கோவை, ஜூன் 2-கோவை மாவட்டத்தில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை அதிகரித்து வரும் நிலையில், காவல்துறையினர் தீவிர நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உத்தரவிட்டுள்ளார். கோவை மாவட்டத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் பல வருடங்களாகவே தடையின்றி சட்டவிரோதமாக விற்கப்படுகிறது. அதேபோல், கேரள மாநிலத்தில் இருந்து வாங்கி வரும் இந்த லாட்டரிகளை முன்னாள் லாட்டரி சீட்டு விற்பனையாளர்கள் இன்றும் தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர். இந்த லாட்டரி விற்பனை தொடர்பாகக் காவல் துறையினர், தமிழ்நாடு லாட்டரி ரெகுலேஷன் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்வதும், பின்னர் காவல்நிலைய பிணையில் விடுவதும் வாடிக்கையாக உள்ளது. இவ்வாறு லாட்டரி விற்பனையாளர்கள் எளிதாக வெளியேவந்து விடுவதால் தொடர்ந்து இத்தவறுகள் நடைபெறகிறது. இந்நிலையில், கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார், லாட்டரி விற்பனையை முற்றிலுமாக ஒழிக்க கடந்த 28ம் தேதி முதல் 30ம் தேதி வரை தீவிர சோதனைகளை மேற்கொண்டார். இதில் கோவை மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பகுதியில் 53 பேர் கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதேபோல் லாட்டரி விற்பனை வழக்குகளில் கைது செய்யும் நபர்களை காவல் நிலைய பிணையில் விடக்கூடாது என காவல்நிலையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ளார். இதற்கிடையில் லாட்டரி விற்பனை தொடர்பான கைது நடவடிக்கைகள் ஊடகங்களில் வெளிவந்ததையடுத்து, பொதுமக்கள் சிலர் தபால் மூலம் புகார்களை அனுப்பியுள்ளனர். இப்படி அனுப்பப்பட்ட புகாரின் பேரில் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி மற்றும் 3 நம்பர் லாட்டரி ஆகியவற்றை விற்பனை செய்யும் 13 பேரை எங்களது குழுவினர் திடீர் சோதனைகள் மூலம் கைது செய்துள்ளனர். மேலும், பொதுமக்களின் புகார்கள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என சுஜித் குமார் தெரிவித்தார்.