world

img

பிரிக்ஸ் நாடுகளுக்கு 10 % கூடுதல் வரி: டிரம்ப் மிரட்டல்!

பிரிக்ஸ் நாடுகளுக்கு கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

அமெரிக்கா மீது பல்வேறு நாடுகள் அதிக வரிகளை விதிப்பதாக டிரம்ப் குற்றம்சாட்டி இந்தியா உட்பட பல்வேறு நாடுகளுக்குப் பரஸ்பர வரிகளை விதித்தார்.

இந்தியா மீது 26 சதவிகித வரியை விதித்தார். பின்னர் சீனாவை தவிர மற்ற நாடுகள் மீதான வரி விதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக அறிவித்தார்.

இதையடுத்து இந்தியா உள்பட பல நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. 90 நாட்கள் வரிவிதிப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான காலக்கெடு வருகிற 9-ஆம் தேதியுடன் முடிவடைகிறது.

தங்களுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளாத நாடுகள் மீது 9-ஆம் தேதிக்குப் பின்னர் வரி விதிப்பு அமலாகும் என்றும் குறிப்பிட்ட நாடுகளுடன் மட்டுமே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும் என்றும் டிரம்ப் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், பிர்க்ஸ் கூட்டமைப்பின் 17—ஆவது மாநாடு பிரேசிலில் நடைபெற்று வரும் நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அமெரிக்காவுக்கு எதிரான கொள்கைகளுடன் செயல்படும் நாடுகள் மீது கூடுதலாக 10% வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

இந்த கூட்டமைப்பில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேசியா, ஈரான், ஐக்கிய அரசு எமிரேட்ஸ் ஆகிய 10 நாடுகள் உறுப்பினர்களாக இருப்பது குறிப்பிடத்தக்கது.