இஸ்ரேலை கண்டித்து 'காசாவுக்கான மௌனம்' என்ற உலகளாவிய அழைப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு ஆதரவு தெரிவித்துள்ளது.
ஐ.நா. சமீபத்தில் "தொழில் பொருளாதாரம் முதல் இனப்படுகொலை பொருளாதாரம் வரை" என்ற தலைப்பில் வெளியிட்ட அறிக்கையில், பல்வேறு பன்னாட்டு நிறுவனங்கள் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதலில் எவ்வாறு உடந்தையாக இருக்கின்றன என்பதை விவரித்துள்ளது. இந்த நிறுவனங்களின் மோசமான பங்கு அம்பலப்படுத்தப்பட வேண்டும் மற்றும் அவை மக்களுக்கு பதிலளிக்க வேண்டும்.
காசா மக்களை இனப்படுகொலை செய்யும் இஸ்ரேலுக்கு எதிராகவும், காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் உலகளவில் 'காசாவுக்கான மௌனம்' என்ற டிஜிட்டல் எதிர்ப்பு நடைபெற்று வருகிறது. ஜூலை 6 முதல் 13 வரை தினமும் இரவு 9 முதல் 9.30 வரை அலைபேசிகள் உட்பட அனைத்து டிஜிட்டல் கருவிகளையும் அணைத்து வைத்தும், சமூக ஊடகங்களில் பதிவுகளை இடுவது, பதிவுகளுக்கு லைக் மற்றும் கமெண்ட் செய்வது ஆகியவற்றை தவிர்த்து எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்று உலகளவில் இயக்கங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு சிபிஎம் முழு ஆதரவு தெரிவித்துள்ளது.
இதனோடு, மக்கள் அனைவரும் இந்த டிஜிட்டல் எதிர்ப்பில் பங்கேற்று காசா மக்களுக்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும் என சிபிஎம் கோரிக்கை வைத்துள்ளது.