உங்கள் வீட்டில் இருக்கும் போர் தண்ணீரையும் கட்டணம் செலுத்தினால்தான் எடுக்க முடியும். இது ஏதோ ஆருடம் அல்ல, உண்மை. கோவையின் அடையாளங்களில் ஒன்றாக சிறுவாணி குடிநீர் இருந்து வருகிறது. அந்த நீருக்கும் தற்போது ஆபத்து ஏற்பட்டிருக்கிறது. உலகின் 2 ஆவது சுவை மிகு சிறுவாணி நீரை உறிஞ்சி எடுக்க சூயஸ் நிறுவனம் மோடி மற்றும் எடப்பாடி அரசுகளின் சார்பில் களம் இறக்கப்பட்டிருக்கிறது. இதுவரை நமக்கு குடிநீர் வழங்கி வந்த கோவை மாநகராட்சி இனி வேடிக்கை மட்டுமே பார்க்க முடியும்.கோவையின் குடிநீர் விநியோக உரிமை சூயஸ் நிறுவனத்திடம் 26 வருடங்களுக்கு குத்தகைக்கு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது.இதுவரை மாநகராட்சி நம்மிடம் குடிநீர் விநியோகத்திற்கு ஆகும் செலவை மட்டுமே குடிநீர் கட்டணமாக வசூலித்து வந்தது.இனி அவ்வாறு இருக்க போவதில்லை. சூயஸ் நிறுவனம் ஒவ்வொரு லிட்டர் தண்ணீருக்கும் விலை நிர்ணயம் செய்து அதன் விலையோடு, விநியோக செலவையும் சேரத்து நம் தலையில் சுமத்தவிருக்கிறது. மேலும் இனி தெருக்களில் இருக்கும் பொதுக்குழாய்களையும் அகற்றி விட்டு, தண்ணீர்என்றாலே கோவை மக்கள் இனிசூயஸ் நிறுவனத்தை மட்டுமே சார்ந்திருக்க வேண்டும் என்ற அடிமை சாசனத்தை எழுதி கொடுத்திருக்கிறார்கள் எடப்பாடியும், மோடியும். இந்த திருட்டுத் தனத்தை மறைக்கவே. நம்மிடம் 24 மணி நேரமும் குடிநீர் விநியோகம் என எஸ்.பி.வேலுமணி பொய்சொல்லி வருகிறார். சரி உண்மையிலேயே 24 மணி நேரமும் குடிநீர் கொடுப்பது சாத்தியமா என எண்ணிப் பாருங்கள். முடியவே முடியாது. காரணம் நமக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கும் சிறுவாணி மற்றும் பில்லூர் அணைகளின் கொள்ளளவில் இருக்கும் தண்ணீரை, அனைவரும் 24 மணி நேரமும் குழாய்களை திறந்து இடை விடாமல் பிடிக்கிறோம் என்று வைத்துக் கொள்வோம். மொத்த தண்ணீரும் ஒரு வாரத்தில் காலியாகிவிடும். இதுதான் உண்மை. அணையில் தண்ணீர் காலியாகிவிட்டால் சூயஸ் நிறுவனம் பிரான்ஸ் நாட்டில் இருந்தா கொண்டு வரும்? தினமும் 30 நிமிடம் அனைத்து பகுதிகளுக்கும் சீராக தண்ணீர் விநியோகித்தாலே 4 பேர் இருக்கும் குடும்பத்திற்கு தேவையான குடிநீர் போதுமான அளவில் கிடைத்துவிடும். அதை முறையாக செய்ய துப்பில்லாத உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கமிஷனுக்காக சூயஸ் நிறுவனத்திடம் சிறுவாணியை ஒப்படைத்திருக்கிறார். தற்போதுகோடை காலம் துவங்கியிருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறை ஏற்படுவது இயல்பானது. நான்கு நாட்களுக்கு ஒரு முறை வரும் குடிநீர். இனி வாரம் ஒரு முறை அல்லது 2 வாரத்திற்கு ஒரு முறை கூட வரும். இது போன்ற நேரங்களில் சூயஸ் நிறுவனம் சொல்வது போல் குடிநீரை லிட்டருக்கு இவ்வளவு என எவ்வளவு வேண்டுமானாலும் பிடித்துக் கொள்ளலாம் என்றால் என்ன நடக்கும்?
பெரிய பெரிய நிறுவனங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகளில் உள்ள வசதி படைத்தவர்கள் மொத்தமாக தண்ணீரை பிடித்து வைத்துக் கொள்வார்கள். ஒரு கட்டத்தில் அணையில் தண்ணீர் கொள்ளவு குறைந்து பற்றாக்குறையும் பன்மடங்கு அதிகரிக்கும். அப்போது ஏழைகள் எவ்வளவு பணம் கொடுத்தாலும் நாவை நனைக்க கூட தண்ணீர் கிடைக்காது. அதுமட்டுமல்ல கடந்த மூன்று ஆண்டுகளாக சிறுவாணி, பில்லூர் அணைகளின் நீர்மட்டம் கவலையளிப்பதாகவே இருந்து வருகிறது. இதுவரை கோவை மாநகராட்சி முழுவதும் இந்த சிறுவாணி, பில்லூர் குடிநீர் பரவலாக விநியோகிக்கப்பட்டு வந்தது. ஆனால் சூயஸ் நிறுவனம் 60 வார்டுகளுக்கு மட்டுமே குடிநீர் விநியோகிக்க ஒப்பந்தம் செய்திருக்கிறது. அப்படியென்றால் மற்ற 40 வார்டுகளுக்கு சிறுவாணி, பில்லூர் குடிநீர் இனி கிடையாது.இதே சூயஸ் நிறுவனம் இதற்கு முன்பு இது போன்று 24 மணிநேரம் குடிநீர் விநியோகம் செய்வோம் என்று ஒப்பந்தம் செய்திருக்கும் இடங்களில் எங்குமே 24 மணி நேரமும் குடிநீர் வழங்கவில்லை. பல இடங்களில் சூயஸ் நிறுவனத்தை விரட்டி விட்டு மீண்டும் மாநகராட்சி நிர்வாகமே குடிநீரை வழங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியா முழுவதும் நிறுவியிருக்கும் 250 குடிநீர் மற்றும் சுத்திகரிப்பு தொழிற்சாலைகளில் 25 மட்டுமே இயங்குகிறது. இப்படி ஒரு டூபாக்கூர் கம்பெனியால் எப்படி கோவைக்கு குடிநீரை 24 மணி நேரமும் கொடுக்க முடியும்? இந்த ஒப்பந்தத்தை கூர்ந்து கவனித்தாலே பல்வேறு மோசடிகளுக்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டிருப்பது புரியும். 100 சதவிகிதம் காஸ்ட் ரெக்கவரிக்காக (உடிளவ சுநஉடிஎநசல) இந்த ஒப்பந்தம் சூயஸ் நிறுவனத்திடம் கொடுக்கப்படுகிறது என்கின்றனர். ஆனால் 2015 ஆம் ஆண்டு உலக வங்கி செய்திருக்கும் ஆய்வின்படி ஏற்கனவே 172 சதவிகிதம் காஸ்ட் ரெக்கவரி இருக்கிறது. 172 சதவிகிதத்தை நூறாக எதற்காக குறைக்க வேண்டும். அதில் பிரிட்டிஷ் காலத்தில் போடப்பட்ட குழாய்களை மாற்ற வேண்டும் என அதற்கான செலவும் கணக்கிடப்பட்டு தொகை நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது. என்ன கொடுமை என்றால் பில்லூர் குடிநீர் திட்டம்1967 லிலும், சிறுவாணி குடிநீர் திட்டம்1984லிலும் தான் கொண்டு வரப்பட்டது. இந்த திட்டத்திற்கு எங்கே வந்தது பிரிட்டிஷ் கால குழாய்கள். அதுமட்டுமல்ல 1947 சுதந்திரத்திற்கு பிறகு தமிழ்நாடு குடிநீர் வாரியம் மற்றும் கோவை மாநகராட்சி நிர்வாகம் பல முறை குடிநீர் குழாய்களை மாற்றியமைத்திருக்கிறது. இப்படி இருக்கையில் சூயஸ் நிறுவனம் பிரிட்டிஷ் கால குழாய்கள் எங்கே இருக்கிறது என்று கண்டுபிடிக்க கூட முடியாது. ஆக இந்த திட்டத்தின் நோக்கம் கூட்டுக்கொள்ளைக்கே தவிர மக்கள் பயனுக்காக அல்ல என்பது தெளிவாகிறது.
அதுமட்டுமல்ல ஒரு தனியார் நிறுவனம் எந்தவித லாபமும் இல்லாமல் எப்படி சேவை செய்ய முடியும். ஆனால் மாநகராட்சியும், அரசு நிர்வாகமும் லாபமின்றி சேவை நோக்கத்தோடு குடிநீர்வழங்க வேண்டும் என்பதுதானே விதி. அதை ஏன் மாற்ற வேண்டும். காரணம் கூட்டுக்கொள்ளைக்காகத்தான். ஏன் இந்தியாவில் நீரியல் நிபுணர்களே இல்லையா. எதற்காக பிரான்ஸ் நாட்டில் இருந்து சூயஸ் நிறுவனத்தை கொண்டு வர வேண்டும். ஆயிரம் குடிநீர் இணைப்புகளுக்கு 1.18 ஊழியர்களே இருக்கின்றனர். இது சர்வதேச மதிப்பீட்டு அளவில்இருக்க வேண்டிய எண்ணிக்கையை விட மிக மிக குறைவானதாகும். உரிய அளவில் ஊழியர்களை போட்டு வேலை வாங்கவக்கில்லாதா அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கமிஷனுக்காகசூயஸ் நிறுவனத்திடம் சிறுவாணியை ஒப்படைத்திருக்கிறார் என்பதே குற்றச்சாட்டு. மறுக்க முடியுமா? ஒப்பந்தம் முடிந்து பலமாதங்களுக்கு பின்னர் வெளியிட்டிருக்கும் ஒப்பந்த ஆவணத்தில் கூட பல இடங்கள் வெள்ளையாக இருக்கிறது. உதாரணமாக செட்டியுல்ட் 1ல் 120 பக்கம் இணைக்கப்பட வேண்டிய வரைபடம் இன்றி காலியாக இருக்கிறது. இது எப்படி முழுமையான ஆவணமாக இருக்க முடியும்?. இப்படி ஒப்பந்தம் முழுவதும் ஏகப்பட்ட ஓட்டைகள் இருக்கிறது. சுருக்கமாக சொல்வதென்றால் ஊழல் செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு ஆவணமாகவே இது இருக்கிறது.
இதன் பின்னணியில் என்னநடந்திருக்கும். பெரிய அண்ணன்மோடி ரபேல் போர் விமான பேரத்தை பிரான்ஸ் நிறுவனத்துடன் நடத்தி மிகப்பெரிய ஊழலில்சிக்கியிருக்கிறார். அதே போல் சின்ன அண்ணன்கள் எடப்பாடி, எஸ்.பி.வேலுமணி அதே பிரான்சை சேர்ந்த சூயஸ் நிறுவனத்திடம் மோசடி ஒப்பந்தம்செய்து ஊழலில் ஈடுபட்டிருக்கின்றனர். ரபேல் ஒப்பந்தத்தில் பொதுத்துறை நிறுவனமாக எச்ஏஎல் புறக்கணிக்கப்பட்டு ரிலையன்ஸ்நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது. சூயஸ் ஒப்பந்தத்தில் குடிநீர் வடிகால் வாரியம் புறக்கணிக்கப்பட்டு பிரென்ச் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. மேக் இன் இந்தியா, சுதேசி என பேசி வரும் பாஜக, அதிமுக கூட்டணி ஊழலுக்காக பிரான்ஸ் நாட்டு நிறுவனங்களுடன் கை கோர்த்து இருக்கிறது. இது போதாது என்று நம் வீட்டு போர்வெல் குழாயில் இருந்து எடுக்கும் தண்ணீருக்கும் இனி கட்டணம் செலுத்த வேண்டும் என மோடி அரசு உத்தரவிட்டிருக்கிறது. வரும் ஜூன் மாதம் முதல் இந்த கட்டணம் நடைமுறைக்கு வரும் என ஆட்சிமுடிவதற்கு முன் அவசர அவசரமாக இந்த ஆணையை பிறப்பித்திருக்கிறார் மோடி. நம் வீட்டுஇடத்தில் நாம். பணம் செலவழித்து போர் போட்டு, மின்கட்டணத்தை நாம் செலுத்தி, நம் வீட்டு தண்ணீரை நாம் எடுத்து பயன்படுத்த எதற்காக மோடி அரசிற்கு கட்டணம் செலுத்த வேண்டும்? இந்த மோசடி கூட்டத்தை விரட்டியடித்திட வேண்டாமா?. சிந்தித்து பாஜகவை விரட்டி, விரட்டி தோற்கடிப்போம்...
- எம்.கண்ணன்.