tamilnadu

திருச்சி விரைவு செய்திகள்

புதிய கிளை துவக்க விழா

திருச்சிராப்பள்ளி, ஜூலை 7-  திருச்சி புறநகர் மாவட்டம் திருவெறும்பூர் வட்டம், குண்டூர் ஊராட்சி அயன் புத்தூர் வடக்கு மேட்டு தெருவில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் புதிய கிளை துவக்க விழா நடைபெற்றது. விழாவிற்கு சாமிக்கண்ணு திருச்சங்கு தலைமை வகித்தார். விழாவில் மாவட்ட தலைவர் தெய்வநீதி, சிஐடியு சுப்பிரமணியன், மாற்றுத்திறனாளி சங்கம் ஒன்றியச் செயலாளர் சித்ரா ஆகியோர் சிறப்புரையாற்றினர். புதிய நிர்வாகிகள் தேர்வு நடைபெற்றது. தலைவராக சாமிக்கண்ணு,  செயலாளராக குமார், பொருளாளராக ரேவதி, துணைத் தலைவராக சம்மனசு, துணைச் செயலாளராக செல்லின் மேரி ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

கண்ணொளி காப்போம்  திட்டத்தின் கீழ்  ஆசிரியர்களுக்கு பயிற்சி

பாபநாசம், ஜுலை 7-  சுகாதார அதிகாரி டாக்டர் கலைவாணி உத்தரவின் பேரில், கண்ணொளி காப்போம் திட்டத்தின் கீழ், ஆசிரியர்களுக்கான பயிற்சி நடைபெற்றது.  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சியில் கபிஸ்தலம் மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலைய கண் மருத்துவ அறிவியல் நிபுணர் ரெங்கநாயகி பயிற்சியளித்தார். வட்டார மருத்துவ அலுவலர் தீபக் முன்னிலை வகித்தார். பாபநாசம் வட்டாரத்தைச் சேர்ந்த நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளைச் சேர்ந்த 35 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.  இதில், கண் மருத்துவ அறிவியல் நிபுணர் ரெங்கநாயகி, பள்ளி மாணவ- மாணவிகளுக்கு. ஆசிரியர்கள் எப்படி கண் பரிசோதனை செய்ய வேண்டும் என்று பயிற்சியளித்தார்.  இதேபோல், திருவையாறு சீனிவாசராவ் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பயிற்சியில் கண் மருத்துவ அறிவியல் நிபுணர் ரெங்கராஜ் 26 ஆசிரியர்களுக்கு பயிற்சியளித்தார்.  இதில் டாக்டர் பிரதீப்ராஜ், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அண்ணாமலை, பள்ளி தலைமை ஆசிரியை தேவி உட்பட பலர் பங்கேற்றனர்.

பாபநாசம் ரயில் நிலையத்தில் மேம்பாட்டு பணிகள் ஆய்வு

பாபநாசம், ஜூலை 7-  தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் ரயில் நிலையத்தில் நடந்து வரும் மேம்பாட்டு பணிகளை, ரயில்வே திருச்சி கோட்ட மேலாளர் அன்பழகன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.  ரயில் நிலையத்தின் கிழக்குப் பகுதி நடைமேடை விரிவாக்கப் பணி, ரயில் நிலைய முகப்பு அலங்கார வளைவு மற்றும் அடிப்படை வசதிகளை பார்வையிட்டார். இதில் முதுநிலை இயக்க மேலாளர் ரமேஷ், கோட்ட முதுநிலை வணிக மேலாளர் ரதி பிரியா, கோட்ட முதுநிலை பொறியாளர் ரவிக்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர். ரயில்வே கோட்ட மேலாளரிடம் ரயில் பயணிகள் சங்கச் செயலாளர் சரவணன், நிர்வாகி பட்டாசு பிரபு உள்ளிட்டோர் மனுவில், “தாம்பரம் - நாகர்கோவில் அந்தியோதயா விரைவு ரயில், பாபநாசத்தில் நின்று செல்ல வேண்டும். சிறப்பு ரயிலாக இயக்கப் பட்டு வரும் திருச்சி- தாம்பரம் இன்டர்சிட்டி விரைவு ரயிலை நிரந்தப்படுத்த வேண்டும். தஞ்சாவூர் - விழுப்புரம் இரட்டை ரயில் பாதைத் திட்ட இறுதிக் கட்ட ஆய்வு முடிந்த நிலையில், 2028 மகாமக விழா விற்கு முன்னதாக பணியை முடிக்கும் வகை  யில், நிதி ஒதுக்கிடு செய்து பணியை விரை  வாகத் தொடங்க வேண்டும்’’ என கோரிக்கை வைக்கப்பட்டது.

அரியலூர் மாவட்டத்தில் ஜூலை 15 முதல்  ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் முகாம்

அரியலூர், ஜூலை 7-  அரியலூர் மாவட்ட மக்களுக்கு அரசின் திட்டங்கள் சேரும் வகையில், ஜூலை 15 ஆம் தேதி தொடங்கி, 15 நாட்களுக்கு, உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெறுகிறது என ஆட்சியர் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் தெரிவிக்கையில், இந்த முகாம்களில் நகர்ப்புற பகுதிகளில் 13 அரசுத் துறைகளைச் சேர்ந்த 43 சேவைகளும், ஊரகப் பகுதிகளில் 15 அரசுத் துறைகளைச் சேர்ந்த 46 சேவைகளும் வழங்கப்படும். அத்துடன் முகாம்களுக்கு வருகை தரும் பொதுமக்களின் உடல்நலனைப் பேணும் வகையில், மருத்துவ சேவைகளை வழங்க மருத்துவ முகாம்களும் நடத்தப்படும். இந்த முகாம்களில் பெறப்படும் விண்ணப்பங்கள் மீது 45 நாள்களில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.  அரியலூர் மாவட்டத்தில் ஜூலை 15, 17, 22, 24, 25, 29, 30, 31, ஆக.1, 5, 6,7,8,12,14 ஆகிய தேதிகளில் நகராட்சி, பேரூராட்சி மற்றும் ஊராட்சி பகுதிகளில் 36 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. முகாம் நடைபெறும் நாள், அம்முகாம்களில் பங்குபெறும் வார்டுகள் மற்றும் ஊராட்சிகள் குறித்த விபரங்கள், தன்னார்வலர்கள் வாயிலாகவும், ஆட்டோ விளம்பரம் வாயிலாகவும் தெரிவிக்கப்படும்.  இந்த முகாமில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெறத் தகுதியுள்ள, விடுபட்ட மகளிர் எவரேனும் இருப்பின், முகாம் நடைபெறும் நாளன்று முகாமுக்குச் சென்று, தங்கள் விண்ணப்பத்தினை அளிக்கலாம் ்எனத் தெரிவித்துள்ளார்.