tamilnadu

img

மேகதாது தடுப்பணை விவகாரம்: கர்நாடகாவின் முயற்சியை முறியடிப்போம்.. சட்டப்பேரவையில் துரைமுருகன் உறுதி....

சென்னை:
மேகதாதுவில் அணை கட்டுவதற்கு கர்நாடக அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் தடுத்து நிறுத்தி தமிழ்நாட்டின் உரிமை நிலைநாட்டப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் மானியக்கோரிக்கைகள் மீதான விவாதம் திங்களன்று(ஆக.23) தொடங்கியது. முதல் முறையாக மூத்த அமைச்சர் துரைமுருகன் பொறுப்பு வகிக்கும் நீர்பாசனத்துறை மானியக்கோரிக்கை தாக்கல் செய் யப்பட்டது.அப்போது உரையாற்றிய அமைச் சர் துரைமுருகன்,“நீரின்றி அமையாது உலகு” என்ற வள்ளுவரின்வாக்குக்கேற்ப, பொதுப்பணித்துறை என்ற பழம்பெரும் மாளிகையிலிருந்து நீர் மேலாண்மைக்கென தனியாக ‘நீர்வளத்துறை’ என பெயரிட்டு வெளியுலகத்திற்கு முதன்முறையாக கொண்டுவந்த முதலமைச்சருக்கு இத்துறை தன் வணக்கத்தையும் நன்றியையும் தொழுத கையோடு” தெரிவித்துக்கொள்கிறது என்றார்.

கர்நாடகத்திடமிருந்து கடந்த ஜூன் மாதம் 1 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 11 ஆம் தேதி வரைக்கும் பில்லிகுண்டுலுவில் 42.397 டிஎம்சி தண்ணீர்பெற்றுள்ளோம். உச்சநீதிமன்ற தீர்ப்பின் படி 56.734  டிஎம்சி தண்ணீர் பெற்றிருக்க வேண்டும். எனவே, நிலுவையிலுள்ள 14.337 டிஎம்சி தண்ணீரும் கிடைப்பதற்கு தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறது என்றும் அமைச்சர் கூறினார்.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உத்தேசித்துள்ளதை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் நடவடிக்கைகளையும் சுட்டிக்காட்டியதோடு, மேகதாது மட்டுமல்ல வேறு எந்த ஒரு இடத்திலும் காவிரி நடுவர் மன்ற இறுதி ஆணை மற்றும் உச்சநீதிமன்ற தீர்ப்பு ஆகியவற்றை மீறும் வகையில் அணையை கட்டுவதற்காக கர்நாடக அரசு மேற்கொள் ளும் முயற்சிகளை தடுத்து நிறுத்துவதுடன் தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கவும் அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

முல்லைபெரியாறு: கேரளாவுடன் பேச்சு
முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் ஜூன் 2000 ஆம் ஆண்டு துண்டிக்கப்பட்ட மின் இணைப்பை மீண்டும் வழங்குவதற்கு கேரள அரசு தனது இசைவு தெரிவித்துள் ளது. அதன்படி, ரூ.1, 78,47,035 தமிழ் நாடு அரசால் கேரளா மின்வாரியத்துக்கு செலுத்தப்பட்டது. இதனைத் தொடர்ந்து, 1.2.21 அன்று மின் இணைப்பு வழங்கப்பட்டதையும் பராமரிப்பு பணிகளுக்கான கட்டுமானப்பணிகளை தொடங்கவும் கேரளா அரசு அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடத்த கூறியுள்ளதையும் அதன்படி  ஒப்புதல் பெறப்பட்டதும் பணிகள் தொடங்கப்படும் எனவும் அமைச்சர் கூறினார்.

முல்லைபெரியாறு அணையின் நீர்மட்டத்தை முழுக்கொள்ளளவான 152 அடி வரை உயர்த்துவதற்கு மேற் கொள்ளப்பட வேண்டிய எஞ்சிய பலப்படுத்தும் பணிகள் குறித்து கேரள அதிகாரிகளுடன் கூடுதல் தலைமை செயலாளர் மட்டத்தில் விரைவில் கூட்டம் நடைபெற உள் ளது. அந்த கூட்டத்தில் முல்லைபெரியாறு பிரச்சனைகள் குறித்து விவாதிக்கப்படும் என்றும் அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.விவசாயிகள் பயன்பெறும் வகையில் மாநிலம் முழுவதும் தொடர் அணைகள் அமைக்கும் திட்டம், காவிரி கொள்ளிடம் மற்றும் தாமிரபரணி ஆறுகளின் குறுக்கே கதவணைகள் அமைக்கவும் உத்தேசிக் கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.நீர்வள ஆதாரங்கள், நீடித்த நிலையான வளர்ச்சி இலக்குகள், பன்மாநில நதிநீர் பிரச்சனைகள், பாலாறு நதிநீர் பிரச்சனை, பரம்பிக் குளம்-ஆழியாறு திட்டம், செண்பகவல்லி அணை சீர்அமைத்தல், பெண்ணையாறு, பாண்டியாறு-புன்னம்புழா திட்டம், காவிரி அக்னியாறு-தெற்குவெள்ளாறு-மணிமுத்தாறு-வைகை-குண்டாறு இணைப்பு கால்வாய், தாமிரபரணி கருமேனியாறு நம்பியாறு இணைப்பு திட்டங்களின் முன்னேற்றம் குறித்த தொடர் நடவடிக்கைகள் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார்.