மதுரை எம்பி சு.வெங்கடேசன் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதற்கு மக்கள் நீதி மய்யத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கமல்ஹாசன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், “பஹல்காம் தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தில் இந்திய மக்களின் மனங்களில் கொந்தளித்துக் கொண்டிருந்த கேள்விகளை ஆற்றலுடன் வெளிப்படுத்திய மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் மீது கொலை மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
கருத்துகளை, விமர்சனங்களை எதிர்கொள்ள முடியாத ஜனநாயக விரோத சக்திகளின் ஆயுதம் வன்முறை. மக்கள் பிரதிநிதியை அவரது கடமையைச் செய்ய விடாமல் அச்சுறுத்தும் இத்தகைய கோழைகள் உடனடியாகக் கைது செய்யப்பட வேண்டும். நண்பர் சு.வெங்கடேசனுக்கு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்.” இவ்வாறு தெரிவித்துள்ளார்.