india

img

நீதித்துறை குறித்து சர்ச்சை பாடம் - பகிரங்க மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி!

நீதித்துறை குறித்து சர்ச்சைக்குரிய பாடம் சேர்க்கப்பட்ட விவகாரத்தில் பகிரங்க மன்னிப்பு கோரிய என்.சி.இ.ஆர்.டி, பாடப்புத்தகத்தை திரும்பப்பெற்றதாக அறிவித்துள்ளது.
தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) வெளியிட்டிருந்த புதிய 8ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில் “நீதித்துறையில் நிலவும் ஊழல்” மற்றும் வழக்குகளின் பெரும் தேக்கம் உள்ளிட்டவைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. “நமது சமூகத்தில் நீதித்துறையின் பங்கு” (The role of the judiciary in our society) என்ற தலைப்பிலான அத்தியாயத்தில், நீதித்துறையின் பல்வேறு நிலைகளில் நிலவும் ஊழல்; போதிய எண்ணிக்கையில் நீதிபதிகள் இல்லாமை; சிக்கலான சட்ட நடைமுறைகள்; போதிய உள்கட்டமைப்பு வசதிகள் இல்லாமை; தேங்கிக் கிடக்கும் வழக்குகளின் எண்ணிக்கை உள்ளிட்டவைகளின் தொகுப்புகள் பாடமாக கொடுக்கப்பட்டிருந்தன. 
இதனை, தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், என்.சி.இ.ஆர்.டி-க்கு கடும்  கண்டனம் தெரிவித்திருந்தது. மேலும், நீதிமன்றத்தை அவமதிக்க நினைப்பவர்களை எப்படி கையாள வேண்டும் என்று தெரியும் என்றும், இதில் தவறு செய்தவர்கள் எவ்வளவு உயரத்தில் இருந்தாலும், சட்டம் அதன் கடமையைச் செய்யும் எனவும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யகாந்த் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், உச்சநீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கோரியது என்.சி.இ.ஆர்.டி.
இவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம், "சர்ச்சைக்குரிய இந்த புத்தகத்தை மறுபதிப்பு செய்ய வேண்டாம். இணையதளம் வழியாகப் பகிரவும் கூடாது. இதனை மீறுவது உச்சநீதிமன்ற உத்தரவை அவமதிப்பதாகக் கருதப்படும். அனைத்து மாநிலக் கல்விச் செயலாளர்களும் புத்தகத்தின் அச்சுப்பிரதிகளை மற்றும் டிஜிட்டல் கோப்புகளை உடனடியாகப் பறிமுதல் செய்ய வேண்டும். இந்த அத்தியாயத்தை எழுதிய தேசிய பாடத்திட்ட வாரிய உறுப்பி னர்களின் பெயர்கள் மற்றும் தகுதிகளைச் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அத்தியாயத்தை இறுதி செய்த கூட்டத்தின் குறிப்புகளை (Minutes of Meeting) நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்” என உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து இன்று மீண்டும் பகிரங்க மன்னிப்பு கோரிய என்.சி.இ.ஆர்.டி, இந்த புத்தகத்தை முழுமையாகத் திரும்பப் பெற்றுள்ளதாகவும், தற்போது அது பயன்பாட்டில் இல்லை எனவும் தெரிவித்துள்ளது.