உத்தரவு நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை – சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘அண்ணாத்த’ திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியிடப்படுகிறது. இந்த படத்தை டைரக்டர் சிவா இயக்கியுள்ளார். அண்ணன், தங்கை பாசப் பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், சூரி, சதீஷ் உள்பட பலர் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் சன் பிக்சர்ஸ் சார்பில் அண்ணாத்த படத்தை சட்ட விரோதமாக இணையதளங்களில் வெளியிட தடை விதிக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த படத்தை இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்ட விரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்ப்புள்ளதாகவும், இந்த படத்தை இணையதளங்களில் வெளியிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்று மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மேலும் இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதி ஜெயச்சந்திரன், அண்ணாத்த திரைப்படைத்தை சட்டவிரோதமாக வெளியிட தடை விதித்து இணையதளங்கள் மற்றும் இணையதள சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார்.