திருவனந்தபுரம்
இந்தியாவை மிரட்டி வரும் கொரோனா வைரஸால் நாட்டில் உள்ள பல மாநிலங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன. இந்தியாவில் கொரோனா எழுச்சி பெற்ற காலத்தில் அதிக பாதிப்பைச் சந்தித்த கேரள மாநிலம் தற்பொழுது கொரோனா ஒழிப்பில் நாட்டின் வழிகாட்டு மாநிலமாக உள்ளது. இதற்குக் காரணம் அம்மாநிலத்தின் இடதுசாரி அரசு முதல்வரான பினராயி விஜயன் கொரோனா ஒழிப்பில் பம்பரமாகச் சுழன்று வருவது தான்.
தற்போதைய நிலவரப்படி அங்கு 481 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். கேரள அரசின் அசத்தலான சிகிச்சையால் 355 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர். இன்னும் 120 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.
குறிப்பாக அதிக மக்கள் நெருக்கம் கொண்ட கேரள தலைநகரான திருவனந்தபுரம் கொரோனா இல்லா நகரமாக மாறியுள்ளது. கடந்த ஒருவார காலமாக அங்குப் புதிதாக யாருக்கும் கொரோனா தொற்று ஏற்படவில்லை. இதனால் அங்கு ஊரடங்கு தளர்வு பற்றி ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், விரைவில் கொரோனா இல்லாத மாநிலமாகக் கேரளா உருவாகும் என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை. இந்தியாவில் உள்ள பெரும்பாலான மாநிலங்களின் தலைநகர் கொரோனா பிடியில் கடுமையாகச் சிக்கியுள்ள நிலையில், மக்கள் நெருக்கம் கொண்ட ஒரு மாநகரையே கொரோனா பாதிப்பு இல்ல பகுதியாக மாற்றப்பட்டது பெரும் சவாலான சாதனையாகும். எல்லாம் இடதுசாரி அரசின் தொலைநோக்கு பார்வை தான்.