நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குடியுரிமை சட்ட திருத்த மசோதா கடந்த வாரம் நிறைவேற்றப்பட்டது. ஜனாதிபதி ஒப்புதலை பெற்றுள்ள இந்த சட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து அசாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மேலும் தில்லி உத்தர பிரதேச மாநிலங்களில் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் தில்லியில் நேற்றிரவு போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது காவல்துறையினர் தாக்குதல் நடத்தி உள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவித்து உத்தரபிரதேசம் உட்பட நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் இன்று குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கேரளாவில் ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்தது.
திருவனந்தபுரத்தில் இன்று நடந்துவரும் போராட்டத்தில் முதல்வர் பினராயி விஜயன் மற்றும் எதிர்க்கட்சித்தலைவர் ரமேஷ் சென்னிதாலா ஆகியோர் ஒரே மேடையில் அமர்ந்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர். போராட்டத்தில் பேசிய பினராயி விஜயன், குடியுரிமை சட்டத்திருத்தத்திற்கு எதிராக கேரளா ஒன்றாக நிற்கும் என்று கூறினார்.