பள்ளி வேன் மீது ரயில் மோதிய விபத்தில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சிபிஎம் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது;
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பத்தில் இன்று காலை பள்ளி வேன் மீது ரயில் மோதிய கோர விபத்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்தில் நிவாஸ் (12) மற்றும் சாருமதி (16) ஆகிய மாணவர்கள் பலியாகியுள்ளனர். வேன் ஓட்டுநர் சங்கர், மாணவர்கள் உள்ளிட்ட 13 பேர் பலத்த காயங்களுடன் கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இவ்விபத்துக்கு காரணமான அலட்சியப் போக்கினை மன்னிக்கவே முடியாது. முறையான விசாரணை மேற்கொண்டு குற்றமிழைத்தோர் தண்டிக்கப்பட வேண்டும்.
காயமுற்ற அனைவருக்கும் உயர் மருத்துவ சிகிச்சை வழங்குவதற்கு உறுதி செய்ய அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும். இத்தகைய விபத்துகள் மீண்டும் நிகழாமல் தடுக்க, ரயில்வே கேட்களில் தானியங்கி அமைப்புகளைப் பொருத்துவது, ரயில்களில் கவச் என்ற பாதுகாப்பு அமைப்பை பொறுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளை அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.