tamilnadu

img

41 ஆக இருந்தது 39 ஆக குறைப்பு.... இதுவரை 28 எம்.பி.க்களை இழந்த தமிழ்நாட்டிற்கு ஏன் ரூ.5600 கோடி இழப்பீடு வழங்கக்கூடாது? ஒன்றிய அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி....

சென்னை:
எம்.பி.க்களின் எண்ணிக்கையைக் குறைத்ததற்காக, இதுவரை 28 எம்.பி.க்கள்எண்ணிக்கையை இழந்த தமிழ்நாட்டிற்கு ஏன் ஒன்றிய அரசு 5600 கோடி ரூபாய் இழப்பீடு வழங்கக் கூடாது என்று சென்னைஉயர்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தென்காசி நாடாளுமன்றத் தொகுதி யின் தனி தொகுதி அந்தஸ்தை ரத்து செய்துபொது தொகுதி ஆக்க வேண்டும் என்று கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் கூறுகையில், 1967 ஆம் ஆண்டு 41 தொகுதிகளாக இருந்த தமிழ்நாடு மாநிலத்தின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை, அதன் பின்னர் 39 தொகுதிகளாக குறைக்கப்பட்டுள்ளது. மக்கள் தொகையின் அடிப்படையில் இந்த தொகுதிகள் குறைக்கப்பட்டதாக சொல்லப்படும் காரணம் ஏற்புடையதாக இல்லை. ஒன்றிய அரசின் குடும்பக் கட்டுப்பாட்டு திட்டத்தை சிறப்பாக செயல்படுத்தியதற்காக மாநிலங்களை தண்டிப்பது போல் உள்ளது என்று தெரிவித்தனர்.மேலும் இனி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பை காரணம் காட்டி தற்போதுள்ள 39 உறுப்பினர்களின் எண்ணிக்கையையும் குறைக்காமல் இருக்கவும் மீண்டும் 41 தொகுதிகளாக உயர்த்தவும் அரசியல் கட்சிகள் தங்கள் கருத்தை தெரிவிக்கக்கோரி நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.1967 ஆம் ஆண்டுக்குப் பின் இதுவரை 14 முறை நடந்த பொதுத் தேர்தலில்தலா இரண்டு தொகுதிகள் வீதம் மொத்தம் 28 நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை இழந்திருப்பதால், உத்தேச இழப்பீட்டுத் தொகையாக தலா 200 கோடி வீதம் மொத்தம் 5600 கோடி ரூபாய் ஒன்றிய அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க முன் வருமா? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்.  

மக்கள் தொகை அடிப்படையில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை குறைக்காமல், தற்போதுள்ள எண்ணிக்கையை நிலை நிறுத்த ஒன்றிய அரசுக்கு உள்ள திட்டம் குறித்து நான்கு வாரங் களுக்குள் விளக்கமளிக்க வேண்டும் என்றுஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர்.