ஜூலை 9 பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றி பெறச் செய்வோம் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்துள்ளது.
இதுகுறித்து கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது;
இந்தியா முழுவதும் ஜூலை 9 அன்று அனைத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் தொழில்வாரி சம்மேளனங்கள் இணைந்து பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்துள்ளன. இந்த வேலைநிறுத்தம் பாஜக தலைமையிலான ஒன்றிய பாஜக அரசு அமலாக்கத் துடிக்கும் தொழிலாளர்களுக்கு விரோதமான நான்கு சட்ட தொகுப்புகளை உடனடியாக திரும்பப்பெற வலியுறுத்துவதாகும். மேலும், குறைந்தபட்ச ஊதியம், பழைய பென்சன் திட்டம், மின்சாரத்தை தனியார்மயம் மற்றும் கார்ப்பரேட் கைகளுக்கு வழங்கும் மின்சார சட்டத் திருத்தத்தை திரும்பப்பெற வேண்டும், பொதுத்துறை பாதுகாப்பு, விவசாய விளைப் பொருட்களுக்கு மொத்த உற்பத்தி செலவில் ஒன்றரை மடங்கு விலை, 100 நாள் வேலைக்கு உரிய நிதி வழங்குதல், வரலாறு காணாத விலைவாசி உயர்வுகளை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டு விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் உள்ளிட்ட உழைக்கும் மக்களின் 17 அம்ச கோரிக்கைகளை உள்ளடக்கி இருக்கிறது. கடந்த 11 ஆண்டுகளாக ஆட்சி செய்து வரும் மோடி தலைமையிலான பாஜக, பெரும்பான்மை மக்களுக்கு எதிரான கொள்கையை அமலாக்கி வருகிறது. இதை எதிர்த்த தொழிலாளர் போராட்டங்கள் தொழில்வாரியாகவும், தனித்தனியாகவும் நடைபெற்றாலும், அனைத்து தொழிலாளர்களும் கூட்டாக இணைந்து, வலுமிக்க பொது வேலைநிறுத்தம் செய்வது, ஆட்சியாளர்களை வலுவாக எதிர்த்து நிற்கும் போராட்டமாகும். இப்படிப்பட்ட தீவிர எதிர்ப்பு தொழிலாளர்களையும், தொழிற்சங்கங்களையும், பாதுகாக்கும் அரணாக விளங்குவதுடன்,கொள்கை மாற்றத்திற்கும், நிர்பந்தம் அளிக்கும்.
எனவே தான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஜூலை 9 பொது வேலைநிறுத்த அறிவிப்பை வரவேற்றது. வெற்றிப் பெறச் செய்ய வேண்டுமென்ற வேண்டுகோளையும் விடுத்தது. நாடு முழுவதும் இதர இடதுசாரி கட்சிகளும், அரசியல் அமைப்புகளும் வேலைநிறுத்த போராட்டத்தை ஆதரித்து உள்ளன. விவசாய சங்கங்கள், விவசாய தொழிலாளர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு வெகுமக்கள் அமைப்புகள் சார்பில் ஜூலை 9 அன்று நடைபெறவுள்ள தொழிலாளர் வேலைநிறுத்தத்தை ஆதரித்து மறியல் உள்ளிட்ட போராட்டங்களில் பங்கெடுப்பது என்ற அறிவிப்பு வரவேற்பிற்குரியது. ஜூலை 9 பொதுவேலைநிறுத்தத்தின் வெற்றி பாஜகவின் கார்ப்பரேட் இந்துத்துவா ஆட்சியை எதிர்க்கும் வலுவான ஆயுதம் ஆகும். எனவே, இந்த பொதுவேலைநிறுத்தப் போராட்டத்தை தமிழகத்தில் வெற்றி பெறச் செய்வோம் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) அனைத்துப் பகுதி உழைப்பாளி மக்களையும், பொதுமக்களையும் அறைகூவி அழைக்கிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.