தமிழ்நாட்டில் 8 அகழாய்வுகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி தராதது ஏன் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
கீழடி, ஆதிச்சனூர் மற்றும் நாகப்பட்டினம் உள்ளிட்ட 8 தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகளுக்கு ஒன்றிய பாஜக அரசு உடனடி ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசு கோரியுள்ளது. இந்த திட்டங்கள் ஜூலை 2025 இல் சமர்ப்பிக்கப்பட்டு நவம்பரில் ஏஎஸ்ஐ இயக்குநர் ஜெனரலின் கீழ் நடந்த கூட்டத்தில் எடுக்கப்பட்டன. ஆனால் அனுமதி 8 மாதங்களாக நிலுவையில் உள்ளது. இந்தக் கோரிக்கையை மாநில அரசு மீண்டும் மீண்டும் எழுப்பி வரும் நிலையில், அதனை ஒன்றிய அரசு புறக்கணிக்கப்படுகிறது.
தமிழ்நாட்டில் அகழ்வாராய்ச்சி காலம் ஜனவரி முதல் ஜூலை வரை மட்டுமே நீடிக்கும். இந்த கால அவகாசம் தவறவிட்டால், பருவமழை நிலைமைகள் களப்பணியை முடக்கும், முக்கிய ஆராய்ச்சியை தாமதப்படுத்தும் மற்றும் 2025-2026 க்கு ஏற்கனவே ஒதுக்கப்பட்ட நிதியை வீணடிக்கும்.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் 8 அகழாய்வுகளுக்கு ஒன்றிய அரசு அனுமதி தராதது ஏன் என்று கேள்வி எழுப்பிய மதுரை எம்.பி சு.வெங்கடேசன், உங்களின் அரசியல் சிறுமைத்தனங்களை எங்கள் வரலாற்றுப் பேரியக்கம் தவிடு பொடியாக்கும் என்று தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"கீழடி, ஆதிச்சநல்லூர் உள்ளிட்ட 8 அகழாய்வுகளுக்கு 8 மாதங்களாக அனுமதி தராதது ஏன்?
பருவமழை தொடங்கினால் நிதி வீணாகும் , ஆராய்ச்சி முடங்கும் எனத் தெரிந்தும் மௌனம் காப்பது ஏன்?
தமிழரின் தொன்மையைத் தடுக்க இடைவிடாது இயங்கும் மோடி அரசு ஒன்றை மறந்துவிட்டது.
எட்டு ஆண்டுகளுக்கு முன்பு உங்களால் கைவிடப்பட்ட கீழடி அகழாய்வுக் குழிகளில் இருந்து தான் தொன்மை நோக்கிய எங்களின் பயணம் பாய்ச்சல் வேகங்கொண்டது.
எகிப்திய பிரமீடுகளிலும் சிகை கொற்றன் சிலிர்த்து நிற்கிறான்.
இப்பொழுது மீண்டும் தடுக்கிறீர்கள்.
உங்களின் அரசியல் சிறுமைத்தனங்களை எங்கள் வரலாற்றுப் பேரியக்கம் தவிடு பொடியாக்கும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
