தமுஎகச, பாரதி புத்தகாலயத்தின் புத்தக வாசிப்பு நிகழ்வு
ஆதவன் தீட்சண்யா பங்கேற்பு
நாகர்கோவில், ஜுலை 7- தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் நாகர்கோயில் கிளை மற்றும் பாரதி புத்தகாலயம் இணைந்து நாகர்கோயில், செட்டிகுளத்தில் டீம் ஹவுஸ் அரங்கில் புத்தக வாசிப்பு நிகழ்வினை நடத்தின. இதில் சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் ஆதவன் தீ்ட்சண்யா பங்கேற்று பேசினார். குமரி மண்ணில் பிறந்து தற்போது பணி நிமித்தமாக இங்கிலாந்து நாட்டில் வசிக்கும் ஜெ அன்பு எழுதிய தொரசாமி, சாகித்ய அகாதமியின் பால சாகித்ய விருதுபெற்ற விஷ்ணுபுரம் சரவணன் எழுதிய ஒற்றை சிறகு ஓவியா என்னும் இரு புத்தகங்கள் குறித்து பேசப்பட்டது. தொரசாமி புத்தகத்தின் கதைக்களம், கதை நிகழ்ந்த நிலப்பரப்பில் நடந்த சாதீய அவலங்கள், மாமேதை அம்பேத்கர் மீதான கதை நாயகனின் ஈர்ப்பு இப்படியான அம்சங்களை குறித்து தமுஎகச செயலாளரும் எழுத்தாளருமான ஆதவன் தீட்சண்யா, தமுஎகச மாவட்ட தலைவர் ஜெயகாந்தன் இருவரும் பேசினர். ஒற்றை சிறகு ஓவியா புத்தகம் நமக்கு என்ன சொல்கிறது என்பது குறித்து பேராசிரியர் மனோகர ஜஸ்டஸ் பேசினார். எழுத்தாளர் குமரி எழிலன் தலைமை தாங்கி வழி நடத்திய நிகழ்வில் புத்தக ஆர்வலர்கள், மண்ணின் எழுத்தாளர்கள் என பலர் கலந்து கொண்டனர். பாடகர் அருள் மனோகரின் பாடலோடு துவங்கிய நிகழ்வுக்கு பேராசிரியர் மனோகர் ஜஸ்டஸ் வரவேற்புரையும், கவிஞர் தக்கலை ஹலீமா நன்றியுரையும் நிகழ்த்தினர்.