்குமான இந்தியாவைக் கட்டி எழுப்பக்கூடிய தொலைநோக்குத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்லக்கூடிய விதத்திலும் - கடைப்பிடித்திட வேண்டும் என்று இடதுசாரிக் கட்சிகள் தீர்மானித்திருக்கின்றன.பாஜகவின் கீழ் உள்ள காவல்துறை, தன்னுடைய இந்துத்துவா மதவெறி அடிப்படையில் சமூகத்தைப் பிளவுபடுத்திடக்கூடிய விதத்தில் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது; மக்கள் தங்கள் ஜனநாயக உரிமைகளுக்காக அமைதியாகக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்துவதற்காக அமைப்புரீதியாகத் திரள்வதற்கு எதிராகவும் தாக்குதல்களைத் தொடுத்து வருகிறது. ஜமியா மிலியா பல்கலைக் கழகத்திலும், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகத்திலும் அதனைத் தொடர்ந்து காவல்துறையினரின் பாதுகாப்புடன் முகமூடி அணிந்த குண்டர்கள் ஜேஎன்யுவிலும் மேற்கொண்ட வெட்கக்கேடான தாக்குதல்கள் உத்தரப்பிரதேசத்திலும், இதர பாஜக ஆளும் மாநிலங்களிலும், தில்லியிலும் மிகவும் விஷத்தனமான தாக்குதல்களுடன் தொடர்கின்றன.சமீபத்தில் தலைநகர் தில்லியில் நடைபெற்ற இந்துத்துவாவாதிகளின் வன்முறைவெறியாட்டங்களில் (கடைசியாக வந்துள்ளஅதிகாரபூர்வ அறிக்கையின்படி) குறைந்தபட்சம் 53 பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், இந்த எண் மேலும் அதிகரிக்கக்கூடும். நூற்றுக்கணக்கானவர்கள் காயம் அடைந்திருக்கிறார்கள். பல கோடி ரூபாய்கள் மதிப்பிலான சொத்துக்கள் சூறையாடப்பட்டிருக்கின்றன.
இவை எல்லாவற்றையும்விட மிக மோசமான விதத்தில், வன்முறை வெறியாட்டங்களால் பலியானவர்கள்மீதே தற்போது காவல்துறையினரால் கிரிமினல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன. மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள தில்லிக் காவல்துறை வன்முறை வெறியாட்டங்கள் நடைபெற்றபோது பல இடங்களில் வெறுமனே நின்று கொண்டிருந்தன, பல இடங்களில் குண்டர் கும்பல்கள் குற்றங்களைப் புரிவதற்கு உடந்தையாகவும் இருந்தன.
இதனை இடதுசாரிக் கட்சிகள் கடுமையாகக் கண்டிக்கின்றன. இவ்வன்முறை வெறியாட்டங்கள் தொடர்பாக, குறிப்பிட்டக் காலக் கெடு நிர்ணயித்து, நீதித்துறை விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கோருகின்றன.இடதுசாரிக் கட்சிகள் சமீபத்திய பட்ஜெட்முன்மொழிவுகளுக்கும் தன் கடும் எதிர்ப்பினைத் தெரிவித்துக்கொள்கின்றன. இந்த பட்ஜெட், பணம்படைத்தவர்களும், கார்ப்பரேட்டுகளுக்கும் மிகப் பெரிய அளவில் நிவாரணமும், சலுகைகளும் வாரி வழங்கியிருக்கக்கூடிய அதே சமயத்தில், மக்களின் வாழ்வாதாரங்கள் மீது கடும் தாக்குதல்களைத்தொடுத்திருக்கிறது. பட்ஜெட் முன்மொழிவுகள், நாட்டின் சொத்துக்களான பொதுத்துறை நிறுவனங்களைத் தனியாருக்குத் தாரை வார்த்திட வகை செய்கின்றன. பட்ஜெட், நம்முடைய பொருளாதார அடித்தளங்களைக் கடுமையாக அரித்து வீழ்த்துகிறது. அதே சமயத்தில், மக்களின்மீது முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு அவர்களின் துன்பதுயரங்களை அதிகரிக்கும் விதத்தில் சுமைகளை ஏற்றி இருக்கிறது.
நம் கிளைகள் அனைத்தும் மாநிலத் தலைநகர் மற்றும் மாவட்டத் தலைநகர்களில் இயக்கங்களைக் கூட்டாகத் திட்டமிட்டு மேற்கொண்டிட வேண்டும். பல்வேறு பகுதிகளிலிருந்தும் பேரணிகள் ஏற்பாடு செய்யப்பட வேண்டும். பேரணி முடியும் இடங்களில் அரசியல் கட்சித் தலைவர்கள், கலாச்சாரப் பிரமுகர்கள், முன்னணி ஊழியர்கள் மற்றும்மக்கள் இயக்கங்கள் தங்கள் பொதுக்கூட்டங்களையும், கலை நிகழ்ச்சிகளையும் நடத்திடவேண்டும். விழா நிறைவின்போது, உறுதிமொழி எடுத்துக்கொள்ள வேண்டும்.இவ்வாறு இடதுசாரிக் கட்சிகள் அறைகூவல் விடுத்துள்ளன.
உறுதிமொழி
நாங்கள், இந்திய அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாத்திடவும், நம்முடைய அரசியல் சுதந்திரம், ஒவ்வொரு இந்தியனின் பொருளாதார சுதந்திரமாக மாற்றி அமைத்திடவும், நவீன, அனைவருக்குமான இந்தியாவை உருவாக்குவதற்கான தொலைநோக்குத் திட்டங்களுடன் போராடிய பகத்சிங் மற்றும் அவருடைய சக தோழர்களின் தொலைநோக்குத் திட்டத்தை நிறைவேற்றிடவும் உறுதி ஏற்கிறோம். இத்துடன் நம் அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையின் மீதும் உறுதி ஏற்கிறோம்.
நாங்கள், இந்திய மக்களாகிய நாங்கள், இறையாண்மையுடனான, சோசலிச மதச்சார்பற்ற ஜனநாயகக் குடியரசை நிறுவிடவும்,நம்முடைய குடிமக்கள் அனைவருக்கும் சமூக நீதி, பொருளாதார நீதி, அரசியல் நீதி ஆகியவற்றை வழங்கிடவும்,கருத்துச் சுதந்திரம், கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், நம்பிக்கை, நம்பிக்கையை வெளிப்படுத்தும் சுதந்திரம் ஆகியவற்றை அனைவர் மத்தியிலும் மேம்படுத்துவதற்கான சுதந்திரத்தையும்,ஒவ்வொரு தனிநபரின் கண்ணியத்தையும், நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டையும் உத்தரவாதப்படுத்தும் விதத்தில் சகோதரத்துவத்தையும் பெற்றுத்தரவும் நம்முடைய அரசியல் நிர்ணயசபை 1949 நவம்பர் 26ஆம் நாளன்று, இதன் மூலமாக நிறைவேற்றி, சட்டமாக்கி, நமக்கு அளித்துள்ள இந்த அரசமைப்புச்சட்டத்தின் மூலமாக உருவாக்கியுள்ள இந்தியக் குடியரசை புனிதமானமுறையில் நிறைவேற்றிடவும் உறுதி ஏற்கிறோம்.