tamilnadu

img

இந்தி திணிப்பை வெறிகொண்டு நடத்துகிறது மோடி அரசு: எடப்பாடி பழனிசாமிக்கு சு.வெங்கடேசன் எம்.பி., பதிலடி!

ரயில்வே அலுவலக நுழைவாயிலில் இந்திப் பெயர் வைக்கப்பட்ட விவகாரத்தில், பிரதமர் மோடியின் தமிழ்ப்பற்றைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு, மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் பதிலடி கொடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட அலுவலக நுழைவாயிலில் இந்தி எழுத்துகள் பொறிக்கப்பட்டதற்கு எழுந்துள்ள எதிர்ப்பு குறித்து அறிக்கை விட்டுள்ள எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி கே. பழனிச்சாமி பிரதமர் மோடியின் தமிழ் பற்றை நன்றியோடு நினைவு கூறியுள்ளார்.

"கர்தவ்ய த்வார்" என பெயரிட்டது ஏன் என்று தமிழகமே கேட்டுக் கொண்டிருக்கிறது. எடப்பாடி அவர்களோ தமிழ் மொழிக்கான அங்கீகாரத்தை தொடர்ந்து மத்திய அரசு அளித்துவருகிறது என்று நற்சான்றிதழ் தருகிறார்.

எடப்பாடி அவர்களே திருச்சியில் ஏதோ தவறுதலாக நடந்துவிட்டது ஒன்றிய அரசு தலையிட்டு திருத்த வேண்டும் என கேட்டுள்ளீர்கள். இந்த தவறை செய்வதே ஒன்றிய பாஜக அரசு தான்.  இதற்கு அடிப்படை காரணமே மோடி அரசின் மொழி கொள்கைதான். 

பிரதமர் மோடி பொறுப்பேற்ற 2014 ஆண்டுக்கு பின் பத்து புதிய ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அந்த பத்துக்கும் இந்தி மற்றும் சமஸ்கிருத பெயர்கள் மட்டுமே சூட்டப்பட்டுள்ளது. 

பெயர்களின் விபரம்வந்தே பாரத், அம்ரித் பாரத், நமோ பாரத், தேஜஸ், ஹம்சபர், அந்த்யோதயா, கதிமான், மகாமனா, உதய், பாரத் கௌரவ் ஆகும்.

ரயில்வே திட்டங்களுக்கு அம்ரித் பாரத், மிஷன் ரப்தார், கதி சக்தி, ரயில் கௌஷல் விகாஸ் யோஜனா, மிஷன் சத்யநிஷ்டா என்று பெயர்களும்,புதிய தொழில் நுட்பத்துக்கு கவச், புகார் பதிவு செய்யும் செயலிக்கு ரயில் மதத் என்றும் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

இந்தி மட்டுமே இந்தியா என்ற மொழி கொள்கையோடு இந்தி திணிப்பை வெறிகொண்டு நடத்துகிறது மோடி அரசு. அதற்கு எதிராக தமிழக மக்கள் போராடும் போது மோடியின் தமிழ் பற்றை பாராட்டி அறிக்கை வெளியிடுவது போன்ற அவமானம் வேறொன்றும் இல்லை. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.