tamilnadu

img

அரசுக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை 50சதவீதமே... ஏழை, எளிய, கிராமப்புற மாணவர்களின் உயர்கல்விக் கனவு நனவாகுமா?

தமிழகத்தில் உள்ள 109 அரசு கலை மற்றும்அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. கடந்த கல்வி ஆண்டுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கும்போது குறைவான மாணவர்கள் சேர்க்கையே இதுவரை  நடைபெற்றுள்ளது. பொதுவாக கடந்த காலங்களில் முதல் நாளே  சராசரி 90  சதவீதம்அளவிற்கு மாணவர் சேர்க்கை நிறைவு பெற்று விடுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு மட்டும் சராசரியாக  50 சதவீத   அளவே மாணவர் சேர்க்கைநடந்திருப்பதாக   தகவல்கள் தெரிவிக்கின்றன. சமூக ஆர்வலர்கள், கல்வியாளர்கள், முன்னாள் மாணவர்கள்  இந்த வீழ்ச்சிக்கு  நான்குகாரணங்களை அடிப்படையாக குறிப்பிடு கின்றனர்.  

 முதலாவது, இந்த ஆண்டு இணையதளத்தில் விண்ணப்பிக்க ஜூலை 21 இல் இருந்து ஜூலை31 முடியவும் சான்றிதழ் பதிவேற்றம் செய்வதற்குஆகஸ்ட் 1  லிருந்து ஆகஸ்ட் 10 வரையும்கால அவகாசம் அளிக்கப்பட்டு இருந்தது. பதிவேற்றம் செய்து முடிந்த பத்து நாட்களுக்குப் பிறகுதான் மாணவர் சேர்க்கை பற்றிய அறிவிப்பை கல்லூரி கல்வித்துறை இயக்குனர் வெளியிட்டார்.  இந்நிலையில் உயர் கல்வித்துறையின் தாமதத்தை   தனியார் கல்லூரிகள் வசதியாக பயன்படுத்திக் கொண்டன.  தனியார் கல்லூரிகளில் ஆகஸ்ட் முதல் வாரத்திலேயே எல்லா துறைகளிலும்  மாணவர் சேர்க்கை கிட்டத்தட்ட நிறைவு செய்துவிட்டதாக தகவல்கள் வந்தன.  மாநிலஅரசின் உயர் கல்வித்துறையால் ஏற்படுத்தப்பட்ட தாமதத்தால் இந்த ஆண்டு தங்கள்   கல்லூரி கல்வி  எவ்வாறு அமையுமோ  என்ற அச்சம் கவலை தவிப்பின் காரணமாக தனியார் கல்லூரிகளுக்கு பல்வேறு பொருளாதார பிரச்சனைகளுக்கு மத்தியில் மாணவர்கள் சென்றுவிட்டனர்  என்று  முன்னாள் மாணவர்கள், கல்வியாளர்கள் கூறுகின்றனர்.  

இணையவழி விண்ணப்பிக்க காலஅவகாசம் தேவை
இரண்டாவது  எல்லா மாணவர்களும்  இணையதளத்தின் வாயிலாகவே விண்ணப்பிக்க வேண்டும் என்ற செய்தியைமுதன்மை கல்விஅலுவலர்கள் மூலம் அனைத்து மாணவர் களுக்கும் தகவல் அளிக்கப்படுமென்று   இணையத் தள பதிவுக்கு பொறுப்பு வகிக்கும் தொழில்நுட்ப கல்வி இயக்குனர்   கூறியிருந்தார்  என்று கூறப்படுகிறது. ஆனால் இத்தகவல் அனைத்து பள்ளிகளுக்கும் சென்றடையவில்லை என்றும்  தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகஇணையவழி விண்ணப்பத்திற்கு கால நீட்டிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.  ஆனால் அரசிடம் இருந்துஎந்த பதிலும் வரவில்லை. இந்நிலையில் முதன்முறையாக இணையவழி விண்ணப்பங்கள் மற்றும் இணையவழி சான்றிதழ் பதிவேற்றத்தில்அனுபவமில்லாத கிராமப்புற மாணவர்களில்  பெரும்பாலானோர் விண்ணப்பம் செய்வதற்கு தவறியிருக்கின்றனர்.  

மூன்றாவது, கொரோனா பொது முடக்கம்காரணமாக தமிழகத்தில் பொது போக்கு வரத்துஇல்லாததால் விசாரணைக்காகவும் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்  பதிவேற்றத் திற்காகவும்  கல்லூரிகளுக்கும் நகரங்களுக்கும் உரிய நேரத்தில்  செல்ல  இயலாத சூழ்நிலை தொலைதூரஉள்கிராமத்து  மாணவர்களுக்கு உருவாகியிருந்தது.       நான்காவது,  கிராமப்புறங்களில் உள்ள ஏழை எளிய தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட குடும்பங்களைச் சார்ந்த மாணவர்களிடம்   தனியார்கல்வி நிறுவனங்களைப் போல முதல் ஆண்டில்தங்களுக்கும் இணையவழி கல்விக்குத் தேவையான ஸ்மார்ட் போனை வாங்க வேண்டுமோ என்ற  இயலாமையின்  மலைப்பும்  இருந்தது.மேலும் சராசரியாக ரூ.1000 இணைய தரவிற்குமாதம்தோறும் செலவிட வேண்டும் என்றதகவல்களும் மாணவர்களையும் பெற்றோர் களையும் குழம்ப வைத்து திகைக்க வைத்திருந்தன.

உயர்கல்வித்துறையின் அதிரடியும் குழப்படியும் 
கல்லூரி கல்வித் துறையின் இயக்குனர் ஆகஸ்ட் 28ஆம் தேதி மாணவர் சேர்க்கையை துவங்கி செப்டம்பர் 4 ஆம் தேதி முடிக்க வேண்டும் என்று சேர்க்கை குறித்த   அறிவிப்பை வெளியிட்டிருந்தார். இந்த தகவலின்படி மாநிலத்தில் உள்ள அனைத்து அரசு கல்லூரி நிர்வாகங்களும் தரவரிசைப் பட்டியல் தயாரித்து எல்லா மாணவர்களுக்கும் அலைபேசியின் வாயிலாக தகவல்கள் கொடுக்கப்பட்டிருந்தன. ஆனால் ஆகஸ்ட் 25ஆம் தேதி காணொலி வாயிலாக கல்லூரி முதல்வர்களை  சந்தித்த உயர் கல்வித்துறை செயலாளர் ஆகஸ்டு 26-ஆம் தேதி அன்று மாணவர் சேர்க்கையை துவக்கவேண்டும் என்றும் ஆகஸ்ட் 31க்குள்  மாணவர்சேர்க்கையை முடித்து செப்டம்பர் முதல் தேதிஅன்றே ஆன்லைன் வகுப்புகள் துவங்கவேண்டும் என்று அதிரடியாக உத்தரவிட்டதாகவும் இதன் காரணமாக ஏராளமான  குழப்பங்கள் உருவானதாகவும்  கல்லூரி கல்வி வட்டாரங்களில் இருந்து வரும் செய்திகள் கூறு கின்றன.

 இதனைத்தொடர்ந்து பல  அரசுக் கல்லூரி நிர்வாகங்கள் தேதி மாற்றங்களை செய்து மீண்டும்  மாணவர்களுக்கு தகவல்கள் கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால்   சான்றிதழ் பதிவேற்றத்திற்கான காலக்கெடு முடிந்த பின்னரும் கூட மாணவர் சேர்க்கை பற்றி உடனடியாக அறிவிக்காத துறைத் தலைமை  பின்னர் இணைஇயக்குனர் மூலமாக மாணவர் சேர்க்கையை அதிகரிக்க முதல்வர்களுக்கு கெடுபிடி அளித்து வருகின்றது என்பதுதான்.ஏற்கனவே பல்வேறு தயக்கங்கள், குழப்பங்கள், இயலாமை காரணமாக தவிப்பில் இருந்தஏழை, எளிய கிராமப்புற மாணவர்களுக்கு கல்லூரி கல்வித்துறையின்   குளறுபடியான நடவடிக்கைகள் மேலும் விரக்தியை ஏற்படுத்தியுள்ளன. இயக்குனர் அலுவலகத்திடம் இருந்து அறிவிப்பு வந்தவுடனேயே தரவரிசைப் பட்டியல் தயாரித்து விட்டோம். மாணவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தெரிவித்து விட்டோம் மாணவர்கள் வரவில்லை என்றால் நாங்கள் என்ன செய்ய முடியும் என்று  கல்லூரி முதல்
வர்கள் குழம்பிப்போய்  கைகளை பிசைந்து நிற்பதாகவும்   தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தனியாருக்கு நல்ல அறுவடை
இந்த ஆண்டு தனியார் கல்வி  நிறுவனங்கள் நல்ல அறுவடை செய்திருப்பதாகவும்  கிராமப்புற ஏழை மாணவர்களுக்கும்   அரசுக் கல்லூரி முதல்வர்களுக்கும் ஆசிரியர்களுக்கும்  இது மேலும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.   உயர்கல்வித்துறையின் இந்த குழப்படிகளால்   நல்ல  மதிபெண்களை பெற்றுள்ள  ஆர்வமுள்ள ஏராளமான   கிராமத்து மாணவர்கள்  உயர்கல்வியை தொடர முடியாத நிலை உருவாகி உள்ளது.ஒருபுறம் கல்லூரி கல்வித்துறையின் மேல்மட்ட குழப்பமான நடவடிக்கைகள், மறுபுறம் மாநில அரசு மற்றும் உயர்கல்வித் துறையின் அக்கறையின்மை. இவை காரணமாக அரசுக் கல்லூரிகளில் மாணவர்களின் சேர்க்கை கடுமையாக குறைந்துள்ளது. கடந்த கல்வி ஆண்டுகளோடு ஒப்பிட்டு பார்க்கையில்  இதுவரை சராசரியாக 50 விழுக்காடு அளவே மாணவர் சேர்க்கை நடந்து உள்ளது. இதனை சரிசெய்ய  ஏழை எளிய  கிராமத்து தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மாணவர்களின்   உயர் கல்வி இடைநிற்றலை தவிர்த்திட மாநில அரசும் உயர்கல்வித்துறையும்  போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  

மீண்டும் இணையவழியில் விண்ணப்பிக்க கால அவகாசத்தை உடனே உயர்கல்வித்துறை  அறிவித்திட வேண்டும். அந்த அறிவிப்பை அனைத்து காட்சி  ஊடகங்கள் மற்றும் அச்சுப் பத்திரிகைகள்  மூலம் மாநில அரசு உடனே  வெளியிட வேண்டும். இது ஒன்றே தமிழகம் முழுவதும் உள்ள ஏழை எளிய தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட கிராமப்புற மாணவர்களின் உயர்கல்வி கனவுகளை காப்பாற்ற முடியும். விரைந்து செயல்படுமா தமிழக அரசு?

=====ப.தெட்சிணாமூர்த்தி====