india

img

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் இன்று காலை 11 மணிக்கு தொடங்கியது.
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி ஆகஸ்ட் 21 வரை நடைபெறுகிறது. சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் காரணமாக ஆகஸ்ட் 13 மற்றும் 14 தேதிகளில் மட்டும் அமர்வுகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மழைக்கால கூட்டத்தொடரில் ஒன்றிய பாஜக அரசு 8 புதிய மசோதா உள்பட 17  மசோதாக்களை அறிமுகம் செய்ய உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அதே போல் எதிர்க்கட்சிகள் ஆபரேசன் சிந்தூர், பஹல்காம் தாக்குதல், இந்தியா -  பாகிஸ்தான் இடையேயான மோதலில் அமெரிக்கா தலையீடு, மணிப்பூர் பிரச்சனை, பீகார் வாக்காளர்கள் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் உள்ளிட்ட பிரச்சனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளன. 
இந்த நிலையில் மக்களவையில், பஹல்காம் தாக்குதல் குறித்து விவாதிக்க கோரியும், இந்தியா -  பாகிஸ்தான் இடையேயான மோதலில் அமெரிக்கா தலையீடு குறித்து பிரதமர் பதிலளிக்க வலியுறுத்தியும் எதிர்க்கட்சிகள் தொடர் முழக்கத்தை எழுப்பினர். இதை தொடர்ந்து மக்களவை பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
அதேபோல், மாநிலங்களவையில் மீனாட்சி ஜெயின், சதானந்தன் மாஸ்டர் மற்றும் ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா ஆகியோர் எம்.பி-க்கள் பதவியேற்று கொண்டனர். இதை தொடர்ந்து மாநிலங்களவையிலும் பஹல்காம் தாக்குதல் மற்றும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இதை தொடர்ந்து மாநிலங்களவையும் பிற்பகல் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.