tamilnadu

img

இந்நாள் இதற்கு முன்னால் ஏப்ரல் 20

1961 - பிடல் காஸ்ட்ரோ ஆட்சியைக் கவிழ்ப்பதற்காக, கியூபாமீது அமெரிக்கா நடத்திய பன்றிகள் விரிகுடாத் தாக்குதல்முடிவுற்றது. 18ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து ஸ்பெயினின் ஆதிக்கத்திலிருந்த கியூபாவில், 19ஆம் நூற்றாண்டில் 1860களிலிருந்து தேசியவாத இயக்கங்கள் போர்களாக வெடித்தன. இவற்றுக்கு ஆதரவாக 1898இல் ஸ்பெயின்மீது போர் அறிவித்த அமெரிக்கா, 1902இல் கியூபக் குடியரசு உருவாகும்போது, கியூபாவில் பிறந்த அமெரிக்கக் குடிமகனான எஸ்ட்ராடா-வை குடியரசுத் தலைவராக்கியது. தொடர்ந்து படைகளை கியூபாவில் நிறுத்தியதுடன், ஏராளமான அமெரிக்கர்கள் கியூபாவில் குடியேறினர். கியூபாவின் சொத்துகளின் 60 சதவீதம் அமெரிக்கர்களுக்குச் சொந்தமாகியது. 1952இல் அதிகாரத்தைக் கைப்பற்றிய பாடிஸ்டாவுக்கு எதிராக புரட்சி வெடித்த நிலையில், 1958இல் 30 கோடி டாலர்களுடன் (தற்போது ரூ.18 ஆயிரம் கோடி!) அமெரிக்காவுக்குத் தப்பியோடினார் பாடிஸ்டா. காஸ்ட்ரோவின் தலைமையிலான, ஜூலை 26 இயக்கம் என்னும் கியூபப் புரட்சி வெற்றிபெற்று, பொதுவுடைமை ஆட்சி ஏற்பட்டதால் அஞ்சிய அமெரிக்கா ஏராளமான இடையூறுகளைக் கொடுத்தது.


ஆனாலும், சோவியத்திட மிருந்து கியூபா எண்ணெய்யைப் பெற்றபோது, கியாபாவிலிருந்த அமெரிக்க சுத்திகரிப்பு நிலையங்கள் சுத்திகரிக்க மறுக்க, அவற்றை நாட்டுடைமையாக்கினார் காஸ்ட்ரோ. கியூபாவிலிருந்து சர்க்கரை இறக்குமதியைத் தடைசெய்த அமெரிக்கா, கியூபாவுக்கான அனைத்து ஏற்றுமதிகளையும் தடைசெய்ததைத் தொடர்ந்து, கியூபாவிலிருந்த அமெரிக்க நிறுவனங்களனைத்தையும் நாட்டுடைமையாக்கி, அவற்றின் சொத்துகளையும் காஸ்ட்ரோ பறிமுதல் செய்த நிலையில், காஸ்ட்ரோ அரசைக் கவிழ்ப்பதற்காக சிஐஏவுக்கு 1.31 கோடி டாலர் (தற்போது ரூ.780 கோடி!) நிதி ஒதுக்கியது அமெரிக்க அரசு. காஸ்ட்ரோவையும் சேகுவேராவையும் கொலைசெய்ய கடத்தல்காரர்களின் உதவியைக்கூட நாடி, ஏராளமான முயற்சிகளை மேற்கொண்ட சிஐஏ, கியூபாவிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களைத் திரட்டி, அவர்களுக்கு ராணுவப் பயிற்சியளித்து, ஒரு(2506ஆம்) படைப்பிரிவையும், எட்டு பி-26 குண்டுவீச்சு விமானங்களையும் அனுப்பியது. காஸ்ட்ரோவுக்கு எதிராகக் கியூபா மக்கள் திரளுவார்கள் என்று அமெரிக்கா எதிர்பார்த்த நிலையில், மக்கள்காஸ்ட்ரோ அரசுக்குத் துணைநிற்க, மூன்றே நாட்களில் தாக்குதல் முறியடிக்கப்பட்டு முடிவுக்கு வந்து, அனைவருமே கைது செய்யப்பட்டனர்.