tamilnadu

img

குடியுரிமை திருத்தச் சட்டம் பற்றி மீண்டும் விரிவாக விவாதிக்க வேண்டும்... நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

புதுதில்லி:
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் ஆவேசமிக்க போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், இச்சட்டம் தொடர்பாக மீண்டும் விரிவாக விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்ற அனைத்து கட்சி கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31 (இன்று) துவங்க உள்ளது. இந்நிலையில் அனைத்து கட்சி நாடாளுமன்றக்குழு தலைவர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் வியாழனன்று புதுதில்லியில் பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்றது.  இக்கூட்டத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் நாடாளுமன்றத் தலைவர் குலாம் நபி ஆசாத், திமுக நாடாளுமன்ற தலைவர்கள் டி.ஆர்.பாலு, திருச்சி சிவா,  மார்க்சிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன்,  மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன் உள்ளிட்ட 26 கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் பங்கேற்றனர். 

இக்கூட்டத்தில் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இடம்பெறும் விவாத பொருள்கள் குறித்து பங்கேற்ற கட்சிகளின் தலைவர்கள் கேள்வி எழுப்பினர். அதிகரித்து வரும் வேலையின்மை பிரச்சனை,  தொடர்ந்துசரிவை சந்தித்துவரும் ஜிடிபி வளர்ச்சிக் குறியீடு, கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளின் நிலை, குறிப்பாக விவசாயிகளின் கடன்,  விவசாய பொருட்களுக்கான விலைநிர்ணயம் குறித்தும், சீனாவில் ஏற்பட்டிருக்கிறகொரோனா வைரஸ் தாக்குதல் தொடர் பாக சுகாதாரத்துறை மேற்கொண்டுள்ள முன்னெச்சரிக்கை நடவடிக்கை ஆகியவைகுறித்தும் இக்கூட்டத்தில் முன்வைக்கப்பட்டது. 

பரூக் அப்துல்லாவை விடுதலை செய்க!
மேலும், காஷ்மீர் மாநிலத்திற்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்த பிறகு தற்போதுவரை அம்மாநிலத்தில் என்ன நடக்கிறது என்பதேதெரியவில்லை; அம்மாநிலம் இயல்பு நிலைக்கு வந்துள்ளது என மத்திய அரசு தொடர்ந்து தெரிவித்து வருகிறது; ஆனால் காஷ்மீர் மாநிலத்தில் சுற்றுலாவின் மூலம் கிடைக்கப் பெறும் வருவாய் 86 சதவீதம்  பாதிக்கப்பட்டிருக்கிறது.  நாடாளுமன்ற உறுப்பினர் பரூக் அப்துல்லா கடந்த 4 மாதத்திற்கும் மேலாக காஷ்மீர் மாநிலத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். அவரை விடுதலை செய்து இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதை உறுதிசெய்திட வேண்டும். காஷ்மீர் நிலை குறித்தும், கெடுபிடிகள் குறித்தும் இந்த நாடாளுமன்றம் விரிவாக விசாரணை நடத்தி விவாதிக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். 

மீண்டும் விவாதித்திடுக!
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு (சிஏஏ) நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு நிலவி வருகின்றது. எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாமல் பாஜகவின் முதல்வர்களே எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது குறித்த விரிவான விவாதத்தை நாடாளுமன்றத்தில் நடத்த வேண்டும். என்பிஆர் அமலாக்கப்படாது என்கிறார் பிரதமர் மோடி. அதேநேரம் உள்துறைஅமைச்சர் அமித்ஷா நடைமுறைப் படுத்தப்படும் என்கிறார். இருவரும் முரண்பாடாக பேசி வருகிற நிலையில் இது இந்திய மக்களிடையே அவநம்பிக்கையை ஏற்படுத்தி உள்ளது.  இச்சட்டத்தை ஆதரித்து வாக்களித்த வடகிழக்கு மாநிலங்களின் உறுப்பினர்கள் தற்போது இச்சட்டத்தில் இருந்து வடகிழக்கு மாநிலங்களுக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்கிற கோரிக்கையை முன்வைக்கின்றனர். ஆகவே, சிஏஏ குறித்து விரிவான விவாதம் நாடாளுமன்றத்தில் நடத்தப்பட வேண்டும். பதினேழாவது நாடாளுமன்றத்தில் இதுவரை ஒரு கவன ஈர்ப்பு தீர்மானம்கூட அனுமதிக்கப்படவில்லை. இது நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர். 

ஹைட்ரோ கார்பன்
தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் விதிமுறைகளுக்கு மீறி ஹைட்ரோகார்பன் எடுப்பதற்காக விதிகள் மாற்றப்பட்டுள்ளன. கேரளா உள்ளிட்ட பல மாநிலங்கள் நிதி நெருக்கடியில் உள்ளன. மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி பங்கு பாக்கியை தராமல் இழுத்தடித்து வருகிறது. இதனால் இம்மாநிலங்களில் கடும் நிதி நெருக்கடி உருவாகியுள்ளது.மேலும்,  நாடு முழுவதும் காவல்துறையின் அத்துமீறல்கள் குறித்து, குறிப்பாக தில்லி, உபி போன்ற மாநிலங்களில் காவல்துறையினர் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர்கள் வலியுறுத்தினர்.

100 வகையான மசோதாக்கள்
அரசு கொண்டு வரும் 100 வகையான மசோதாக்களுக்கு திருத்தங்கள் அளிக்கப்பட்டாலும், அதில் ஒன்றுகூட ஏற்கப்படாமல் அடாவடித்தனமாக நடந்து கொள்வது குறித்து விவாதிக்க வேண்டும். நாட்டில் கூட்டாட்சித் தத்துவம் கேள்விக்குறியாகி இருக்கிறது. பல மாநிலங்களில் ஆளுநர்களின் அத்துமீறல்கள், அரசியல் தலையீடுகள் குறித்து நாடாளுமன்றம் விவாதிக்க வேண்டும். அனைத்துக் கட்சிகளுக்கும் நாடாளுமன்றத்தில் உரிய நேரத்தை ஒதுக்கவேண்டும். நட்டத்தில் இயங்கும் பொதுத்துறை, லாபத்தில் இயங்கும் பொதுத்துறை என அனைத்து பொதுத்துறை நிறுவனங் களையும் விற்கும் முடிவுக்கு அரசு சென்றுள் ளது. இதுகுறித்த விவாதத்தை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.மேலும், மத்திய அமைச்சர்கள் பலர் தேசபக்தி குறித்து சர்ச்சைக்குள்ளாக்கும் வகையில் பேசி வருகிறார்கள். யார் தேசபக்தர், தேசபத்தி என்றால் என்ன என்பது குறித்து ஒரு விவாதத்தை இந்த நாடாளுமன்ற கூட்டத்தில் நடத்த வேண்டும் என்று அனைத்து கட்சிகளின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் முன்வைத்தனர். 

கருத்துக்களை புறக்கணித்த பிரதமர்
இதையடுத்து கூட்டத்தில் பங்கேற்ற பிரதமர் மோடி, எதிர்க்கட்சித் தலைவர்கள் முன்வைத்த ஒரு கேள்விக்குக் கூட பதில்சொல்லாமல்  நாடாளுமன்றத்தில் பேசிக்கொள்ளலாம் என்று எழுந்து சென்றுவிட்டார். இது  அனைத்து கட்சியின் தலைவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது என நாடாளுமன்ற தகவல்கள் கூறுகின்றன.