tamilnadu

img

பொள்ளாச்சியில் அதிமுக நிர்வாகி செந்தில்குமார் கந்துவட்டி புகாரில் கைது!

பொள்ளாச்சியில் பெண்ணை மிரட்டி கந்துவட்டி வசூலித்த புகாரில் அதிமுக நிர்வாகி செந்தில்குமார் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஜோதி நகர் ‘ஏ’ காலனியைச் சேர்ந்த தீபா என்பவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு முத்துகவுண்டன் லேஅவுட்டைச் சேர்ந்த அதிமுக நகர இளைஞரணி செயலாளர் செந்தில்குமாரிடம் ரூ.1 லட்சம் கடனாக பெற்றுள்ளார். இதற்காக மாதம் ரூ.10,000 கந்துவட்டியாக செலுத்த வேண்டும் என செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.
மேலும் தீபா கடந்த 3 மாதங்களாக முறையாக வட்டித் தொகையை செலுத்தி வந்த நிலையில், இம்மாதம் வட்டி செலுத்த முடியாததால் செந்தில்குமார் தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், பணத்தை உடனடியாக திருப்பி தருமாறு மிரட்டல் விடுத்துள்ளார்.
இதனால் பாதிக்கப்பட்ட தீபா பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் போலீசார் செந்தில்குமார் மீது கந்து வட்டி தடுப்பு சட்டம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
பொள்ளாச்சியில் அதிமுக பிரமுகர் கந்துவட்டி புகாரின் பேரில் கைது செய்யப்பட்டது  பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.