மக்களவையில் உறுப்பினர்கள் 8 பேரின் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தில்லியில் நேற்று நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் மக்களவையில் உறுப்பினர்கள் 8 பேரின் இடைநீக்கம் ரத்து செய்யப்படுவதாக முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி, இன்று காங்கிரஸ் எம்.பி.க்கள் மாணிக்கம் தாகூர், குர்ஜீத் சிங் அஜ்லா, ஹிபி ஈடன், சி.கிரண் குமார் ரெட்டி, அமரீந்தர் சிங் வாரிங், பிரசாந்த் படோல், டீன் குரியகோஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்டேசன் ஆகியோர் மீதான இடைநீக்க நடவடிக்கை ரத்து செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது எக்ஸ் பதிவில் கூறியதாவது:
"நாடாளுமன்ற ஜனநாயகத்தை காக்க நடைபெற்ற போராட்டத்தில் நான் உள்ளிட்ட எட்டு பேர் இடைநீக்கம் செய்யப்பட்டு இன்றோடு 16 நாட்கள் ஆகிறது. இந்த 16 நாட்களும் நாடாளுமன்ற படிகட்டுகளில் எங்களின் போராட்டத்தை முன்னெடுத்தோம். ஆளுந்தரப்பு எங்களின் இடைநீக்கத்தை இன்று நீக்கியுள்ளது. மகிழ்ச்சி.
இடைநீக்கத்தை எதிர்த்த எங்களின் போராட்டம் முடிவுக்கு வருகிறது. ஆனால் நாடாளுமன்ற ஜனநாயகத்தை பாதுகாக்கும் எங்களின் போராட்டம் மேலும் தீவிரத்தோடு தொடரும்."
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
