ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் போர் தொடுப்பதன் காரணாமாக தமிழ்நாட்டில் தீப்பெட்டி தொழிலுக்கு மிகவும் முக்கிய மூலப்பொருளான மெழுகு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி, கழுகுமலை, எட்டயபுரம், கடலையூர், தென்காசி மாவட்டம் திருவேங்கடம், குருவிகுளம், விருதுநகர் மாவட்டம் சாத்தூர், சிவகாசி, தாயில்பட்டி, ஏழாயிரம்பண்ணை, திருத்தங்கல், ஸ்ரீவில்லிபுத்தூர், வேலூர் மாவட்டம் குடி யாத்தம், தர்மபுரி மாவட்டம் காவிரிபட்டினம் ஆகிய இடங்களில் 400 இயந்திர தீப்பெட்டி தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இதில், 90 சதவீதம் பெண் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர். நேரடியாகவும், மறைமுகமாகவும் சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பெற்று வருகின்றனர்.
ஈரான் மீது அமெரிக்கா - இஸ்ரேல் போர் தொடுப்பதன் காரணாமாக தீப்பெட்டி தொழிலுக்கு மிகவும் முக்கிய மூலப்பொருளான மெழுகு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது மட்டுமின்றி விலையும் உயர்ந்துள்ளது.
தீப்பெட்டி தொழிலுக்கு தேவையான மெழுகு ஈரானில் இருந்து தான் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. போர் காரணமாக கப்பல் போக்குவரத்து முடங்கியுள்ளதால் மெழுகு வருவது நிறுத்தப்பட்டுள்ளது.
கையிருப்பில் உள்ள மெழுகுகளை உள்நாட்டு வியாபாரிகள் விற்பனை செய்து வருகின்றனர். போருக்கு முன்பு ஒரு கிலோ மெழுகு 80 ரூபாய் இருந்து நிலையில் தற்போது 130 ரூபாய் வரை விலை உயர்ந்துள்ளது.
அதுமட்டுமின்றி தீப்பெட்டி பண்டல்களுக்கு தேவைப்படும் பிபி கவர், செலோ டெப் தயாரிக்க பயன்படும் வெர்ஜின் பெட்ரோலிய பொருளும் ஈரானில் இருந்து தான் வருகிறது. அதுவும் தடைபட்டுள்ளதால் அதன் விலையும் உயர்ந்துள்ளது. போருக்கு முன்பு ஒரு கிலோ 120 ரூபாய்க்கு விற்பனையானது தற்போது ரூபாய் 180 க்கு விற்பனையாகிறது
போர் இன்னும் தொடர்ந்தால் மெழுகு கிடைக்காமல் போகும் நிலை ஏற்படுவது மட்டுமின்றி தீப்பெட்டி தொழில் முடங்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து தீப்பெட்டி உற்பத்தியாளர் ராஜு கூறுகையில்; போர் காரணமாக ஈரானில் இருந்து வந்து கொண்டிருந்த மெழுகு முற்றிலுமாக தடைபட்டுள்ளது. உள்ளூர் வியாபாரிகள் அதன் விலையையும் உயர்த்தியுள்ளனர். மெழுகு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் தொழில் பாதிக்கப்படும் சூழ்நிலை உள்ளது. விலையேற்றம் காரணமாக ஒரு பண்டலுக்கு ரூ.10 முதல் ரூ.20 உற்பத்திச் செலவும் அதிகரித்துள்ளது. மேலும் வெளிநாடுகளுக்கு தீப்பெட்டி பண்டல் ஏற்றுமதி செய்வதும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் மத்திய மாநில அரசுகள் தான் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் லைட்டர்களால் தீப்பெட்டி தொழில் அழிந்து கொண்டிருக்கும் நிலையில், போர் காரணமாக மெழுகும் தடைவிடும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளதால் தீப்பெட்டி தொழில் முற்றிலுமாக முடங்கும் சூழ்நிலைக்கு தள்ளப்படுவது மட்டுமின்றி 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. என தெரிவித்தார்.
